தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் ஆரம்பித்த பிரச்சினை மனக் கசப்புக்களுடன் முடிவுக்கு வந்தது. இப்போது கட்சிகளுக்குள்ளேயே பூகம்பம் வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் இப்பூகம்பம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொகுதியில் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காற்றிய தங்க பாலுவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் களமிறங்கியுள்ளனர். தமிழக சட்ட சபைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிடுபவர்களின் பெயர் விபரங்கள் மேலிடத்துக்கும் அனுப்பப்பட்டது. அந்தப் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் நிராகரித்து மீண்டும் ஒரு பெயர், விபரம் அனுப்பப்பட்டது. இரண்டாவது பட்டியலும் நிராகரிக்கப்பட்டது. தமிழக சட்ட சபைத் தேர்தலில் புதியவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று சோனியா விரும்பினார். இதன் காரணமாக பழையவர்கள் கலங்கினார்கள். புதியவர்கள் அகமகிழ்ந்தார்கள். ஆனால், மூன்றாவதாக வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியலில் பழையவர்களும் அவர்களது வாரிசுகளும் உறவினர்களும் அதிகம் இடம்பிடித்தனர். தங்கபாலுவின் மனைவி தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மனைவிக்கு இடம்பிடித்தார் தங்கபாலு. தங்கபாலு தேர்தலில் போட்டியிடாது மனைவிக்கு விட்டுக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. தங்க பாலுவின் மனைவி கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட செய்தி தங்கபாலுவின் எதிரிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதே தொகுதியில் மாற்று வேட்பாளராகக் களமிறங்கிய தங்க பாலுவின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதை அறிந்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மாற்று வேட்பாளராகக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் வேட்பு மனுத் தாக்கல் செய்வது தான் வழமை. ஆனால், மனைவிக்கு மாற்று வேட்பாளராக தங்கபாலு களமிறங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகச் சரியாக நிரப்பப்பட்ட வேட்புமனுவில் தங்க பாலுவின் மனைவி கையெழுத்திடாததனால் அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இது தெரியாமல் செய்த தவறா கணவனுக்காக தெரிந்து செய்த தவறா என்ற சந்தேகம் உள்ளது. காங்கிரஸ் திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் போட்டி வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர். போட்டி வேட்பாளர்களினால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. என்றாலும், கட்சியின் கட்டுக் கோப்புக் குலைந்துள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூன்று தலைவர்களும் பாதுகாப்பான தொகுதியில் போட்டியிடுகிறார்கள். கருணாநிதி தனது சொந்தத் தொகுதியான திருவாரூரில் போட்டியிடுகிறார். தலைவரின் தொகுதி என்பதால் பெருமை பெற்றிருக்கும் அவரை திருவாரூர் அவரைக் கைவிடாது என்ற நம்பிக்கை உள்ளது. ஜெயலலிதா திருச்சியில் போட்டியிடுகிறார் எனது பூர்வீகம் திருச்சியில் தான் என்று அடித்துக் கூறி வாக்குச் சேகரிக்கிறார் ஜெயலலிதா. மாமனாரின் தொகுதியான ரிஷி பந்தியத்தில் போட்டியிடுகிறார் விஜயகாந்த். மாமனாரின் தொகுதி மாப்பிள்ளையைத் தூக்கிக் கொண்டாடும் என்று எதிர்பார்க்கிறார்கள் தொண்டர்கள். தமிழக அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கி இடம் மாறியுள்ளது. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கிராமப் புற மக்களின் வாக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. நகர்ப்புற மக்கள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்தனர். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ் கட்சி, இந்திய மாக்சிஸ்ட் கட்சி ஆகியவற்றின் துணையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று வந்தது. தமிழக வாக்காளர்களின் மனநிலை தற்போது தலைகீழாக மாறிவிட்டது. நகர்ப்புற மக்கள் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தையும் கிராமப்புறங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் ஆதரிக்கிறார்கள். ஸ்பெக்ரம், இலஞ்சம், குடும்ப அரசியல், பெற்றோல், காஸ் போன்றவற்றின் விலை உயர்வு, மின் வெட்டு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட நகர்ப்புற மக்கள் அண்ணா திராவிட முன்னேற்றத்தின் பக்கம் தமது பார்வையைத் திருப்பியுள்ளனர். ஒரு கிலோ அரிசி, பொங்கல் பரிசு, இலவச வேட்டி சால்வை குறைந்த விலையில் மானியப் பொருட்கள் என்பன கிராமப் புறத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை உயர்த்தியுள்ளது. மாணவர்களுக்கு இலவச லப்டொப், வயதானவர்களுக்கு பஸ் பயணத்துக்கு இலவச பஸ் பாஸ் போன்ற அதிரடித் திட்டங்களினால் வாக்காளர்களின் மனதைத் தன்பால் கவர்ந்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலவசங்களினால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஸ்பெக்ரம் ஊழல், வாரிசு அரசியல், பெற்றோல் விலை உயர்வு என்பன கிராமத்தில் உள்ளவர்களைப் பாதிக்கவில்லை. இலவசங் களும் சலுகைகளும் அவர்களுடைய கண்களை மறைத்து விட்டன. திராவிட முன்னேற்றக் கழக அரசு வழங்கிய இலவசங்களும் சலுகைகளும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததனால் ஜெயலலிதாவும் இலவசங்களை வழங்கப் போவதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி வழங்கியுள்ளார். இலவச சலுகைகளையும் தமிழக அரசின் வருமானத்தில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி ஜெயலலிதா வெற்றி பெறுவதற்காக இலவசங்களை வழங்க உறுதியளித்துள்ளõர். தமிழகத்தில் செல்வாக்கை இழந்துள்ள பாரதீய ஜனதா கட்சியும் வாக்காளர்களைக் கவர்வதற்காக இலவசமாக சிலவற்றை வழங்க உத்தரவாதமளித்துள்ளது. தமிழக அரசின் கொள்கை, சாதனை பொருளாதார முன்னேற்றம் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு புதிய அரசாங்கம் வழங்கப் போகும் இலவசப் பொருட்களுக்காக தமிழக மக்கள் வாக்களிக்கப் போகும் நிலை தோன்றியுள்ளது. வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுத்து வாக்குப் பெறுவது சட்டப்படி குற்றம். ஆனால், இலவசம் என்ற இலஞ்சத்தைத்தரப் போவதால் அரசியல் கட்சிகள் வாக்களிப்பதற்கு முன்னரே உறுதியளித்துள்ளன. பொருளாதாரம், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கல்வி என்பன புறந்தள்ளிவிட்டு இலவசமாகப் பொருட்கள் வேண்டுமானால், எங்களுக்கு வாக்களியுங்கள் என்று அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் இரந்து வேண்டுகின்றனர். வருமானம் குறைந்த கிராமத்து மக்கள் சில பொருட்களை இலவசமாகப் பெறுவதை விரும்புகின்றனர். அவர்களின் பலவீனத்தில் ஆட்சி பீடத்தில் ஏற அரசியல் தலைவர்கள் துடிக்கின்றனர். தமிழகத்தில் சுமார் 60 தொகுதிகள் நகர்ப்புறத்தை அண்டியுள்ளன. ஏனைய தொகுதிகள் அனைத்தும் கிராமத்திலேயே உள்ளன. வீடு வீடாகச் சென்று வாக்குப் பிச்சை கேட்கிறார் வேட்பாளர். ஆனால், தமிழக அரசியல் கட்சிகளோ வாக்காளர்களைப் பிச்சைக்காரர்களாக நினைத்து அவர்களுக்கு இலவசம் என்ற மாயையே காட்டுகிறது. வர்மா வீரகேசரிவாரவெளியீடு03/04//11
No comments:
Post a Comment