Sunday, April 1, 2012

மனம் திறந்தார் சசிகலாமன்னிப்பாரா ஜெயலலிதா?

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்ற கோட்பாட்டை ஜெயலலிதா மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் போலிருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்னர் ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட உடன் பிறவா சகோதரி சசிகலா மீண்டும் அவரைச் சந்தித்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இச்சந்திப்புப் பற்றி இருவருமே உத்தியோகபூர்வமாக வாயைத் திறக்கவில்லை. அப்படி ஒரு சந்திப்பு நடைபெறவில்லை என்று இருவரும் மறுக்கவுமில்லை.
சசிகலாவின் மீதும் அவரது உறவினர்கள் மீதும் ஜெயலலிதா மிகுந்த ஆத்திரத்தில் இருந்தார். அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை களை எடுத்தார். எனக்கும் கழகத்துக்கும் துரோகம் செய்தவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களை மன்னிக்க மாட்டேன் என்று பகிரங்கமாகக் கூறினார். ஜெயலலிதாவின் கோபப் பார்வை தம் மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் தவித்தார்கள். ஜெயலலிதா சசிகலா பிரிவு நிரந்தரமான நாடகமா என்ற சந்தேகமும் மேலோங்கியது.
சசிகலாவின் கணவர் நடராஜன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சவால் விடுத்தார். ஆனால் சசிகலாவோ ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கில் சாட்சியமளிக்க சசிகலா எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜெயலலிதாவை விட்டுக் கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜெயலலிதாவுக்கு சாதகமாகவே சாட்சியமளித்தார் Œசிகலா.
ஜெயலலிதாவை விட்டு சசிகலா நிரந்தரமாக பிரிந்து விட்டார் என்ற எண்ணம் மேலோங்கி இருந்த வேளையில் சசிகலா வெளியிட்டிருக்கும் தன்னிலை விளக்க அறிக்கை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவிற்கு (ஜெயலலிதா) அர்ப்பணித்து விட்டேன். இனியும் எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவிற்குப் பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகின்றேன். 24 வருடங்களாக அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த நான் கடந்த டிசம்பர் மாதம் அக்காவைப் பிரிந்து வெளியேறிய பின்னர் தான் என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் சிலர் எனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி சில விரும்பத்தகாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர் என்பதை அறிந்தேன். அக்காவுக்கு எதிரான சில சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இவை எல்லாம் எனக்குத் தெரியாமல் நடந்தவை என்பது தான் உண்மை. அக்காவின் எதிரிகள் எனக்கும் எதிரிகளே என்று சாரப்பட சசிகலா விடுத்த அறிக்கையில் ஜெயலலிதா சசிகலா உறவு மீண்டும் மலருமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
சசிகலாவின் பத்திரிகை அறிக்கைக்கு ஜெயா தொலைக்காட்சி முக்கியத்துவம் கொடுத்ததனால் சசிகலாவின் எதிரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சசிகலாவை ஜெயலலிதா விரட்டிய பின்னர் துணிவுடன் சசிகலாவைப்பற்றி புகார் செய்தவர்கள் அச்சத்திலுள்ளனர். சசிகலாவும் ஜெயலலிதாவும் இணைந்தால் தங்கள் எதிர்காலம் சூனியமாகி விடும் என்று கலங்குகின்றனர். சசிகலாவின்த‌டாலடியினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த பிரமுகர்கள் பலர் மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவார்கள் என்ற இருந்தது எதிர்பார்ப்பு. சசிகலா மீதான திடீர் பாசத்தினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினால் அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
சசிகலா வெளியிட்ட இந்த அறிக்கையின் பின்னணியில் ஜெயலலிதா இருப்பாரோ என்ற சந்தேகமும் உள்ளது. ஜெயலலிதாவின் ஒப்புதல் இல்லாமல் சசிகலாவின் அறிக்கைக்கு ஜெயா தொலைக்காட்சி முக்கியத்துவம் கொடுத்திருக்காது. ஜெயா தொலைக்காட்சியின் சகல செய்திகளும் ஜெயலலிதாவின் பார்வைக்குட்பட்டே ஒளி பரப்பாகின்றன. ஆகையினால் இந்த அறிக்கையின் பின்னணியில் ஜெயலலிதா இருக்கக்கூடும் என்ற சந்தேகம் நிலவுகின்றது.
ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து சசிகலா விரட்டப்பட்ட போது இது நிரந்தரமான பிரிவு இல்லை என்ற கருத்து இருந்தது. நடராஜன், திவாகரன், ராவணன் ஆகிய மூவர் சிறையில் உள்ளனர். மகா தேவனைப் பொலிஸ் தேடுகிறது. கைதுப் பட்டியலில் சசிகலாவும் இருப்பதாகச் செய்திகள் வெளிவந்த வேளையில் தான் மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார் சசிகலா. ஜெயலலிதாவின் மௌனம் கலைந்தால் தான் சசிகலாவின் எதிர்காலம் பற்றிய நிலை தெரிய வரும்.
இ@த@வளை அரசியல் ரீதியாக அடி வாங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மீண்டும் ஒரு பேரிடி விழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் என்.நேருஜி சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டதனால் திருச்சி கொந்தளித்துப் போயுள்ளது. பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ள ராம ஜெயத்துக்கு தொழில் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல எதிரிகள் உள்ளனர். காலையில் வழமைபோல் உடற் பயிற்சிக்காக நடந்து சென்ற ராமஜெயம் உரிய நேரத்துக்கு வீடு திரும்பவில்லை. அவரது தொலைபேசியும் செயலிழந்தது. இது பற்றி கேள்விப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர். கல்லறை அருகே நீர் நிரம்பிய புதர் பகுதியில் கை கால் கட்டப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் ராமஜெயத்தின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சி மாறியதும் திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் மீது பல வழக்குகள் பதிவாகின. முன்னாள் அமைச்சர் ஆர்.கே.என்.நேரு மீதும் அவரது தம்பி மீதும் நில மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறை சென்ற இருவரும் பிணையில் விடுதலை பெற்றனர். தமக்கெதிரான வழக்குகளை சட்டப்படி சந்திக்கப் போவதாக இருவரும் தெரிவித்தனர். இந்த நிலையில் ராமஜெயம் கொலை செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கலாக இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பிரபல தொழில் அதிபர் துரைராஜாவுக் கும் ராமஜெயத்துக்கும் தொழில் ரீதியாக பகை இருந்தது. 2007ஆம் ஆண்டு துரைராஜாவும் அவரது தம்பி சக்திவேலும் காரில் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ராமஜெயம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். பஞ்சாயத்துக் காரணமாகவும் ராமஜெயத்துக்கு எதிர்ப்புக்கள் உள்ளன. இந்தக் கோணத்திலும் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சியில் நேருவின் வெற்றிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சிக்கும் பிரதான காரணியாக இருந்தது ராமஜெயம். ராமஜெயத்தின் கொலை காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையேயான பகை பெரிதாக உருவெடுத்துள்ளது.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா

வீரகேசரிவாரவெளியீடு01/04/12

No comments: