Thursday, April 21, 2011

அரச திருமணத்தின் எதிர்பார்ப்புகள்


உலகமே எதிர்பார்க்கும் பிரிட்டிஷ் அரச திருமண விழா 29ஆம் திகதி நடைபெறுகிறது. வில்லியம்கதே ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள் உலகெங்கும் அதிகளவில் விற்பனையாகின்றன.
சார்ள்ஸ் டயானா திருமணத்தின் பின்னர் மீண்டும் பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் நடைபெறும் இத்திருமணத்துக்காக இங்கிலாந்து களை கட்டியுள்ளது.
வில்லியம் கதே திருமண ஏற்பாடுகள் கனகச்சிதமாக செய்யப்பட்டுள்ள அதேவேளை, அத்திருமணம் பற்றிய மக்களின் எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. கதேயின் திருமண ஆடையை யார் வடிவமைப்பார், என்பதில் ஆரம்பித்து கதே எப்போது குழந்தையைப் பெறுவார் என்பது வரை பலர் பந்தயம் கட்டியுள்ளனர்.
கதேயின் திருமண உடை ஐவொரி கலரில் இருக்கும் என்று அதிகமானோர் தெரிவித்துள்ளனர். கதேயின் உடை வெள்ளை நிறம் என்று கூறு பவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். வனிலா, லெமன், கோல்ட், சில்வர், கறுப்பு, மஞ்சள், பச்சை உட்பட 22 நிறங்களைப் பட்டியலிட்டுள்ளனர். இதில் 22ஆவது இடத்தில் சிவப்பு உள்ளது.
கதேயின் உடையை சாரா போட்டன் வடிவமைப்பார் என்று அதிகமானோர் கூறியுள்ளனர். இங்கிலாந்தின் பிரபலமான ஆறு வடிவமைப்பாளர்களின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். கதேயின் திருமண ஆடைவேல் எட்டு அடியிலிருந்து 199 அடி நீளம் இருக்கும் என்று பலர் கூறியுள்ளனர். எட்டு அடிக்கு குறைவாக இருக்கும் என்று சிலர் கூறியுள்ளனர். 32 அடிக்கு அதிகமானதாக இருக்கும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
36 மில்லியனுக்கும் அதிகமானோர் பி.பி.சி. மூலம் திருமணச் செய்தியை அறிவார்கள் என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கதே எத்தனை மணிக்கு வருவார் என்ற கேள்விக்கு 11 மணியிலிருந்து 11 மணி 3 நிமிடங்களுக்குள் வருவார் என்று பலர் கூறியுள்ளனர். ஒருசிலர் 11 மணிக்கு முன்னர் வருவதாகக் கூறியுள்ளனர். 11 மணி 8 நிமிடத்துக்கும் 11 மணி 11 நிமிடத்துக்கும் இடையில் வருவதாகவும் சிலர் கூறியுள்ளனர்.
திருமணத்தின் பின் ""யூ ஆர் பியூட்டிபுல்'' என்ற பாடலுக்கு நடனமாடுவார்கள் எனப் பலர் கூறியுள்ளனர். ""ஐடோன்ற்''வோன்''ரு மிஸ் ஏ திங் என்ற பாடல் உட்பட 19 பாடல்களைப் பட்டியலிட்டுள்ளனர். திருமணத்தின் பின் நடைபெறும் இரவு விருந்தில் மாட்டிறைச்சியே பிரதான உணவாக இருக்கும் என்று பலர் கூறியுள்ளனர். கோழியையும் மீனையும் ஒரு சிலர் கூறியுள்ளனர். மிகக் குறைந்தளவானோர் பீஸா என்றனர்.
வில்லியம்கதே ஜோடி தேனிலவுக்கு எங்கே போவார்கள் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது. 21 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தேனிலவுக்காக கென்யாவுக்குச் செல்வார்கள் என்று அதிகமானோர் தெரிவித்துள்ளனர். 2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கதேக்கு முதலாவது குழந்தை பிறக்கும் என்று பலர் கூறியுள்ளனர். 2012ஆம் ஆண்டு டிசம்பரில் குழந்தை பிறக்கும் என்று சிலர் கூறியுள்ளனர். 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கதே தாயாவார் என்றும் சிலர் கூறியுள்ளனர். முதற் குழந்தை ஆண் என்று 10/11 பேரும் பெண் என்று 10/11 பேரும் கூறியுள்ளனர்.
திருமண நாளில் மகாராணி மஞ்சள் நிறத் தொப்பி அணிவார் என்று பலர் கூறியுள்ளனர். மெல்லிய நீலம், பிங்க், ஒரேஞ், பச்சை, கறுப்பு என 10 நிறத் தொப்பி அணிவார் என்று கருத்துக் கூறியுள்ளனர். இவற்றில் சில எதிர்பார்ப்புகள் நிறைவேறிவிட்டன. அதிகமானோர் கூறியது போன்றே ஐவெரி கலரையே கதே அணிவார். யாருமே எதிர்வு கூறாத ஜோர்தானுக்கு தேன்நிலவு கொண்டாட வில்லியமும், கதேயும் செல்ல உள்ளனர்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 22/04/11

No comments: