Saturday, April 14, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 28


உடல் வலிமைக்கும் தாம்பத்திய உறவுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்ற உண்மையைப் புரிய வைக்கும் கதை அம்சத்துடன் 1982ஆம் ஆண்டு வெளியான படம் வாலிபமே வாவா. தலைப்பிலேயே கிளுகிளுப்பை உண்டாக்கிய இப்படத்துக்கு பத்திரிகைகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மண் வாசனைப் படங்களின் மூலம் இனிய தமிழ் மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் விரும்பாததனால் படுதோல்வி அடைந்தது.
கார்த்திக்கும் ராதாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். இளம் காதலர்கள் அனுபவிக்கும் சகல சந்தோசங்களையும் கார்த்திக்கும் ராதாவும் அனுபவிக்கின்றனர். திருமணக் கனவில் இருவரும் திளைத்திருக்கும் போது ராதாவைவிட்டு கார்த்திக் மெதுவாகப் பிரியத் தொடங்குகிறார். கார்த்திக்கின் நடவடிக்கையில் மாறுதலைக் கண்ட ராதா கவலைப்படுகிறாள். கார்த்திக்கின் அன்பை மீண்டும் பெறுவதற்கு அவள் செய்யும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. கார்த்திக் தன்னை வெறுப்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறாள் ராதா. உண்மையை அறிந்த ராதா அதிர்ச்சியடைகிறாள்.
கார்த்திக்கின் நண்பன் ஒருவர் ஆஜானுபான உருவம் உடையவர். அவருக்குத் திருமணம் நடைபெறுகிறது. தாம்பத்திய வாழ்வில் மனைவியைத் திருப்திப்படுத்த முடியாது தவிக்கிறான் கார்த்திக்கின் நண்பன். தன்னைவிடவலிமை உள்ளவனால்மனைவியைத் திருப்திப்படுத்த முடியாத நிலையில் மெலிந்த உருவம் உள்ளதனால் தனது மனைவியை எப்படித் திருப்திப்படுத்த முடியும் என்ற கவலையில்தான் கார்த்திக் தன்னை விட்டுப் பிரிந்த உண்மையை ராதா அறிகிறார்.
தாம்பத்திய சுகம் என்பது உடலில் இல்லை என்று ராதா விளக்குகிறார். கார்த்திக் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. உடல் வலிமை இல்லாதவனால் மனைவியைத் திருப்திப்படுத்த முடியாது என்று அடித்துக் கூறுகிறார் கார்த்திக்.
கார்த்திக்கின் மனதில் உண்டான உளவியல் ரீதியான அச்சத்தைத் தன்னால் மட்டும் தான் இல்லாமல் செய்ய முடியும் என்பதை உணர்க்கிறாள் ராதா. கார்த்திக்கின் அச்சத்தைப் போக்குவதற்காக தன்னை இழக்கிறாள். தாம்பத்திய சுகம் என்பது உடலில் இல்லை. உள்ளத்தில் தான் என்பதைக் கார்த்திக் உணர்கிறார்.
பாரதிராஜாவின் கண்டு பிடிப்பான கார்த்திக்கும் ராதாவும் இளமை தவழக் காட்சிகளில் சிறப்பாக நடித்தனர். அண்மையில் காலமான ஜாம்பவான் கலைமணி கருத்தான வசனங்களை எழுதினார். இளைய ராஜாவின் இசை படத்துக்கு வலுச் சேர்த்தது.
ரமணி


மித்திரன்15/04//12

No comments: