Monday, May 18, 2015

ஜோதிகா 36 வயதினிலே ……



ஆற்றலை இனம் கண்டு ஊக்குவிக்கும் பண்பு முதலில் குடும்பத்திலிருந்து தோன்றவேண்டும்
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் திரையில் தோன்றிய ஜோதிகா
ஒவ்வொரு குடும்பமும் பார்க்கவேண்டிய பெண்ணுலகத்தின் பக்கங்கள்
முருகபூபதி


உடைகள் உலர்த்தும்சீட்டாட்டம் நடக்கும்பெற்றோருக்குத் தெரியாமல் இளசுகள் திருட்டுத் தம்தண்ணி அடிக்கும்பெண்கள் அப்பளம், வடாகம், மோர் மிளகாய், ஊறுகாய் காயப்போடும், எதிர் எதிர் வீட்டு இளசுகள் கண்களினால் காதல் மொழி உதிர்க்கும் மொட்டை மாடிகளில் பசுமைப்புரட்சியும் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கும் படம் 36 வயதினிலே.
திருமணத்திற்குப்பின்னர் கமெராவுக்கு முன்னால் நடிக்காதிருந்த ஜோதிகா மீண்டும் திரைப்பிரவேசம் செய்து கலக்கியிருக்கும் படம்.
ஒவ்வொருவரிடமும் ஏதோவொரு திறமை ஒளிந்திருக்கும். ஆனால் , வெளியே தெரிவதில்லை. குடும்பம், தொழில், சுற்றுச்சூழல் அவர்களின் திறமைகளை மறைத்துவிடும். தங்களிடமிருப்பதை தேடி ஆராய்ந்து வெளிப்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்காது. தப்பித்தவறி வெளிப்பட்டாலும்அதில் குறைகண்டு பிடித்தே அவமானப்படுத்திவிடும் சமூகம், எப்பொழுதும் பாதகமான விடயங்களையே பேசி சுயதிருப்தியடைகிறது.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்என்று காலம் பூராகவும் சொல்லிச்சொல்லியே பெண்ணை பூசித்து, புறம் ஒதுக்கிவிட்டு விடுகிறது இச்சமூகம். ஆண் முன்னிலை வகித்துவிடுகின்றான்.
பெண்ணை பூமாதேவி, பொறுமை காப்பவள் என்றும் வேறு புகழாரங்கள். ஆனால், அந்தப்பூமாதேவியிடமும் பூகம்பம் கருக்கொண்டிருக்கும் உண்மை அதிர்வு வரும்பொழுதுதான் தெரிகிறது. அப்பொழுது இயற்கை அநர்த்தம் என்று சொல்லிவிடுவார்கள்.
36 வயதினிலே வழக்கமான சமகாலப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது.
அடிதடிக்காட்சிகள், அடியாள் அரசியல், கனவுக்காதல் காட்சிகள் பஞ்ச் டயலக், முதலான வழக்கமான மசாலாத்தனங்கள் அற்று இயல்பான கனவுளை விதைத்து விருட்சமாக்கும் கலையை திரையில் காண்பிக்கிறது 36 வயதினிலே.

படத்தின் தொடக்கத்திலிருந்து பேசப்படும் அந்த முடிச்சு இடைவேளைக்குப்பின்பு வரையில் நீடித்து இறுதியிலேயே அவிழ்ந்து புத்துணர்ச்சியை மலரச்செய்கிறது.
ஒவ்வொருவர் கையெழுத்தும்தான் அவரவர் தலையெழுத்து என்பதை அழகாக ஆணித்தரமாக தெரிவிக்கும் இந்தப்படத்தின் திரைக்கதையும் வசனங்களும் அருமை. நாம் தொலைத்துவிட்ட வாழ்க்கையையும் தேடிக்கொண்ட துன்பங்களையும் நோய்களையும் யதார்த்த பூர்வமாக சித்திரித்துள்ளது 36 வயதினிலே திரைக்கதை.
சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றும் கணவன் தமிழ்ச்செல்வனுக்கு ( ரகுமான்) அயர்லாந்து சென்று குடியேறி வாழ்க்கையின் சுகங்களை அனுபவிக்கவேண்டும் என்ற கனவு. பிரசவ வலி சுமந்து பெற்றெடுத்தாலும் அப்பாவுக்குப் பிள்ளையாகி தாய் வசந்தியை அடிக்கடி ஏகவசனத்தில் கேலி செய்யும் மகளுக்கும் தந்தையை பின்பற்றிய கனவு.
கார்ச்சாரதி அனுமதிப்பத்திரத்தின் Expiry Date உம் தெரியாமல் காரைச்செலுத்தியே பழக்கமில்லாமல் வேலைக்கு பஸ்ஸில் ஓடியும்வீட்டையும் கணவன், மகள், மாமன் மாமியையும் பராமரித்து , இயந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் வசந்திக்கும் ( ஜோதிகா) கனவுகள் இருக்கின்றன. ஆனால், அவள் கனவு முழுவதும் அந்தக்குடும்பத்திற்குள்ளே மாத்திரம்தான். அவளுக்கு வீடும் குடும்பமும்தான் உலகம்.

அவளிடம் முகநூல் கணக்கும் இல்லை. தற்காலம் குறித்த நவீன சிந்தனைகளும் இல்லாமல், கணவனுடன் அயர்லாந்துக்கு செல்ல முடியாதுபோனதற்கு தனது வயதும் ஒரு காரணம் என நினைத்து நரைத்துவிட்ட சில தலைமுடிகளுக்கும் டை அடித்து தன்னை இளமையாக காண்பித்துக்கொள்ள விரும்பும் இயல்பு வசந்திக்கு.
வீதியில் நிகழ்ந்துவிட்ட எதிர்பாராத விபத்தினால் தனது வெளிநாட்டுப்பயணம் இரத்தாகிவிடும் என்ற கவலையில் மூழ்கியிருக்கும் கணவனின் குற்றத்தை, தனது செல்லுபடியற்ற கார் லைசன்ஸை காண்பித்து கணவனுக்கு உதவ முன்வரும் வசந்தியின் அப்பாவித்தனம்அதனை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள முயலும் கணவனின் ஆணாதிக்கம், அது செல்லுபடியற்றது எனத் தெரிந்ததும்அவனது இயலாமைதான் மனைவியிடம் கோபமாக கொப்பளித்து உடைந்து நொருங்குகிறது. ஆனால்ஆணாதிக்கம் சுடுசொற்களினால் அவளைத் தொடர்ந்து காயப்படுத்துகிறது.
எதற்குமே லாயக்கற்றவள் என்று ஏளனப்படுத்தப்படும் அவள் சொல்கிறாள்:- ” பிரசவ வலி எந்தப்பெண்ணுக்கும் வரும். ஆனால், நேசிக்கப்படும் கணவனால் அவமானப்படுத்தப்படும்பொழுது வரும் வலி மிகவும் கொடுமையானது.”

வாகனவிபத்தில் சிறுவனை காயப்படுத்திவிடும் கணவன், அதிலிருந்து தப்பிக்க தந்திரோபாயங்களை தொடரும் அதே வேளையில்அவன் மனைவியை பொலிஸ் திணைக்களம் கண்காணிக்கிறது. ஏதோ மர்மம் போன்று முடிச்சு இறுகுகின்றது. கணவன் சம்பந்தப்பட்ட குற்றச்செயலுக்கும் மனைவி மீதான பொலிஸ் கண்காணிப்புக்கும் இடையே உருவாகும் முடிச்சின் மர்மம் புலப்படாமல் பல நிமிடங்கள் ரசிகர்கள் தவிக்கும் வேளையில், பொலிஸ் கொமிஷனர் ( நாசர்) சொல்லும் தகவல் ஜோதிகாவுக்கு மாத்திரமல்ல அவள் பணியாற்றும் அலுவலகத்திற்கும் அவள் குடும்பத்திற்கும் அவள் நடமாடும் குடியிருப்பு பகுதிக்கும் மாத்திரமல்ல எமக்கும் இன்ப அதிர்ச்சியை தருகிறது.
பாரத நாட்டின் மாண்புமிகு ஜனாதிபதியுடன் சந்திப்பும் காலை நேரத்து விருந்தும் அவளது வாழ்வில் பொன்னான சந்தர்ப்பமாக வந்து அமைகிறது. ஆனால், அந்த சந்தர்ப்பம் அவள் மகள் மூலமாகத்தான் வந்துள்ளது என்பதை அறிந்து, மகள் கற்கும் கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியிடம் மகள் கேட்ட கேள்வி என்ன…? என்பது இத்திரைப்படத்தின் முக்கியமான முடிச்சு. அதனை அவிழ்ப்பதற்குள், வசந்தியின் வாழ்வில் எத்தனையோ நடந்துவிடுகிறது.
அந்த இமாலயக் கேள்வியை உனக்கு சொல்லித்தந்தது யார்…? ” என்ற ஜனாதிபதியின் கேள்விக்கு மகள் தனது தாயையே குறிப்பிடுகிறாள். ஆனால். இந்தக்காடசிகள் திரைப்படத்தின் மறைபொருள். தாயே மறந்துவிட்ட அந்தக்கேள்விக்காகவே ஜனாதிபதி காலை வேளை விருந்துக்கு தாயை அழைக்கிறார். அவள் குடும்பமும் ஊரும் ( திருவல்லிக்கேணி) அலுவலகமும், புடவைக்கடையும், மறக்கறி வண்டில்காரனும் சிநேகிதியும் பஸ் பயணிகளும் மட்டுமல்ல நாங்களும் அதிசயிக்கின்றோம்.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் அந்தக் கேள்வி பற்றி அவர் பிரஸ்தாபித்தால் என்ன சொல்வது…? என்பது தெரியாமல் மகளைக்கெஞ்சிக்கேட்டும், மகள் இறுதிவரை அதனைச்சொல்லவில்லை.
தினமும் தொலைக்காட்சி சீரியல் பார்க்கும் அவள் தாய்க்கு ஜனாதிபதிக்கு ஊறுகாயும் கமர்கட்டும் பிடிக்கும் என்பது மாத்திரம் தெரிந்திருக்கிறது. மகளுடன் ஜனாதிபதி மாளிகைக்கு துணைக்குவரும் தாய், அவற்றையும் எடுத்துவந்து மகளுக்கு அலுப்பேற்றுகிறாள். பாதுகாப்புத்துறை அதனை நிராகரிக்கிறது.
சுற்றிலும் கறுப்பு பூனைகளின் ஆயுதம் ஏந்திய கண்காணிப்பு, பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் தோன்றும் ஜனாதிபதி, அவளைக்கண்டதும்நமஸ்தேஎன்று கைகூப்பி வணங்கினாலும் அவளால் பதிலுக்கு கைகூப்ப முடியவில்லை. அதிர்ச்சியில் அவள் மயங்கிவிழுந்து அரியதொரு சந்தர்ப்பத்தை இழந்து பேரவமானங்களை சந்திக்கின்றாள்.

முகநூல்களில் ஏளனப்படுத்தப்படுகிறாள். கணவனும் மகளும் அவளை தொடர்ந்தும் காயப்படுத்துகின்றனர். இறுதியில் அவளது கனவுகளை தகர்த்துக்கொண்டு கணவனும் மகளும் அவளை விட்டு விட்டு அயர்லாந்து புறப்படுகையில் அவள் உடைந்தே போகிறாள்.
அதுவரையில் அந்தக்கேள்வி என்ன…? என்று தாய்க்கு சொல்ல மறுக்கும் மகள், விமான நிலையத்தில் விடைபெறும்பொழுதுஅதனை இப்பொழுது சொல்லவா…? ” எனக்கேட்கும் பொழுது நாமும் அறிவதற்கு ஆவல்படுகின்றோம்.

கணவன் , மகளுடன் புறப்பட முடியாமல் ஜனாதிபதியுடனான சந்திப்பும் படுதோல்வியில் முடிந்து ஏமாற்றத்தையே தாங்கிக்கொண்டிருக்கும் அவளுக்கு அந்தக்கேள்வியை அறியும் ஆர்வமும் அற்றுப்போய்விடுகிறது.
எமக்கும் ஏமாற்றம்தான்.
ஆனால் , அவளுக்குள் பாடசாலைக்காலத்திலிருந்த ஆளுமையையும் ஆற்றலையும், துணிவையும் மீண்டும் துளிர்க்கவைக்கிறாள் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிநாட்டிலிருந்து வந்து அவளைச் சந்திக்கும் தோழி சுஸான்.

நான்கு ஆண்பிள்ளைகள் இருந்தும் கவனிப்பாரற்றுஒரு வர்த்தக நிறுவனத்தின் அதிபர் வீட்டில் சமையல்காரியாக இருக்கும் அந்த அயல்வாசி முதிய பெண்ணுக்கு சுகவீனம் வந்தபொழுது தனது வீட்டில் பயிரிட்ட காய்கறிகளை எடுத்துச்சென்று கொடுக்கும் அவளுக்குஅந்த முதிய பெண்ணின் அசட்டுத்தனமான வழிகாட்டுதலினால் அவளுக்கு மற்றும் ஒரு இன்ப அதிர்ச்சி வருகிறது. ஆனால், அதனைப்பகிர்ந்துகொள்வதற்கு அவள் நேசித்த கணவனும் அருமை மகளும் அவள் அருகில் இல்லை.
அவள் பீனிக்ஸ் பறவைபோன்று எவ்வாறு உயிர்த்தெழுந்தாள்…? சட்டசபையிலும் ஊடகங்களிலும் அவளது பெயர் பேசப்பட்டு உயர்ந்த கௌரவத்தை அவள் எப்படிப்பெற்றால்…? ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட மில்லியன் டொலர் பெறுமதியான அந்தக் கேள்வி என்ன…? அவளின் கனவுகள் எந்த ரூபத்தில் நனவாகின…? சமுதாயமாற்றத்திற்கு அவள் சொன்ன செய்தி என்ன…?

36 வயதினிலே படத்தைப்பாருங்கள்.
நீங்கள் அனைவரும் உங்களையும் அதில் தேடுவீர்கள்….?
இந்த உலகமும் தொலைத்துவிட்ட பல உண்மைகளை மீண்டும் தேடும்.
How old are you என்ற மலையாள திரைப்படத்தின் தமிழ்த்தயாரிப்பு.
தயாரிப்பு ஜோதிகாவின் கணவர் நடிகர் சூரியா.
இயக்குநர்: ரோஷான் அன்ரூஸ்

முருகபூபதி


No comments: