Thursday, June 23, 2011

அ.தி.மு.கவை நெருங்குகிறது காங்கிரஸ்நெருக்கடியில் தத்தளிக்கிறது தி.மு.க.


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் டில்லி விஜயம் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி டில்லிக்குச் செல்லும் போதெல்லாம் அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சி ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்புக் கொடுத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் பின்னர் டில்லிக்குச் சென்ற கருணாநிதியை திறந்த மனதுடன் காங்கிரஸ் கட்சி வரவேற்கவில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாட்டின்போது கருணாநிதியின் சொல்லுக்குக் கட்டுப்படாது மிரட்டும் தொனியில் 63 தொகுதிகளைப் பெற்றது. இதையெல்லாம் அவமானமாகக் கருதாத கருணாநிதி மத்திய அரசுடன் சிநேகமாக இருந்தார்.
ஜெயலலிதா முதல்வரானதும் டில்லியின் கட்சி அப்படியே மாறிவிட்டது. பிரதமர் மன்மோகன்சிங் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். சோனியா காந்தியுடன் மிகவும் நெருக்கமானவரான டில்லி முதல்வர் லீலா தீட்ஷித் ஜெயலலிதாவைச் சந்தித்துள்ளார். தமிழக முதல்வர் என்ற மரியாதையின் நிமித்தம் தான் இந்தச் சந்திப்பு என்று வெளியில் கூறப்பட்டாலும் இதன் பின்னணியில் பலமான அரசியல் அத்திவாரம் உள்ளது. சோனியாவின் ஒப்புதல் இன்றி இது நடைபெற்றிராது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிடுவதற்கு காங்கிரஸ் கட்சி எப்பவோ தயாராகி விட்டது. ஆனால் காங்கிரஸைக் கைவிட முடியாத சூழ்நிலைக் கைதியாக திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. காங்கிரஸுடனான உறவை முறிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கூறிய போதெல்லாம் பொறுமை காக்கும்படி கூறினார் கருணாநிதி. தற்போது காங்கிரஸ் கட்சியுடனான உறவைத் துண்டிக்க வேண்டும் என்று கருணாநிதி விரும்பும் போது திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் அதற்கு முட்டுக் கட்டை போடுகிறார்கள். தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்த கழகம் தனி நபர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் நிலைக்கு வந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் கூடிய செயற்குழு அதிரடியான தீர்மானங்களை நிறைவேற்றி தனது சுயமரியாதையை வெளிக்காட்டியது. கழகத்துக்கு அவமானம் ஏற்பட்டால் பொங்கி எழும் செயற்குழு சும்மா பெயருக்குக் கூடிக் கலைகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சினையும் ஜெயலலிதா முதல்வரானதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுய மரியாதையை இல்லாமல் செய்து விட்டது. தமிழக சட்ட சபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு திராவிட முன்னேற்றக் கழகம்தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை ஆசிரியத் தலையங்கம் தீட்டியுள்ளது. தமிழக சட்ட சபை முடிவு வெளியாகி சுமார் ஒரு மாதத்தின் பின்னர் காங்கிரஸ் கட்சியின் பத்திரிகை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளது. கட்சியின் கொள்கையை வெளியிடும் பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தின் பின் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸுடனான தொடர்பை விட்டு விடவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் ஜெயலலிதா. எனது ஆதரவு தேவை என்றால் அவர்கள் கேட்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் அறை கூவல் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு இன்னமும் மூன்று வருடம் இருக்கிறது. அதுவரை திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிடாமலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நெருங்காமலும் இருக்க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ். மத்திய அரசில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறினால் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி எதுவும் ஏற்படப் போவதில்லை. மத்திய அரசில் இருந்து வெளியேறினால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான் மிகுந்த பாதிப்பு ஏற்படும். அதனால் தான் திராவிட முன்னேற்றக் கழகம் அடங்கி இருக்கிறது.
இலங்கைப் பிரச்சினை பற்றி டில்லியிலும் முழங்கியுள்ளார் ஜெயலலிதா. கச்சதீவை மீளப் பெற வேண்டும். இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பன போன்ற ஜெயலலிதாவின் கோரிக்கைகள் சில மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்திய மத்திய அரசு பூரண ஆதரவையும் ஆசியையும் வழங்கியது. இலங்கைக்கு ஆதரவளித்த இந்திய மத்திய அரசிடம் இலங்கையைத் தட்டிக் கேட்கும்படி முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் கோரிக்கைகளுக்காக இலங்கையைப் பகைத்துக் கொள்ள இந்திய அரசு தயாராக இல்லை.
டில்லிக்குச் செல்லும் ஜெயலலிதா காங்கிரஸ் தலைவி சோனியாவைச் சந்திப்பாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எழுப்பப்பட்டது. அம்மா டில்லியில் இருந்து திரும்பும்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக காங்கிரஸ் கூட்டணி பிறந்து விடும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எதிர்பார்த்தார்கள். இரண்டுமே நடக்காததால் தொண்டர்கள் மனமுடைந்துள்ளார்கள்.
அரசியல் அரங்கில் வெற்றி பெற்ற ஜெயலலிதா தமிழகப் பெற்றோர் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் வெறுப்பைச் சம்பாதித்துள்ளார். ஆங்கிலக் கல்வித் திட்டத்தை ஜெயலலிதா இடை நிறுத்தியது கல்வி ஆர்வலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. கருணாநிதியின் மீதான கோபத்தினால் மாணவர்களின் எதிர்காலத்தை ஜெயலலிதா கேள்விக்குறியாக்கியுள்ளார். மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பாடப் புத்தகத்தில் உள்ள செம்மொழிச் சின்னத்தை மறைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் அடையாளங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இவை அ.தி.மு.காவின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு19/06/11

No comments: