கூட்டணி பேரம் பற்றிய பேச்சில் நாட்கள் கடத்தப்பட்டிருந்த நிலையில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் ஏழாம் திகதி முதல் மே மாதம் 12ஆம் திகதிவரை 16ஆவது இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் ஏப்ரல் 24ஆம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 16ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகும்.தமிழகத்தில் இதுவரையிலும் இரு முனைப் போட்டியே நடைபெற்று வந்தது. இம்முறை முதல் முதலாக ஐந்து முனைப் போட்டி நடைபெறும் நிலை உருவாகிவுள்ளது. தமிழகத்தில் வீழ்த்தமுடியாத சக்தியாக இருந்த காங்கிரஸை பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆண்டு வீழ்த்தியது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சி தமிழகத்தில் புதிய அலையைத் தோற்றுவித்தது. எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்தின் சக்தி தி.மு.க. என்ற மூன்றெழுத்தை புரட்டிப்போட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியால் திராவிட முன்னேற்றக் கழகம் வீழ்ச்சியடைந்தது.தமிழக அரசியல் எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் இடையேயான போட்டியாகவே இருந்தது. இவர்கள் இருவரையும் நம்பியே காங்கிரஸ் கட்சி அரசியல் செய்தது.
எம்.ஜி.ஆர். மறைந்ததும் அவரின் இடத்தை மனைவி ஜானகி பிடித்தார். கட்சி இரண்டாகியது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. ஜானகி தலைமையிலும், ஜெயலலிதாவின் தலைமையிலும் இரண்டுபட்ட கட்சி தேர்தலைச் சந்தித்தது. இரண்டு பெண்மணிகளும் படுதோல்வியடைந்தனர். அப்போது கருணாநிதியின் அரசியல் ஆரம்பமானது.ஜெயலலிதாவின் அசுர வளர்ச்சி கருணாநிதிக்கு சவாலைக் கொடுத்தது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அரசியலில் இருந்து ஒதுங்கியதால் ஜெயலலிதா தனிப்பெரும் தலைவியானார். இந்தியத் தேசியக் கட்சிகள் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் நம்பியே தமிழகத் தேர்தல்களில் களம் இறங்கின. இந்தத் தேர்தலில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் தேசியக் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டனர்.
தேசியக் கட்சிகளுடன் கூட்டணி சேராமல் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க கருணாநிதியும், ஜெயலலிதாவும் தயாராகிவிட்டனர். தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாரதீய ஜனதாக் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் ஜெயலலிதாவையும்,கருணாநிதியையும் தவிர்த்து தேர்தலைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கூட்டணிக் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா. காஞ்சி தேரடியில் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டது. இறுதிநேரத்தில் காஞ்சி பல் நிலையத்துக்கருகில் கூட்டம் நடைபெற்றது. 2004ஆம் ஆண்டு தேர்தலின் காஞ்சி தேரடியில் முதலாவது பிரசாரக் கூட்டத்தை நடத்தினார் ஜெயலலிதா. அப்போது நடந்த பொதுத் தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியடைந்தது. ஆகையால் கூட்டம் நடைபெறும் இடம் இறுதி நேரத்தில் மாற்றப்படடது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டும் அதிக தொகுதிகளில் போட்டியிடும் கனவில் இருந்தன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அடுத்த பெரிய கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியும், மாக்ஸ்ட்மும் இருந்தன. ஆகையால் அதிக தொகுதிகளைக்கேட்டு கோரிக்கை விடுத்தன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோர் இணைந்திருந்தபோது இடதுசாரிகளுக்கு குறைந்தளவு தொகுதிகளே ஒதுக்கப்பட்டன. தங்களைவிடப் பெரிய கட்சிகள் இல்லாமையினால் தாம் கேட்கும் தொகுதிகளை ஜெயலலிதா தருவார் என இரண்டு கட்சிகளும் அதிக நம்பிக்கையுடன் இருந்தன. அவர்களின் எதிர்பார்ப்பைத் தடுவி பொடியாக்கிய ஜெயலலிதா தனித்துக் களமிறங்கத் துணிந்துவிட்டார்.
கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடப்போவதாக ஜெயலலிதா அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஜெயலலிதாவின் அறிவிப்பினால் இடதுசாரிகள் மகிழ்ச்சியடைந்தன. தொகுதி பேரப்பேச்சுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுவார் என்று இடதுசாரிகள் காத்திருந்தன. தனது பிறந்த நாளன்று 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. இடதுசாரிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டியபின் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியின் வேட்பாளர் விலகிவிடுவார் என அறவித்தார்கள். ஜெயலலிதாவின் அந்த அறிவிப்பு இடதுசாரிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. எவரும் எதிர்பார்க்காத நேரத்தில் காஞ்சியில் தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா.
2011ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்திலின்போது இறுதிவரை ஜெயலலிதாவை நம்பியிருந்த வைகோ கைவிடப்பட்டார். அதேபோன்றதொரு நிலையே இப்போது இடது சாரிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறி ஜெயலலிதாவுடன் ஐக்கியமானார் வைகோ. 2011ஆம் ஆண்டு வரை சுமுகமாக போய் கொண்டிருந்த அரசியல் பயணம் சட்டசபைத் தேர்தலின்போது தடம்புரண்டது.35தொகுதிகள் வேண்டுமென வைகோ கேட்டார். ஒன்பது தான் என்று ஜெயலலிதா அறுத்து உறுத்துக் கூறினார். கொஞ்சமும் இறங்கவில்லை. கூட்டணியை விட்டு வெளியேறினார் வைகோ. அன்று வைகோவுக்கு நடந்த அதேநிலைதான் இன்று இடதுசாரிகளுக்கும் நடந்துள்ளது.இடதுசாரிகள் தலா நான்கு தொகுதிகள் கேட்டார்கள். ஒன்றுக்கு மேல் இல்லை என்று கூறிவிட்டார் ஜெயலலிதா. போக்குடமின்றி தடுமாறுகின்றன இடதுசாரிகள். பாரதீய ஜனதாக் கட்சி, காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளுடனும் கூட்டுச் சேரமாட்டாத இடதுசாரிகள் திரிசங்கு சொர்க்க நிலையில் உள்ளன.
2011ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலின்போது ஜெயலலிதாவும், விஜயகாந்தும் இணைவதற்குப் பின்புலமாக இருந்தவர்களில் இடதுசாரிகளும் அடக்கம். சட்டசபைத் தேர்தல் முடிந்து அரியணை ஏறிய பின் கூட்டணியிலிருந்து விஜயகாந்த் விரட்டியடிக்கப்பட்டார். இப்போது இடதுசாரிகள் வெளியேற்றப்பட்டன.
ஜெயலலிதாவின் இந்த அதிரடியினால் தா.பாண்டியன் மிகுந்த மனவிரக்தியடைந்துள்ளார். மாக்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலவேளை ஜெயலலிதாவை எதிர்த்தார்கள். ஜெயலலிதா என்ன செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று தா.பாண்டியன் கூறுவார். என்ன செய்வது யாருடன் கூட்டணி அமைப்பது என்று தெரியாது தடுமாறுகிறார்கள் இடதுசாரிகள்.
2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது விஜகாந்தும் இடதுசாரிகளும் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தனர். அப்போதும் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை செய்யாது 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. இதனால் தொதித்தெழுந்த இடதுசாரிகள் விஜயகாந்தைச் சந்தித்து கூட்டணியில் இருந்து வெளியேறி மூன்றாவது அணி அமைப்போம் என்றனர். இடதுசாரிகளும் விஜயகாந்தும் எதிர்பார்த்த தொகுதிகளில் ஜெயலலிதா தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்தார்.
விஜயகாந்தும், இடதுசாரிகளும் போர்க்கொடி பூண்டதனால் கலவரமடைந்த ஜெயலலிதா இறங்கிவந்து தொகுதி பேரம் பற்றிய பேச்சுக்கு உடன்பட்டார். எந்தவொரு தருணத்திலும் இறங்கிவராத ஜெயலலிதா அன்று இறங்கிவந்தது அவரின் பலவீனம் என்பதை வெளிப்படுத்தியது. விஜயகாந்த் இல்லாது தனி மரமாகி நிற்கும் இடதுசாரிகளால் எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசமைக்கும் மூன்றாவது அணி என்ற கனவோடு இருந்த இடதுசாரிகளுக்கு ஜெயலலிதா அதிர்ச்சி வைத்தியம் செய்துள்ளார்.
ஜெயலலிதாவால் தனிமைப்படுத்தப்பட்ட இடதுசாரிகள் தனித்துப் போட்டிடப் போவதாக அறிவித்துள்ளன. தமிழகக் கட்சிகளுடன் கூட்டணி சேராது போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்தும் வேறுவழியின்றி ரோத்துக்காக தனிமையில் நிற்கின்றன இடதுசாரிகள். ஜெயலலிதாவின் ஆட்சியிலே நடைபெறும் அத்துமீறல்களை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு அங்கீகரித்த இடதுசாரிகளை நடுத்தெருவில் கைவிட்டுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியதற்கு தொகுதிப் பங்கீடுதான் காரணம் என்று அறிவிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மீது வைகோ கொண்டிருந்த ஆதரவு, ஸ்டெல்லைன் ஆலைக்கு எதிராக வைகோ நீதிமன்றம் சென்றது ஆகியனவே உண்மையான காரணங்கள். இடதுசாரிகள் கூட்டணியிலிருந்து வெளியேற்றியதற்கான காரணம் எதுவும் பகிரங்கமாகச் சொல்லப்படவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது விஜயகாந்துடன் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்க இடதுசாரிகள் முயற்சித்ததுதான் காரணம் என்பது வெளிப்படையானது. இடதுசாரிகளுக்கும் இந்த உண்மை தெரிந்துள்ளது. வெளியில் பகிரங்கமாக அறிவிக்க முடியாது குமுறுகின்றனர்.
கூட்டணி அறிவிப்பில் நாளும் பொழுதும் போக்குக் காட்டிய விஜயகாந்த் பாரதீய ஜனதாக்கட்சியுடன் கூட்டணி சேரப்போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். விஜயகாந்தை எதிர்பார்த்துக் காத்திருந்த திராவிட முன்னேற்றக் கழகம் பங்காளிக்கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை எட்டியுள்ளது. விடுதலைச் சிறுத்ததைகள் கூடுதல் தொகுதிக்கேட்டு முரண்டு பிடித்து அடங்கிவிட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் விஜயாந்துக்கான கதவு இழுத்து மூடப்பட்டுவிட்டதால் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைவதற்கு அவர் முடிவெடுத்துள்ளார்.
தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளைத் தீர்மானிக்கும் சக்தியாக ஜெயலலிதா திகழ்கிறார். ராஜிவ் கொலைக் குற்றவாளிகளான சிறையில் இருக்கும் ஏழு பேரின் விடுதலையை ஜெயலலிதா அறிவித்ததும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டது. கடைசி நேரம்வரை நம்பவைத்து இடதுசாரிகளை கைவிட்டார். இதனால் இடதுசாரிகள் தனிமைப்படுத்தப்பட்டன.திராவிட முன்னேற்றக் கழகத்தின் சில தலைவர்களும்,விஜயகாந்தும் காங்கிரஸுடன் கூட்டணி சேரவிரும்பினார்கள். ஏழு கைதிகளின் விடுதலை தொடர்பான ஜெயலலிதாவின் அறிவிப்பினால் அவர்கள் காங்கிரஸ் கட்சியை நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பலமான ஒரு கூட்டணி உருவாகும் வாய்ப்பு அடித்து நொறுக்கப்பட்டது.
அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் இது ஒரு புதிய தேர்தல் களமாகவே உள்ளது. காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், பாரதீய ஜனதாக்கட்சி ஆகியன புதிய பாதையில் தேர்தலைச் சந்திக்க உள்ளன. இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸும், மாநில கட்சிகளின் துணையின்றி முதல்முதலாக தேர்தலுக்கு முகங்கொடுக்கப் போகின்றன.
பாரதீய ஜனதாக்கட்சி முதல் முதலாக விஜயகாந்துடன் இணைகிறது. இந்தக் கூட்டணியில் வைகோவும் இருக்கிறார். விஜயகாந்த் முதல்முதலாக தேசியக் கட்சியுடன் கைகோக்கிறார்.மாநிலக்கட்சிகளாலும், தேசிய கட்சிகளாலும் கைவிடப்பட்ட டாக்டர் ராமதாஸ் தனது வன்னிய வாக்கு வங்கி அப்படியே இருப்பதாக நம்புகிறார். புதிய சூழ்நிçக்கு முகங்கொடுக்க தமிழக வாக்காளர்கள் தயாராகிவிட்டனர்.
வர்மா
சுடர் ஒளி 09/03/14
5 comments:
நிகழ்கால தமிழக அரசியல் கூட்டணிகள் பற்றிய தெளிவான விளக்கம். ஒவ்வோரு முறையும் அனைத்து யூகங்களையும் பொய்யாக்கி தேர்தல் தீர்ப்பு கூறும் தமிழ் மக்கள் இந்த முறையும் அவர்களுக்கு தேவையான, இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமான அணியை நிச்சயம் தேர்ந்தெடுப்பார்கள் !
எனது வலைப்பூ : saamaaniyan.blogspot.fr
நல்ல அலசல். வாழ்த்துக்கள்.
//நிகழ்கால தமிழக அரசியல் கூட்டணிகள் பற்றிய தெளிவான விளக்கம். ஒவ்வோரு முறையும் அனைத்து யூகங்களையும் பொய்யாக்கி தேர்தல் தீர்ப்பு கூறும் தமிழ் மக்கள் இந்த முறையும் அவர்களுக்கு தேவையான, இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமான அணியை நிச்சயம் தேர்ந்தெடுப்பார்கள் !///
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. தங்களுடைய வலைப்பூவைப்பார்த்தேன்.நன்று. அன்புடன்
வர்மா
////
டிபிஆர்.ஜோசப் said...
நல்ல அலசல். வாழ்த்துக்கள்.////
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. தங்களுடைய
. அன்புடன்
வர்மா
////
டிபிஆர்.ஜோசப் said...
நல்ல அலசல். வாழ்த்துக்கள்.////
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. தங்களுடைய
. அன்புடன்
வர்மா
Post a Comment