Tuesday, October 20, 2015

வெளியேறும் தலைவர்கள் தனிமையில் வைகோ

திராவிட முன்னேற்றக்கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றுக்கு மாற்றான மூன்றாவது அணியை ஏற்படுத்த வேன்டும் என்ற தமிழக அரசியல் தலைவர்களின் ஆசை மீண்டும் நிராசையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் அரசியல் அநாதைகள் ஆக்குவோம் என்ற  வீறாப்புடன் பாரதீய ஜனதாக்கட்சியுடன் இணைந்து நாடாளுமன்ற்த்தேர்தலைச் சந்தித்து தோல்வியடைந்த தமிழக அரசியல் தலைவர்கள்,சூடுகண‌டபின்னும் தன்னிலை உணராது செயற்படுகின்றனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்  கழகம்   ,விடுதலைச்சிறுத்தைகள்,மனிதநேயக் கட்சிகொம்யூனிஸ்ட் கட்சி மாக்சிஸ்ட் கட்சி,காந்தீய மக்கள் இயக்கம் ஆகியன ஒன்று சேர்ந்து தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தின.இலங்கைப்பிரச்சினை,ஊழல்,மதுவிலக்கு ஆகியவற்றுக்காக ஒருமித்துக் குரல் கொடுத்த இக்கட்சிகள் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் என்ற  பெயரில் தமிழக அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தன.  அந்தபோராட்டங்கள் கொடுத்ததெம்பினால் மத்திய அரசுக்கு எதிராகவும் போராடின. மீதேன் எரிவாயுத் திட்டம்,காவிரி நதிநீர்பிரச்சினை,தனியார்மயமாக்கல் போன்றவற்  றை முன்னிலைப்படுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தின.


ஆறு கட்சிகள் இணைந்து நடத்திய போராட்டங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்தன.விஜயகாந்த் ,வாசன் ஆகியோரையும் இந்த கூட்டு இயக்கத்தினுள் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.திட்டமிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஒதுக்கப்பட்டது.காந்தீய மக்கள் இயக்கம்காரணம் சொல்லாமல்  கூட்டு இயக்கத்தில் இருந்து வெளியேறியது.

மக்கள் நலன் காக்கும் இயக்கத்தை அரசியல் கூட்டணியாக மாற்ற வேண்டும் என வைகோ விரும்பினார். வைகோவின் விருப்பத்துக்கு மனித நேயக்கட்சித்தலைவர் ஜவாஹிருல்லாவிடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவள‌வன் ஆகியோர் எதிர்ப்புத்தெரிவித்தனர்.

ஜெயலலிதாவை வீழ்த்துவதற்கு கருணாநிதியின் கரத்தைப் பலப்படுத்த வேண்டும் என திருமாவளவன் கருத்துத் தெரிவித்துள்ளார்.திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வெளியேறிய திருமாவளவன்ஜெயலலிதாவின் பக்கம் சாய்வார் என்ற சந்தேகம் இருந்தது.தமிழக அரசியல் நிலைவரத்தை மிக நன்றாகப் புரிந்து கொண்ட திருமாவளவன் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சாதக சமிக்ஞை காட்டியுள்ளார்.

வெற்றி பெறும் கூட்டணியில் சேர வேண்டும் என்ற ஜவாஹிருல்லாவின் குரல் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால் வைகோ எரிச்சலடைந்துள்ளார்.வைகோவின் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கட்சி மாறியவேளையில் ஜவாஹிருல்லாவின் குரல் ஓங்கி ஒலித்துள்ளது. மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தில் இருந்து ஜவஹிருல்லாவின் கட்சி வெளியேறி விட்டது.

காந்தீய மக்கள் இயக்கம்மனிதநேயக்கட்சி ஆகியன வெளியேறிவிட்டன. விடுதலைச் சிறுத்தைகள் மதில் மேல் பூனையாக உள்ளது. கொம்யூனிஸ்ட் கட்சியும் மாக்சிஸ்ட் கட்சியும் வைகோவின் பின்னால் உள்ளன.கருணாநிதிய மிகக்கடுமையாகச் சாடிய இடது சாரிகள் ஜெயலலிதாவின் பின்னால் அணிவகுத்து நின்றனர். ஜெயலலிதா கைவிட்டதனால் போக்கிடமின்றி வைகோவின் கையை பற்றிபிடித்துள்ள‌னர்.இடது சாரிக்கட்சிகளின் தேர்தல் கூட்டணியை தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய குழுவிடம்  இருப்பதனால் இவர்கள் எப்போ வைகோவை கைவிடுவார்கள் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது.

ஜெயலலிதாவுடன் இணைவதற்கு மனித நேயக்கட்சி விரும்புகிறது. கடந்த சட்ட மன்றத்தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட மனித நேயக்கட்சி இரன்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது ராஜ்ய சபா தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் சாய்ந்தது.பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறியது.மனித நேயக்கட்சியை ஜெயலலிதா புறக்கணித்தால் அக்கட்சி கருணாநிதியிடம் சரணடையும்.

சிறந்த  பேச்சாற்றல் உள்ள‌ வைகோ
அரசியலில் வெற்றி பெறக்கூடிய முடிவை எடுக்காமையினால்  வெற்றிகரமான தலைவராக் வலம்வர அவரால் முடியவில்லை. கட்சியின் தொடர் தோல்விகளால் பொறுமை இழந்த அவரது கட்சியின் இரண்டாம்  கட்டத்தலைவர்கள் வெளியேறுகின்றனர். வெற்றி பெற்றால் தான் அரசியலில் நிலைத்து நிற்க முடியும் என்ற உணமையை உணர்ந்தவர்கள் வெளியேறுகின்றனர். இரண்டாம் கட்டத்தலைவர்களின் வெளியேற்றம் வைகோவை எரிச்சலடைய வைத்துள்ளது.

பாரதீய ஜனதாக்கட்சியை விட்டு வெளியேற மாட்டேன் என விஜயகாந்த் அடம் பிடிக்கிறார்.கருணாநிதியும் வைகோவும் விஜயக்காந்துக்கு வலை விரித்துள்ளனர். விஜய காந்தின் மனைவி திராவிட  முன்னேற்றக்கழகத்தை  மிக மோசமாக தாக்கிப்பேசுகிறார்.ஆகையினால் கருணாநிதியின் பக்கத்துக்கு விஜயகாந்த் செல்வதற்கு வாய்ப்பு இல்லை.விஜயகாந்த் வருவார் என வைகோ ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்.விஜயகாந்த்  திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு செல்லக்கூடாது என்பதே ஜெயலலிதாவின் விருப்பம். அவரின் விருப்பத்தை விஜயகாந்த் நிறைவேற்றுவார்  என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் உள்ள‌து.

திரவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,பாரதீய ஜனதாக் கூட்டணி,மக்கள் ந‌லன் காக்கும் கூட்டு இயக்கம் என நான்கு முனைப்போட்டி நடந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா,திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கிடையேதான் போட்டி இருக்கும் மற்றைய கட்சிகளால் வாக்குகளைப்பிரிக்க முடியுமே தவிர வெற்றி பெறுவது சிரமமான காரியம். திராவிட முன்னேற்றக் கழகம்அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன் இர‌ண்டும் வைகோவை வீழ்த்துவதற்கான வியூகங்களை வகுக்கும்.இந்த வியூகத்தில்  இருந்து வைகோவால் மீளமுடியாது. கடந்த நாடாளுமன்றத்தேர்தலிலும் இதுதான் நடந்தது.மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தில் முதலமைச்சர் வேட்பாளர்  யார் என்று கூட்டு இயக்கத்தில் உள்ள கட்சிகளுக்கே தெரியாது.முதலமைச்சர் வேட்பாள‌ரை அறிவிக்காத கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கத்தயங்குவார்கள்.

ஜெயலலிதாவும் கருணாநிதியும் முதலமைச்சர் போட்டியில் முன்னணியில் நிற்கிறார்கள்.முதல்வராகும் ஆசையுடன் பாரதீய ஜனதாக்கட்சியின்  தயவை எதிர் பார்க்கிறார் விஜயகாந்த்.
வர்மா

தமிழ்தந்தி18/10/15



No comments: