Sunday, April 4, 2010

எழுந்தது பா.ம.க வீழ்ந்தது அ.தி.மு.க‌


பென்னாகரம் இடைத் தேர்தலில் எதிர்பார்த்தது போன்று திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பென்னாகரம் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மூன்றாவது இடத்துக்குத் தள்ளிய பாட்டாளி மக்கள் கட்சி, இரண்டாவது இடத்தைப் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பென்னாகரம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் பம்பரமாகச் சுழன்று தேர்தல் பிரசாரம் செய்ததற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு பென்னாகரம் இடைத் தேர்தல் முடிவு தெம்பை அளித்துள்ளது. பென்னாகரத்தில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பது பாட்டாளி மக்கள் கட்சியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமா என்ற போட்டியே மேலோங்கி இருந்தது. பென்னாகரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மூன்றாவது இடத்துக்குத் தள்ளியதன் மூலம் வன்னியர் சமூகத்தின் தலைவர் என்பதை டாக்டர் ராமதாஸ் நிரூபித்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சியினாலும் ஒதுக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலம் இனி அவ்வளவுதான் என்று நினைத்தவர்களை பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவு சிந்திக்கத் தூண்டியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால் சில வேளை வெற்றி பெற்றிருக்கலாம். பேரம் பேசும் பலத்தை இழந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி பேரம் பேசும் வலுவைப் பெற்றுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் 88,699 வாக்குகளையும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் 41,285 வாக்குகளையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் 26,787 வாக்குகளையும் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் 11406 வாக்குகளையும் பெற்றனர். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் 36,384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றின் துணையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சியஸ்ட்கட்சி, கம்யூனிஸ்ட்கட்சி ஆகியவற்றின் துணையுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது. எந்தவொரு கட்சியின் துணையும் இன்றி தனித்து இடைத் தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. பென்னாகரத்தில் வன்னியர் அதிகமாக இருப்பதாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை என்பதாலும் பாட்டாளி மக்கள் கட்சி சாதனை செய்துள்ளது.
பென்னாகரத்தில் தோல்வி அடைந்த வேட்பாளர்களில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரைத் தவிர ஏனைய அனைவரும் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி, தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி, தமிழகத்தில் எதிர்க்கட்சி என்ற பெருமைகளைக் கொண்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கட்டுப் பணத்தை இழந்தது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2001 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சந்தித்த சகல தேர்தல்களிலும் தோல்வியடைந்து மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
எம்.ஜி.ஆர். இருக்கும் வரை தோல்வியையே சந்திக்காத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவின் தலைமையில் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. தோல்விக்கான காரணத்தைக் கண்டறிந்து கட்சியை வளர்ப்பதில் ஜெயலலிதா கவனம் செலுத்துதல் வேண்டும். கட்சியை வளர்ப்பதற்குரிய ஏற்பாட்டை ஜெயலலிதா செய்யத் தவறினால் கட்சியில் இருக்கும் பலர் திராவிட முன்னேற்றக் கழகம் விரித்திருக்கும் வலையில் தாமாகவே வீழ்ந்து விடுவார்கள்.
பென்னாகரம் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அழகிரியின் பேட்டி சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் கருணாநிதிக்குப் பின்னர் கட்சியின் தலைவர் ஸ்டாலின் தான் என்பதை இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக சஞ்சிகை ஒன்றுக்குப் பேட்டி வழங்கிய அழகிரி கருணாநிதியைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார். அழகிரியின் இந்தப் பேட்டியின் மூலம், அடங்கிப்போயிருக்கும் வாரிசுப் பிரச்சினை மீண்டும் தலை தூக்கி விட்டதோ என்ற சந்தேகம் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
ஸ்டாலினின் தலைமையை அழகிரி ஏற்றுக் கொள்ள மாட்டார் என்ற கருத்து நிலவுகிறது. அழகிரி பக்கமா ஸ்டாலின் பக்கமா தமிழக முதல்வர் நிற்பார் என்ற கேள்வி அவ்வப்போது எழுவதுண்டு. இந்தக் கேள்வி எழும்போதெல்லாம் பட்டும் படாமலும் பதிலளித்து தப்பி விடுவார் முதல்வர் கருணாநிதி.
அழகிரியின் பேட்டி பற்றி பத்திரிகையாளர்கள் வினவியபோது, அது அழகிரியின் கருத்து என்று முதலில் கூறிய முதல்வர் கருணாநிதி, கட்சியின் தலைவரை நியமிப்பது தனி ஒருவரின் முடிவு அல்ல, கட்சியின் தலைவரை கட்சிதான் தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார். ""நானோ அழகிரியோ கட்சித் தலைவரை நியமிக்க முடியாது'' என்று நாசூக்காக பதிலளித்துள்ளார்.
கட்சிக்குள் ஸ்டாலினுக்குத்தான் செல்வாக்கு அதிகம். ஆகையினால் ஸ்டாலின் தலைவராவது உறுதியென்பதை மறைமுகமாக உணர்த்தி உள்ளõர் முதல்வர் கருணாநிதி.
பென்னாகரம் இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழக எதிர்ப்பாளர்கள் கொஞ்சம் அடங்கிப் போயுள்ளனர். தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற கனவில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள் சிலர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியினால் கதி கலங்கிப் போயுள்ளனர்.
பென்னாகரத்தில் பணமும் அன்பளிப்பும் தாராளமாக கைமாறப்பட்டதாக சகல கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழக சட்ட சபைத் தேர்தல்களிலும் வாக்களித்தவர்களை விட அதிகமானவர்கள் இந்த இடைத்தேர்தலில் வாக்களித்துள்ளனர். இடைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வாக்களித்தார்களா அல்லது கட்சிகளின் தூண்டுதல்களினால் வாக்களித்தார்களா என்ற சந்தேகமும் உள்ளது. தேர்தல் விதிமுறைகளை சகல கட்சிகளும் மீறியுள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
மீண்டும் எழுந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி, பலமானதொரு கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் வாய்ப்பு பிரகாசமாகும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. தோல்விக்கு மத்தியிலும் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது.
படுபாதாளத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வீழ்ந்ததினால் திராவிட முன்னேற்றக் கழகம் விரிக்கும் வலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் விழாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜெயலலிதாவுக்கு உள்ளது.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 04/04/10

No comments: