ஜேர்மனியில் நாளை மறுதினம் ஆரம்பமாகும் பெண்களுக்கான உலகக் கிண்ண போட்டிக்கு ஆறு இலட்சத்து 70 ஆயிரம் நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகியுள்ளன.
இப் போட்டிகளுக்கான பொது விற்பனைக்கென ஒதுக்கப்பட்டுள்ள 900,000 நுழைவுச் சீட்டுகளில் 75 வீதத்தை உள்ளடக்கியதாகவே இத்தொகை அமைந்துள்ளதாக உள்ளூர் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஸ்டெபி ஜோன்ஸ், ஜேர்மன் பராபோட்டிங்கிலுள்ள உதைபந்தாட்டக் கழகத் தலைமையகத்தில் தெரிவித்தார்.
முப்பத்திரண்டு ஆட்டங்களில் முப்பது ஆட்டங்களுக்கென ஆகக் குறைந்தது 10,000 நுழைவுச்சீட்டுகள்விற்றுத் தீர்க்கப்பட்டுள்ள அதேவேளை, ஜேர்மனியில் முதன் முதலாக நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளுக்கான ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதன் அடையாளமாக பதினைந்து போட்டிகள் தலா 20,000 ரசிகர்கள் மத்தியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது பற்றி ஜோன்ஸ் மேலும் தெரிவிக்கையில்,
ஜேர்மனியில் நடைபெறவுள்ள பெண்களுக்கான உலகக் கிண்ண உதைபந் தாட்டப் போட்டிகள் வெற்றிகரமானவையாகத் திகழப்போவதனை இத்தகைய ரசிகர்களின் நல்லாதரவு பறைசாற்றுகிறதெனவும் விளையாட்டரங்குகளின் மொத்த கொள்ளளவின் 80 வீதமான இருக்கைகளை இதன் மூலம் எம்மால் நிரப்பிக் கொள்ள முடியுமெனவும் ஜேர்மனியில் கொள்வனவு செய்யப்படும் நுழைவுச் சீட்டுகளுக்கு மேலதிகமாக தன்சானியா, பொலிவியா, பிஜி மற்றும் லெபனான் உள்ளிட்ட ஏனைய ஐம்பது நாடுகளிலிருந்தும் நுழைவுச் சீட்டுகளுக்கான பதிவுக் கட்டளைகள் வந்து குவிந்துள்ளதாகவும் கூறினார். மேலும் ஜேர்மனியில் உள்ள ஜப்பான், பிரேசில் மற்றும் அமெரிக்க வெளிநாட்டு குழுக்கள் மூலம் அந்தந்த நாடுகளின் பார்வையாளர்கள் சார்பான விண்ணப்பங்களை ஏற்பாட்டுக்குழுவின் நுழைவுச் சீட்டு நிலையம் கையாண்டு வருவதாகவும் கடந்த வாரம் ஜப்பானில் முடிவடைந்த தங்கள் நல்வரவுச் சுற்றுலா மூலம் இச்சுற்றுப் போட்டிகளுக்கான சர்வதேச ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டதாகவும் பல்வகை கலாசாரப் பின்னணியைக் கொண்ட ரசிகர்கள் கூட்டம் இச்சுற்றுப் போட்டியை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க தமக்கு வலு சேர்க்கும் ஒன்றாகத் திகழ்வதனை தாம் மனமுவந்து வரவேற்பதாகவும் ஜோன்ஸ் மேலும் தெரிவித்தார்.
மெட்ரோநியூஸ்
No comments:
Post a Comment