தமிழக சட்டமன்றத் தேர்தல் எதுவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக முடிவடைந்தது. தமிழகத்தில் இதுவரை காலமும் இல்லாத வகையில் 77.4 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்.
அதிகளவான வாக்குகள் தேர்தலில் பதிவானால் ஆளும் கட்சிக்கு பாதகமானதாக அமையும் என்பது கடந்த தேர்தல்களின் போது நிரூபணமானது. திருமங்கலம் இடைத்தேர்தலில் அதிகளவானோர் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
அந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அமோகமாக வெற்றியைப் பெற்றõர். பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாவது இடத்தையும் தமிழக எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தையும் பெற்றன.
மிக அதிகபட்சமாக கரூரில் 86 சதவீதமும் கன்னியாகுமரியில் 68.1 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீ ரங்கத்தில் 80.9 சதவீதமும், விஜயகாந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியத்தில் 78 சதவீதமும், கருணாநிதி போட்டியிட்ட திருவாரூரில் 75 சதவீதமும் ஸ்டாலின் போட்டியிட்ட கௌத்தூரில் 68 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகளவான வாக்குப் பதிவு, எந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை கணிக்க முடியாமலுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் வாரி வழங்கிய இலவசங்களும், சலுகைகளும் தொடர்ந்து கிடைக்க வேண்டும். ஆட்சி மாறினால் இதுவரை அனுபவித்த சலுகைகள் இல்லாமல் போய் விடும் என்ற பயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக அதிகமானோர் வாக்களித்திருக்கலாம்.
அல்லது குடும்ப அரசியல், ஊழல், விலை வாசி உயர்வு என்பனவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அதிகளவில் வாக்களித்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
தமிழக சட்ட சபைக்கான கருத்துக் கணிப்புகள் இரண்டு வகையாக வெளிவந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று சில கருத்துக் கணிப்புக்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று சில கருத்துக் கணிப்புகளும் வெளிவந்தன.
ஆனால் இரண்டு கட்சிகளும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்ததை நோக்கும் போது கருத்துக் கணிப்புகள் சறுக்கி விடும் போல் தெரிகிறது. பக்கம் சாராத வாக்காளர்கள் தமது மௌனப் புரட்சியை வெளிப்படுத்தி விட்டனர்.
தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது நடத்தப்பட்ட திடீர் சோதனைகளின் போது 45 கோடி ரூபா பெறுமதியான பொருட்களும் பணமும் கைப்பற்றப்பட்டன. இவற்றில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததனால் ஐந்து கோடி ரூபா திரும்ப ஒப்படைக்கப்பட்டது. 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1565 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வைகோவின் வலது கரமான மல்லை சத்யாவின் பேச்சு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஜெயலலிதாவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினை காரணமாக வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலைப் புறக்கணித்தது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் பாடம் புகட்டும் என்று மல்லை சத்யா கூறியது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது.
மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிடவில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் தொண்டர்களும் தேர்தலில் வாக்களித்தனர். தமிழகத்தில் சுமார் ஆறு சதவீத வாக்கு வங்கியை வைத்திருக்கும் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் தொண்டர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு இது பாதகமானதாக அமையலாம்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் கார ணிகளாக உள்ளன. அண்டை நாட்டுடனான பிரச்சினையை மத்திய அரசுதான் தீர்த்து வைக்க வேண்டும்.
பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், காங்கிரஸ் தலைவி சோனியா ஆகியோருக்கு கடிதம் எழுதுவது தான் எனது வேலை. பிரச்சினையைத் தீர்த்து வைப்பது அவர்களின் கைகளில்தான் உள்ளது என்று கருணாநிதி தெளிவுபடக் கூறித் தப்பி விட்டார். குடும்ப அரசியல், ஸ்பெக்ரம் பிரச்சினை, விலைவாசி உயர்வு என்பவை திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பாதிக்கும் முக்கிய காரணிகள்.
மீனவர் பிரச்சினை யைத் தீர்க்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.
அது மத்திய அரசின் கைகளில் உள்ளது என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்தை மீனவர்கள் ஏற்றார்களா இல்லையா என்பது தேர்தல் முடிவின் பின்னர் தெரியவரும்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சீமானும் தமிழ் ஆர்வலர்களும் பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் இவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தனர்.
சீமானின் பிரசாரம் காங்கிரஸாரைக் கலங்க வைத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு எதிராகவே இவர்கள் பிரசாரம் செய்ததனால் தமக்கு பாதிப்பு ஏற்படாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் ரஜினிகாந்த் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிக்கவில்லை என்பதும் விலைவாசி உயர்வு பற்றி வட இந்திய தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய பேட்டியும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியைக் கொதிப்படைய வைத்துள்ளது.
தேர்தலில் வாக்களித்த பின்னர் பேட்டியளித்த நடிகர் விஜய் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்ற பேட்டியும் திராவிட முன்னேற்றக் கழகத்தை எரிச்சலடைய வைத்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பிரசார மேடையில் விஜய் ஏறுவார் என்ற எதிர்பார்ப்பு இறுதிவரை ஏமாற்றமாகவே இருந்தது. வாக்களித்த பின்னர் அவர் வழங்கிய பேட்டி மனதில் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
அரசியல் வாதிகளினதும் நடிகர் பட்டாளத்தினதும் பிரசாரப் புயல் ஓய்ந்து விட்டது. மக்களின் முடிவு மே மாதம் 13 ஆம் திகதிதான் தெரியும்.
அதுவரை அடங்கி இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அரசியல்வாதிகள். ஐந்து வருடம் ஆட்சி செய்யப் போகிறவர்களுக்கு ஒருமாதம் என்பது மிக நீண்ட நாட்கள்தான்.
அதுவரை பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு17/04//11
No comments:
Post a Comment