நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேர்வது என அறிவிக்காது அரசியல் கட்சிகள் அனைத்தையும் திக்கு முக்காடவைத்த விஜயகாந்துக்கு செக் வைத்துள்ளார் ஜெயலலிதா. அதிக தொகுதிகளுக்காக ஆசைப்பட்டு பாரதீய ஜனதாக் கட்சி, காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் இரகசிய பேரம் நடத்திவந்த விஜயகாந்த், கூட்டணி பற்றிய முடிவை அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலையை தமிழக அரசின் தலையில் நீதிமன்றம் சுமத்தியது. நீதிபதி தீர்ப்பு எழுதிய மை காய்வதற்கிடையில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தார் ஜெயலலிதா. சிறையிலிருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்யப் போவதாக ஜெயலலிதா அறிவித்ததனால் காங்கிரஸ் கட்சி கொந்தளித்து எதிர்ப்புக்காட்டியது. காங்கிரஸுடன் இணைவதற்காக பேரம்பேசிய விஜயகாந்த், பேச்சை இடையில் கைவிட்டார்.
ஜெயலலிதாவின் இந்த அதிரடி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அழகிரி, கனிமொழி, கலாநிதி மாறன் ஆகியோர் காங்கிரஸுடன் இணைய வேண்டும் என்று விரும்புகின்றனர். காங்கிர ஸுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக உள்ளார் ஸ்டாலின். ஸ்டாலினின் பிடி வாதத்துக்கு அடங்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள கருணாநிதியும் வெளிப்படையாக காங்கிர ஸை விமர்சிப்பதில்லை. ஜெயலலிதாவின் அறிவிப்பால் ஸ்டாலினின் கை ஓங்கியுள்ளது. காங்கிரஸை கைவிட்ட விஜயகாந்த் பாரதீய ஜனதா கட்சியா, திராவிட முன்னேற்றக் கழகமா என்பதை விரைவில் முடிவுசெய்யவேண்டிய நிலையிலுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல்வர் என்ற கனவில் மிதக்கும் விஜயகாந்த், பாரதீய ஜனதாவையே தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஜெயலலிதாவின் வெற்றியைத் தடுக்கும் வல்லமை விஜயகாந்துக்கு உண்டு என்பதால் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் இணைந்தால் ஜெயலலிதா எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்காது.
தமிழகம், கோவை உட்பட 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார் ஜெயலலிதா. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவருக்கு மட்டும்தான் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கியுள்ளார். படித்துப் பட்டம் பெற்ற புதியவர்களையே ஜெயலலிதா களமிறக்கி உள்ளார். பழம் பெருச்சாளிகள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். வாரிசுகளுக்கு இடம் கொடுக்கவில்லை. அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தின் நம்பர் ரூ என்று பெருமையாகப் பேசப்படும் ஓ.பன்னீர்ச்செல்வத்தின் மகனுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த பழைய தலைவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நந்தம் விஸ்வநாதன், பி.எச். பாண்டியன் ஆகியோரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளரை அறிவித்து, அவரை நீக்கிவிட்டு புதிய ஒருவரை அறிவிப்பது ஜெயலலிதாவின் வழமையான பாணி என்பதனால் இது இறுதியான வேட்பாளர் பட்டியல் அல்ல என்ற கருத்து உள்ளது.
முன்னைய தேர்தல்களில் ஜெயலலிதா அறிவித்த வேட்பாளர்களின் மீது குற்றஞ்சாட்டப்பட்டதனால் அவர்களை மாற்றிவிட்டு வேறு ஒருவரை நியமித்த அனுபவமும் அவருக்கு உண்டு. ஆகையால், குற்றப்பின்னணி உள்ளவர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் அறிவிக்கப்படும் சந்தர்ப்பம் உள்ளது. 40 தொகுதிகளுக்கும் வேட்பாளரை ஜெயலலிதா அறிவித்ததனால் கூட்டணிக் கட்சிகள் திகைத்துப் போயுள்ளன.இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியுடனும், மா சிஸ்ட் கட்சியுடனும் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் செய்யப்போவதாக ஜெயலலிதா அறிவித் தார். இந்நிலையில், அவர்களுடன் ஆலோசனை செய்யாது தன்னிச்சையாக 40 தொகுதி களுக்கும் வேட்பாளரை அறிவித்துவிட்டார். இடது சாரிகளுடன் தொகுதி உடன்படிக்கை செய்யப்படும்போது ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட சிலர் வாபஸ் பெறுவார்கள்.
திராவிட முன்னேற்றக்கழகமும் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டது. 40 தொகுதிகளுக்கும் வேட்புமனு பெற்று நேர் காணலை நடத்துகிறது. நேர்காணலுக்குச் சென்ற அனைவரும் காங்கிர ஸுடன் கூட்டணி வேண்டாம் என ஒருமித்த குரலில் கூறியுள்ளனர்.
வாரிசுகளுக்கு இடமில்லை என்று நேர் காணலில் கூறப்பட்டதனால் மூத்தத் தலைவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். தாம் இருக்கும் போதே வாரிசுகளைக் களமிறக்கிவிட்டு அவர்களை வளர்க்கவேண்டும் என நினைத்த பழைய தலைவர்கள் நொந்துபோயுள்ளனர்.
பழைய தலைவர்களை ஒதுக்கிவிட்டு புதிய வர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றே ஸ்டாலின் விரும்புகிறார். புதியவர்களின் புதிய அலை, தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறார். ரி.ஆர்.பாலு, ஆர். ராசா, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன் ஆகிய பழைய தலைவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கப்படும். ஏனையவர்கள் நிராகரிக்கப்படுவார்கள்.
இதுவரை வெளிவந்த கருத்துக்கணிப்புகள் போலியானவை. அரசியல் கட்சிகளிடமும், தலைவர்களிடமும் பணம் வாங்கிக்கொண்டு அவர்களின் விருப்பத்துக்கேற்றவகையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருப்பதாக நியூஸ் எக்ஸ்பரஸ் என்ற ஹிந்தி தொலைக்காட்சி ஆதாரபூர்வமாக நிரூபத்துள்ளது. இதன் காரணமாக இந்தியா ருடே தனது கருத்துக் கணிப்பு முடிவை வெளியிடுவதை இடைநிறுத்தி யுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்குள்ள மா நிலங்களில் பாரதீய ஜனதாக் கட்சி பெரு வெற்றி பெறும். மோடி அலை அபாரமான வீசுகிறது என வெளியான கருத்துக்கணிப்புகள் பொய் என்பத னால் காங்கிரஸ் உற்சாகமாக உள்ளது. தமிழத் தில் திராவிட முன்னேற்றக் கழகமும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது
வானதி
சுடர் ஒளி 02/03/14
6 comments:
கேப்டன் நினைத்து நடக்காது போலிருக்கே...!
C Voter get money to Poll survay and
AC nelson refuse to get money.
In Cvoter poll survay BJP get 226 seats.
IN AC nelson poll survay BJP get 232 seats.
Just, 6 seats is difference. Then, How you say BJP giving the money for poll survay?
வாருங்கள் திண்டுக்கல்லாரே
விஜயகாந்துக்கு இன்னமும் அரசியல் பிடிபடவில்லை.
அன்புடன்
வர்மா
Anonymous said.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.கருத்துக்கணிப்புகளில் சந்தேகம் உள்ளது தேர்தல் முடியட்டும்
அன்புடன் வர்மா
தமிழகம், கோவை உட்பட 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். Seems error Kovai also included in Tamil nadu right?
//arun said...
தமிழகம், கோவை உட்பட 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். Seems error Kovai also included in Tamil nadu right?//
தவறைச்சுட்டிக்காட்டியதற்கு நன்றி. புதுவை சரிதானே?
அன்புடன்
வர்மா
Post a Comment