Wednesday, June 15, 2011

தமிழக அரசின் தீர்மானத்தால்கருணாநிதிக்கு நெருக்கடி

காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு சாதக சமிக்ஞை காட்டும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு சில விடயங்களில் மத்திய அரசை எதிர்ப்பதற்குத் துணிந்துள்ளதை தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. இலங்கை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி யைப் போலல்லாது அதிரடியாகச் செயற்படுகிறார் ஜெயலலிதா. இலங்கை அரசையே போர்க் குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக சட்ட சபையின் தீர்மானம் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
இலங்கையில் உச்ச கட்டப் போர் நடந்து கொண்டிருக்கையில் முதல்வராக இருந்த கருணாநிதி இதுபோன்ற நெருக்கடியை மத்திய அரசுக்குக் கொடுக்கவில்லை. தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படும் போதும் போர் உச்சக் கட்டத்தை அடைந்த போதும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கும் கடிதங்கள் அனுப்பினார் கருணாநிதி. இது தவிர உண்ணாவிரத நாடகம், அமைச்சர் ராஜினாமா போன்றவற்றினால் கருணாநிதி பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானாரே தவிர உருப்படியான காரியம் எவையும் நடைபெறவில்லை.
தமிழக அரசின் தீர்மானத்தினால் இலங்கை அரசுக்கு அரசியல் நெருக்கடி எவையும் ஏற்படப் போவதில்லை. இந்திய இலங்கை உறவில் விரிசல் ஏற்படப் போவதில்லை. தமிழக அரசைப் போன்று வேறு மாநில சட்ட சபைகளிலும் இதே போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் அதனைச் சமாளிப்பதற்குரிய வழி வகைகளைத் தேட வேண்டிய சூழ்நிலைக்கு இந்திய மத்திய அரசு தள்ளப்படும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தமிழக மக்களும் ஜெயலலிதாவை எதிர்த்து கடுமையாக விமர்சித்தவர்களும் தமிழக அரசின் தீர்மானத்தை அகமகிழ பாராட்டியுள்ளனர். இலங்கைக்கு எதிரான ஒரு இறுதிப் பொறி இந்தியாவில் எழுந்துள்ளது. தமிழக சட்ட சபைத் தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்படும். அது பற்றி விவாதம் நடைபெறவேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்குப் பதிலளிக்க வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்படலாம்.
தமிழக சட்ட சபைக் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஆளுநர் ஆற்றிய உரை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப் பட்ட புதிய தலைமைச் செலயக நிர்மாணப் பணிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும். தமிழக சட்ட சபைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினால் நிறைவேற்றப்பட்ட மேலவை தேவையற்றது என்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையை ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
புதிய தலைமைச் செயலகம், சட்ட மேலவை ஆகிய இரண்டும் கருணாநிதியின் கனவுகள் கருணாநிதிக்கு ஆதரவாளரான ஆளுநர் மூலமாகவே அவை நிறைவேற்றப்படமாட்டாது என்று அறிவிக்க செய்தார் முதல்வர் ஜெயலலிதா. மாநில அரசின் செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்காத ஒருவரே ஆளுநராக நியமனம் பெறுவது வழமை. மத்திய அரசும் மாநில அரசும் ஒரே கோட்டில் பயணம் செய்யும்போது எழுதப்படாத விதியாக இது கருத்தில் கொள்ளப்படுகிறது. கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவரான பர்னாலா தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக் காலம் இந்த ஆண்டின் இறுதியில் முடிகிறது. தமிழக அரசின் ஆதரவு மத்திய அரசுக்குத் தேவையாக இருப்பதனால் ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்படக் கூடிய ஒருவரே ஆளுநராக நியமிக்கப்படுவார்.
ஸ்பெக்ரம் 2ஜி விவ காரம் மேலும் இறுக்கமானதால் கருணாநிதி ஆடிப் போயுள்ளார். தமிழக அரசியலில் என்ன நடக்கிறது என்பதை அறி வதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார் கருணாநிதி. முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவில் ஆரம்பித்த ஸ்பெக்ரம் விசாரணை அமைச்சர் கனிமொழியையும் சிறையில் தள்ளியுள்ளது. ஸ்பெக்ரம் விவகாரத்தை சி.பி.ஐ. தோண்டித் துருவு வதால் கலைஞர் தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி ஆகியவையும் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளன.
ஸ்பெக்ரம் விவகாரத்தில் இருந்து கனிமொழியை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதிலேயே கருணாநிதி அதிக முனைப்புக் காட்டுகிறார். ஆனால் இந்த விவகாரத்தை விசாரணை செய்யும் சி.பி.ஐ. மேலும் பல ஆதாரங்களைச் சேகரித்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களையும் அவர்களுக்கு ஆதரவாளர்களையும் குறி வைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது சி.பி.ஐ.
சி.பி.ஐ. யின் விசாரணை ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை, இந்திய ஊடகங்கள் அமைச்சர் தயாநிதிமாறனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகின்றன. இந்திய ஊடகங்களில் விலாவாரியாக வெளிவரும் இந்த ஆதாரங்கள் அனைத்தும் சி.பி.ஐ.க்கு பெரும் பொக்கிஷசமாக உள்ளன. மகளை வெளியே கொண்டுவர கருணாநிதி முயற்சி செய்கிறார். ஆனால் பேரனும் உள்ளே போகப் போகிறார் என்ற ரீதியில் செய்திகள் வெளியாகின்றன.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போது அமைதி காத்த ஊடகங்கள் சில ஆட்சி மாறியதும் ஆதாரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. அஸ்தமித்த சூரியன் இனி உதிக்காது என்று ஜெயலலிதா கூறியுள்ளார். சூரியன் அஸ்தமிக்குமா சுட்டெரிக்குமா என்பதை தெளிவுபடுத்த வேண்டிய கருணாநிதி குழம்பிப் போயுள்ளார்.
வர்மா

சூரன்.ஏ.ரவிவர்மா

வீரகேசரிவாரவெளியீடு19/06/11

No comments: