தமிழக சட்ட சபைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஏட்டிக்குப் போட்டியான கூட்டங்களும் குற்றச்சாட்டுகளும் தேர்தல் பிரசாரத்தை கலகலப்பாக்கியுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம் தனது சாதனைகளையும் நிறைவேற்றிய திட்டங்களையும் வழங்கிய இலவசப் பொருட்களையும் சலுகைகளையும் பட்டியலிட்டு பிரசாரத்தை மேற்கொள்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு என்பவற்றை எதிர்க்கட்சிகள் தமது பிரசாரத்தில் முன்னிலைப்படுத்துகின்றன. தமிழக சட்ட சபைத் தேர்தலின் நட்சத்திரப் பேச்சாளராக வடிவேல் திகழ்கிறார். வடிவேல் பிரசாரம் செய்யும் கூட்டங்களுக்கு மக்கள் அதிகளவில் கூடுகின்றனர். தமிழக அரசின் சாதனைகளைப் பட்டியலிடும் வடிவேலின் பிரசாரம் விஜயகாந்துக்கு எதிராகவே உள்ளது. நகைச்சுவை நடிகனான வடிவேல் தமிழக சட்ட சபைத் தேர்தலின் கதாநாயகனாக மாறிவிட்டார். வடிவேலின் வரம்பு மீறிய பிரசாரத்தை திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் தலைவர்களும் வெகுவாக ரசிக்கின்றனர். வடிவேலின் தேர்தல் பிரசாரத்துக்குப் பதில் கூறக் கூடிய பேச்சாளர்கள் எவரும் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லாமையால் வடிவேலின் பரம எதிரியான சிங்கமுத்துவைக் களமிறக்கியுள்ளது. அ.தி.மு.க. வடிவேலுக்கு நான் சளைத்தவனல்ல என்ற வகையில் சிங்கமுத்துவின் பேச்சு உள்ளது. விஜயகாந்தைப் பற்றிய வண்டவாளங்களை வடிவேல் எடுத்துக் கூற வடிவேலின் மறுபக்கத்தை சிங்கமுத்து அரங்கேற்றுகின்றார். சிங்கமுத்துவின் தேர்தல் பிரசாரமும் வடிவேலைத் தாக்குவதாகவே உள்ளது. கனல் தெறிக்கும் வசனங்களால் மக்கள் மனதில் இடம்பிடித்து புதிய அரசியல் சமுதாயத்தைத் தோற்றுவித்த திராவிடக் கழகங்கள் வடிவேலையும் சிங்கமுத்துவையும் தேர்தல் பிரசாரத்தில் களமிறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வடிவேலையும் சிங்கமுத்துவையும் பார்ப்பதற்கு மக்கள் கூடுகிறார்கள். அவர்களின் பேச்சுக்கு மக்கள் மதிப்பளித்தார்களா என்பது தேர்தல் முடிவின்போது தெரிந்துவிடும். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒரே ஒரு முறை ஒரு சில மணி நேரம் மட்டுமே சந்தித்துப் பேசினார்கள். பின்னர் இருவரும் சந்திக்கவில்லை. இருவராலும் நியமிக்கப்பட்ட குழுக்களே சந்தித்து தொகுதி பங்கீட்டு முறைகளுக் கான பேச்சுவார்த்தையை நடத்தின. ஜெயலலிதாவும் விஜயகாந்தும் கூட்டணி சேரக் கூடாது என்பதில் ஆளும் தரப்பு உறுதியாக இருந்தது. இருவரும் சேராவிட்டால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெற்று விடும் என்பது வெளிப்படையானது. பல பிரச்சினைகளுக்கு மத்தியிலேதான் ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தார். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒன்றிணைந்ததனால் ஆளும் தரப்பு அச்சமடைந்தது. உண்மையான கொள்கைக்காக இருவரும் இணையவில்லை. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்காகத்தான் இருவரும் இணைந்துள்ளனர் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த இரகசியம். கூட்டணித் தலைவர்கள் அனைவரும் ஒரு கூட்டத்தில் ஒன்றாகப் பேசி பிரசாரம் செய்வார்கள். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒரே மேடையில் ஏறிப் பிரசாரம் செய்ய மாட்டார்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி பிரசாரம் மேற்கொண்டது. கூட்டணித் தலைவர்கள் ஒரே மேடையில் ஏறவில்லை என்றால் தொண்டர்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படாது என்பதனால் இருவரையும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதற்கு கூட்டணித் தலைவர்கள் முயற்சி செய்தனர். மிகுந்த சிரமத்தின் மத்தியில் இறங்கி வந்த ஜெயலலிதா, விஜயகாந்துடன் இணைந்து பிரசாரம் செய்வதற்கு ஒப்புக் கொண்டார். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒரே மேடையில் ஏறும் அரிய காட்சியை காண்பதற்கு தொண்டர்கள் குழுமினார்கள். ஜெயலலிதாவுடன் இணைந்து பிரசாரம் செய்வதற்கு விரும்பாத விஜயகாந்த் கோவையில் நடைபெற்ற அக்கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை வீழ்த்தி, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்புவதற்காகவே கூட்டு சேர்ந்தேன். ஜெயலலிதாவை முதல்வராக்குவது எனது எண்ணம் அல்ல என்பதை தெட்டத் தெளிவாக விளக்கி விட்டார் விஜயகாந்த். ஜெயலலிதாவை விஜயகாந்த் புறக்கணித்தது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் இதய சுத்தியுடன் பணியாற்றுவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா போட்டியிடும் திருச்சியில் தேர்தல் பிரசாரம் செய்த விஜயகாந்த் அங்கு ஜெயலலிதாவின் பெயரைக் கூறி வாக்குக் கேட்கவில்லை. அதேபோல் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியத்தில் தேர்தல் பிரசாரம் செய்த ஜெயலலிதா வேட்பாளரான விஜயகாந்தின் பெயரைக் கூறி தேர்தல் பிரசாரம் செய்யவில்லை. 2001 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியில் காங்கிரஸ் இணைந்திருந்தது. அன்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதாவுடன் சோனியா காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த சோனியா ஏமாற்றத்துடன் சென்றார். இன்று விஜயகாந்துக்காக ஜெயலலிதா காத்திருந்தார் விஜயகாந்த் ஏமாற்றிவிட்டார். ஜெயõ தொலைக்காட்சியில் விஜயகாந்தின் பிரசாரம் ஒளிபரப்புவதில்லை. விஜயகாந்தின் தொலைக்காட்சி ஜெயலலிதாவின் பிரசாரத்தை இருட்டடிப்புச் செய்கிறது. ஒரே கூட்டணிக் கட்சிகள் இரண்டும் ஒன்றையொன்று எதிரியாகப் பார்க்கின்றன. ஆட்சி பீடம் ஏறுமுன்னே ஜெயலலிதா தனது பங்காளியான விஜயகாந்துக்கு முன்னுரிமை வழங்கவில்லை. ஜெயலலிதா அரியாசணத்தில் ஏறினால் விஜயகாந்துக்கு உரிய மரியாதை கொடுக்க மாட்டார். திராவிட முன்னேற்றக் கழக, காங்கிரஸ் கூட்டணி டெல்லி வரை சென்று இழுபறிப்பட்ட பின்னரே சுமுக நிலைக்குத் திரும்பியது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி என்று சோனியா உத்தியோகபூர்வமாக அறிவித்ததும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கருணாநிதியையும் கடுமையாக எதிர்க்கும் இளங்கோவன் தனது பரிபூரண ஆதரவைத் தெரிவித்தார். இரண்டு கட்சித் தொண்டர்களும் உரிமையுடன் கை கோர்த்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வழமைபோல தமக்குள் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படுகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல என்பதை தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்ட கருணாநிதி தமிழகத் தேர்தல் பிரசாரத்தில் சோனியா கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். நிலைமையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட சோனியா தமிழகத் தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதியுடன் ஒரே மேடையில் ஏறி பிரசாரம் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல என்பதை தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்திய அந்தப் பிரசாரக் கூட்டத்தினால் எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு03/04//11
No comments:
Post a Comment