திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டும், விஜயகாந்துடன் இணைந்து போட்டியிட வேண்டும், ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கருத்தை தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வந்தனர். விஜயகாந்தும் ஜெயலலிதாவும் நெருங்கி வருவதனால் சகல பிரச்சினைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு கூட்டணியைப் பலப்படுத்த வேண்டிய இக் கட்டான நிலைக்கு இரண்டு கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன ஓரணியில் நிற்பது ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. இக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் சேர்வதற்கு துடிக்கிறது. மறுபுறத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிக் கட்சிகள் ஆகிய உள்ளன. விஜயகாந்தின் வருகையைப் பெரிதும் எதிர்பார்த்திருக்கிறது இக் கூட்டணி.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தமிழகத் தேர்தலில் போட்டியிட்டபோது எந்தக் கட்சிகளைச் சேர்ப்பது ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்ட பங்கீடு என்பனவற்றை கருணாநிதியே கையாண்டார். சோனியா காந்தியும் ஏனைய டெல்லி, தலைவர்களும் இந்த விடயத்தில் தலையிடாது கருணாநிதிக்கு பூரண சுதந்திரம் கொடுத்தனர். ஆனால், தமிழகத் தேர்தலின் போது அப்படி ஒரு நிலை ஏற்படுவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்குள் வலுப்பெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளையும் தமிழக அரியாசனத்தில் அமர்த்தி விட்டுத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்த காலம் மலை ஏறிவிட்டது. காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களாக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் அதிகதொகுதிகளைக் கொடுத்து ஆட்சியிலும் பங்கு கொடுக்க திராவிட முன்னேற்றக் கழக தயாராக இல்லை. காங்கிரஸ் கடசிக்கு ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சியே உள்ளே கொண்டு வரும் முனைப்பில் உள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டணி பற்றி தமிழகக் காங்கிரஸின் தலைவர்கள் ஆளுக்கொரு கருத்தைக் கூறிவருகின்றனர். சோனியா காந்தியுடன் விரிவாகக் கதைத்து உறுதியாக முடிவெடுப்பதற்கு கருணாநிதி தயாராகி விட்டார்.
உள்துறை அமைச்சர்களின் மாநாட்டுக்காக அடுத்த மாதம் டெல்லி செல்லும் முதல்வர் கருணாநிதி சோனியாகாந்தி மன்மோகன்சிங் ஆகியோரைச் சந்தித்து கூட்டணிபற்றிய முதல் கட்டப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகச் சட்டமன்றத்தேர்தலின் போது சோனியா, மன்மோகன்சிங், ராகுல் காந்தி ஆகியோர் திராவிடமுன்னேற்றக்கழக மேடைகளில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி விரும்புகிறார்.
தமிழகத்துக்குப் பல தடவை விஜயம் செய்த ராகுல் காந்தி ஒருமுறை கூட தமிழகமுதல்வரைச் சந்திக்கவில்லை. தமிழக விஜயங்களின் போது முதல்வர் கருணாநிதியையும் திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்களையும் சந்திப்பதை திட்டமிட்டே தவிர்த்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு நிலை இன்னமும் தொடரக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. டில்லி விஜயத்தின் போது ராகுல் காந்தியுடனான பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன் உரிமை எடுக்கப்படும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் நிலவிய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது போல் தெரிகிறது. கட்சிக்குள் உள்ளவர்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கிய ஆழகிரி அடங்கி விட்டார்போல் தெரிகிறது. ராசாவை வெளியேற்றவேண்டும், கட்சிக்குள் தனக்கு முக்கியபதவி வேண்டும் என்று அழகிரி வேண்டுகோள் விடுத்ததாக செய்திகள் வெளியாகின. அப்போதெல்லாம் அமைதியாக இருந்த அழகரி இப்போது வாய்மலர்ந்து அப்படிப்பட்ட கோரிக்கைகள் எதனையும் தான் முன்வைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படமுயற்சிக்கும் இவ்வேளையில் காங்கிரஸில் திராவிட முன்னேற்றக்கழகமும் தமக் கிடையேயுள்ள முரண்பாடுகளை பெரிதாக்க விரும்பவில்லை. கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளையும் அவை விவாதிக்க விரும்பவில்லை. அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் அடிக்கடி போர்க்குரல் எழுப்பும் அழகிரியும் அமைதியாகி விட்டார் கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தினால் எதிர்க்கட்சிகளுக்கு அல்வா கிடைத்தது போலாகிவிடும் என்பதை அழகிரி உணர்ந் துள்ளார். கழகத்தில் ஆட்சியைப் பறிகொடுத்தால் ஜெயலலிதாவின் விஸ்வரூபம் எப்படி இருக்கும் என்பது சகலரும் அறிந்த ஒன்று.
கருணாநிதி மாறன் குடும்பங்களில் அரசியல் வாழ்வு மட்டுமல்ல வியாபார நிலையங்களில் அனைத்திலும் கை வைத்து விடுவார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடமிருந்து தப்புவதற்கு ஒரேவழி ஆட்சியைத் தக்கவைப்பதுதான். அதற்கான விலையைக் கொடுப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகிவிட்டது.
சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்லாத மோசமான கலாசாரம் ஒன்று தமிழகத்தில் உள்ளது. கருணாநிதி முதல்வராக இருக்கும்போது சட்டசபைக்குச் செல்வதில்லை என்று ஜெயலலிதா சத்தியப்பிரமாணம் செய்தது போல் நடந்து கொள்கிறார். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி சட்டசபைக்குச் செல்லவில்லை. இதே உரிமையை விஜயகாந்தும் பின்பற்றுகிறார்.
ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சட்டசபைக்குச் சென்று ஒருவருடத்துக்கு மேலாகி விட்டது. சட்டசபைக்கு தொடர்ந்து செல்லாத உறுப்பினர்களின் பதவியைப் பறிப்பதற்கு சட்டத்தில் இடம் உண்டு. ஜெயலலிதா விஜயகாந்த் ஆகியோர் பதவிகளைப் பறித்தால் எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் பிரமாண்டமான போராட்டங்களை நடத்தி அதனை தமக்குச் சாதகமாக்கி விடும் எனப் பயந்த திராவிடமுன்னேற்றக் கழகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற குறுகிய காலமே உள்ள இவ்வேளையில் எதிர்க்கட்சிகள் அதனைத் தமது தேர்தல் பிரசாரத்தின்போது சாதகமாகப் பயன்படுத்துவர் என்பதால் அவர்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காதுள்ளது தமிழக அரசாங்கம்.
தமிழகம் எங்கும் சூறாவளியாக சூழன்று அரசாங்கத்தை எதிர்த்து கூட்டம் நடத்தும் ஜெயலலிதா, விஜயகாந்த் மேடைகளில் அனல்பறக்கப் பேசுகிறார். ஆனால், தமிழக சட்டசபைக்குச் சென்று அரசாங்கம் விடும் தவறுகளைக் கேட்பதற்கு தயங்குகிறார்கள். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் சட்டசபைக்குச் செல்லாததினால் தம் சொந்தமக் களின் எதிர்பார்ப்பை பொய்யாக்குகிறார்கள்.
இந்திய அமைச்சரவை மாற்றத்தின் போது இராஜினாமாச் செய்த ராசாவுக்குப் பதிலாக டி.ஆர். பாலு அமைச்சராக்கப்படலாம் என்ற செய்தி பிரபல்யமாக வெளியானது. புதிய அமைச்சரவையில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடம் வழங்கப்படவில்லை. திராவிட முன்னேற்றக்கழகம் இதணைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவுமில்லை.
அமைச்சர் பதவி பெற்றால் தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதால், அமைச்சுப் பதவி பெறுவதில் திராவிட முன்னேற்றக் கழகம் அதிக ஆர்வம் காட்டவில்லை.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 23/01/11
2 comments:
நல்லா இருக்கு! விடை இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் தெரிந்து விடும்!
இப்பவேகளைகட்டிட்டுது
அன்புடன்
வர்மா
Post a Comment