Sunday, February 5, 2012

சீண்டுகிறார் ஜெயலலிதா சீறுகிறார் விஜயகாந்த்

அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடித்ததும் எதிர்பார்த்தது போலவே, திராவிட முன்னேற்றக் கழக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசியலில் தனக்கு நெருக்கமாக இருந்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.

ஆரம்பத்தில் அடக்கி வாசித்த விஜயகாந்த் இப்போது ஆவேசமாக பேசத் தொடங்கி விட்டார். அவரது ஆவேசப் பேச்சினால் தமிழக ஆட்சிக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படப்போவதில்லை.

அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து சசிகலாவும் அவரது குழுவினரும் வெளியேற்றப்பட்ட பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள்ளும் தமிழக அரசியலிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. சசிகலா, திவாகரன், ராவணன் போன்றவர்களின் சிபார்சில் அமைச்சரானவர்களின் பதவி பறிக்கப்பட்டன. அவர்களின் தயவில் உயர் பதவி வகித்த பொலிஸ் அதிகாரிகள் முக்கியத்துவம் இல்லாத துறைக்கு மாற்றப்பட்டனர்.
திவாகரனை கோட்டைவிட்டு தேடிக்கொண்டிருக்கும் பொலிஸார் அதிரடியாக ராவணனைக் கைது செய்தது.
ஜெயலலிதாவால் விரட்டி அடிக்கப்பட்ட சசிகலாவும் அவரது குழுவினரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் அடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி சில தகவல்கள் சசிகலா தரப்புக்கு அனுப்பப்படுகின்றது. திவாகரனைக் கைது செய்வதற்குரிய ஏற்பாடுகள் மிக இரகசியமாக செய்யப்பட்டன. இந்தத் தகவல் தெரிந்ததனால் திவாகரன் தலைமறைவாகி விட்டார். சசிகலாவின் நலனில் அக்கறை உள்ள சிலர் இன்னமும் ஜெயலலிதாவின் அருகில் இருப்பதையே இச்சம்பவம் வெளிக்காட்டுகிறது. திவாகரனைத் தேடி தமிழகப் பொலிஸார் அலைந்து கொண்டிருக்கையில் சசிகலாவும் அவரது குழுவினரும் எதுவும் தெரியாதது போல் அமைதியõக இருந்தனர்.
தனது ஆட்கள் எவரையும் தமிழக அரசால் கைது செய்ய முடியாது. கைது செய்யவும் விட மாட்டேன் என்று சசிகலாவின் கணவன் நடராஜா சபதமிட்டார். அவரது வாயை அடக்கும் விதமாக இராவணன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்ட சபை தேர்தலில் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுபவர்களைத் தெரிவு செய்வது அமைச்சராக யாரை நியமிப்பது அரசுக்குக் கிடைக்கும் ஒப்பந்தங்களை விநியோகிப்பது போன்றவற்றில் மிக முக்கிய பங்கு வகித்தவர் ராவணன். கட்சியில் உள்ளவர்களுக்கு எதிராக வரும் புகார்களை விசாரிப்பதிலும் ராவணன் பங்கு முக்கியமானது.
பஞ்சாயத்து வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்வதற்காக கோவையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை மிரட்டி 10 இலட்சம் ரூபா பெற்றது, திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரே மணல் விற்பனை உரிமம் பெறுவதற்காக ஒரு கோடி ரூபா கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை மணல் விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கப்படவில்லை. ரவிக்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே ராவணன் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் செயலாளர் செல்வராசா கார் விபத்தில் பலியானார். செல்வராசாவின் மகன் இந்த விபத்தில் சந்தேகம் இருப்பதாக முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்துள்ளார். செல்வராசாவின் விபத்து மரணமும், ராவணனுக்கு எதிராக திரும்பக் கூடிய வாய்ப்பு உள்ளது.
ராவணனைக் கைது செய்த பொலிஸார் அவரை எந்தப் பொலிஸ் நிலையத்தில் விசாரணை செய்யப் போகிறோம் என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. பல பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு சென்று அவரை அலைக்கழித்தார்கள். ராவணனன் கைது செய்வதற்கு முன்பு அவரது நிழல் போல் செயல்பட்ட இருவரைப் பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் வழங்கிய சில தகவல்களின் அடிப்படையிலேயே ராவணன் கைது செய்யப்பட்டார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்ததும் எதிர்பார்த்தது போன்றே திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலினுக்கு எதிராகப் புகார் கொடுக்கப்பட்ட போது தன்னைக் கைது செய்யுமாறு அலுவலகம் சென்று வேண்டுகோள் விடுத்தார் ஸ்டாலின். ஆனால் தனது கட்சிக்காரர்களையே ஜெயலலிதா கைது செய்வார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. ராவணனின் கைது ஆரம்பம் தான்

முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துக்குமிடையேயான பகையால் தமிழக சட்ட மன்றம் பரபரப்பாகியது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்ததாக உண்மையில் ஜெயலலிதா ஒப்புக் கொண்டுள்ளார். விஜயகாந்துடன் கூட்டணி சேர்ந்ததற்காக வெட்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். கூட்டணித் தலைவர்களை ஜெயலலிதா மதிப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த உண்மை தெரிந்து கொண்டும் கருணா நிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற பொதுக் கொள்கையின் அடிப்படையிலேயே விஜயகாந்தும், ஜெயலலிதாவும் கூட்டணி சேர்ந்தனர். தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும் எதிர்பார்த்தது போன்றே கூட்டணிக் கட்சிகளை கைவிட்டுவிட்டார் ஜெயலலிதா.
தமிழக ஆட்சிபற்றி அடக்கி வாசித்த விஜயகாந்த் இப்போது ஆவேசமாகப் பேசத் தொடங்கி விட்டார். விஜயகாந்தின் ஆவேசப் பேச்சுக்கள் எவையாலும் தமிழக ஆட்சிக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படப் போவதில்லை. அசுர பலத்தில் உள்ள அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துக்கு விஜயகாந்தின் ஆதரவு தேவை இல்லை. விஜயகாந்தும் ஜெயலலிதாவும் தமது பலத்தைக் காட்ட வேண்டிய களமாக சங்கரன் கோயில் இடைத்தேர்தல் அமையப் போகிறது.
ஜெயலலிதாவும் விஜயகாந்தும் கூட்டணி சேர்ந்ததனால்தான் திராவிட முன்னேற்றக்கழகம் படுதோல்வியடைந்தது. ஜெயலலிதா முதல்வரானார். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். இருவரும் தனித்தனியாக போட்டியிட்டிருந்தால் கருணாநிதி மீண்டும் முதல்வராகி இருப்பார். ஆட்சி பீடம் ஏறியதும் பழையதை மறப்பது ஜெயலலிதாவின் சுபாவம். இப் பொழுதும் அதனையே திரும்ப மீட்டியுள்ளார். விஜயகாந்த்துடன் கூட்டணி சேராமல் தனியாக போட்டியிட்டிருந்தாலும் தமிழக சட்ட சபைத் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றிருக்கும் என்று வீறாப்பு பேசியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர் அனுதாப அலையில் முதல்வரான ஜெயலலிதா அப்போதும் இப்படித்தான் பிதற்றினார்.
தமிழக சட்ட சபையில் இருந்து விஜயகாந்தும் அவரது கட்சி உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டனர். சட்ட சபையின் விதியை மீறியதாக‌ 10 நாட்களுக்கு சட்ட சபையில் கலந்து கொள்வதற்கு விஜயகாந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்ட சபை இப்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சங்கரன் கோயில் இடைத்தேர்தல் தொடங்கும் போது தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கி விடும்.
வர்மா,சூரன்,ஏ,ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு05/05/12


No comments: