Wednesday, June 8, 2011

அரசியலா , குடும்பமா?குழம்புகிறது தி.மு.க.

திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்த தவறுகளில் இருந்து ஜெயலலிதா பாடம் படித்துள்ளõர் போலத் தெரிகிறது. ஆடம்பரம், படாடோபம் என்பனவற்றை உதறித் தள்ளியுள்ளார். அரசு விழாக்கள் மிக எளிமையாக நடைபெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஆள் உயர கட் அவுட்கள், வாழ்த்துக் கோஷங்கள் எதுவுமே இல்லை. முதல்வர் ஜெயலலிதா மீதும் தமிழக அரசின் மீதும் எந்தக் குற்றச்சாட்டும் வந்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளார்.
தமிழக அரசை எப்படி நடத்த வேண்டும் என்பதில் முன் எச்சரிக்கையாக செயற்படும் முதல்வர் ஜெயலலிதா முன்னைய அரசு செய்த சாதனைகளை, தடயங்களை அடியோடு அழிப்பதில் உறுதியாக உள்ளார். மிகப் பிரமாண்டமாக நவீன வசதிகளுடன் கட்டப்படும் புதிய தலைமைச் செயலகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு எப்போது விடை கிடைக்கும் என்று தெரியாது. இலவச தொலைக்காட்சி வழங்கும் திட்டம் அறிவிக்கப்படாது முடிவுக்கு வந்துள்ளது. ரூபாவுக்குப் படி அரிசி கருணாநிதி கொடுத்தார். ஜெயலலிதா அதனிலும் ஒருபடி மேலே போய் இலவச அரிசி கொடுத்துள்ளார். இலவச காஸ், மடிக்கணனி, தாலிக்குத் தங்கம் என்பன கொடுப்பதற்குரிய ஏற்பாடுகள் துரிதமாக செயற்படுத்தப்படவுள்ளன.
தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்வர் ஜெயலலிதா, சமச்சீர் கல்வியை இடை நிறுத்தியது சலசலப்பைத் தோற்றுவித்துள்ளது.
சமச்சீர் கல்விப் புத்தகத்தில் கருணாநிதியின் கவிதை இருந்ததனால்தான் சமச்சீர்க் கல்விப் புத்தகத்தை தமிழக அரசு தடை செய்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன இதற்குத் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. எனது கவிதையை அகற்றி விட்டுப் புத்தகத்தை வெளியிடுமாறு கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். கருணாநிதியின் மீதான வெறுப்பினால் தமிழக மாணவர்களின் கல்வியுடன் தமிழக அரசு விளையாடுகிறது. என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சிகள் எவையும் இது பற்றி வாய் திறக்கவில்லை. தமிழக சட்ட சபையில் எதிர்க்கட்சிகள் பலமிழந்துள்ளன. ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
ஜெயலலிதாவின் கூட்டணியில் உள்ள இடது சாரிகளும் சிறு கட்சிகளும் கணிசமான இடங்களைப் பிடித்துள்ளன. இவை எதிர்க்கட்சியாகச் செயற்பட்டாலும் தமிழக அரசுக்கு ஆதரவான கட்சிகளாவே உள்ளன.
தமிழக அரசுக்கு எதிரான திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன தமிழக சட்ட சபையில் பலம் இல்லாத எதிர்க்கட்சிகளாக உள்ளன. சட்ட சபைக்கு வெளியே எதிர்க்கட்சியõகச் செயற்படுவதற்கு வைகோ முடிவெடுத்துள்ளார். தமிழக சட்ட சபையின் முதலாவது கூட்டத் தொடர் ஆரம்பிக்க முன்னரே தமிழக அரசு செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சிகள் வலுவிழந்த நிலையில் சட்ட சபையில் இடம்பெறாத மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சட்ட சபைக்கு வெளியே இருந்து ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக திகழப் போவதாகத் தெரிகிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டிய திராவிட முன்னேற்றக் கழகம் தனது கடந்த காலத் தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஸ்பெக்ரம் ஊழல் வழக்கில் கனிமொழிக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் கனிமொழியின் வழக்கு விவகாரத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத் தேர்தல் தோல்வி பற்றிய ஆய்வு எதனையும் செய்யவில்லை.
ஸ்டாலின் அழகிரி என ஆளுக்கு ஒரு திசையில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் கனிமொழி விவகாரத்தினால் ஒற்றுமையாகியுள்ளது.
ஊழல் வழக்கில் ராஜா சிறைப்பட்ட போது பதற்றமடையாத திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை கனிமொழி கைது செய்யப்பட்டபோது பதற்றமடைந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் இருந்த பிரிவினையை கனிமொழியின் கைது அகற்றியுள்ளது.
தமிழக முதல்வரின் டில்லிப் பயணத்தை பார்த்துக் காத்திருக்கிறது திராவிட முன்னேற் றக் கழகம். ஜெயலலிதா டில்லிக்குச் செல்லும்போது மன்மோகன், சோனியா ஆகியேõரைச் சந்திப்பாரா? அந்தச் சந்திப்பின் பின்னர் தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்படுமா? என்பதை ஆராய்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். தமிழக சட்ட சபைத் தேர்தலின் வெற்றி அடுத்து வரும் தேர்தல்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. அடுத்து வரும் மாநகராட்சி தேர்தல்களில் வெற்றி பெற்று தனது இருப்பை வெளிக்காட்ட விரும்புகிறது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
குடும்பமா? அரசியலா? என்று தடுமாறிக் கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்தத் தடுமாற்றம் அதன் அரசியல் எதிர்காலத்துக்கு பாதகத்தையே ஏற்படுத்தும். திராவிட முன்னேற்றக்க கழகத்தினால்தான் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது என்ற கருத்து காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது.
அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமானால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் உள்ளவர் விரும்புகின்றனர்.

வர்மா





சூரன்.ஏ.ரவிவர்மா






வீரகேசரிவாரவெளியீடு05/06/11

No comments: