இராமர் இருக்கும் இடம் அயோத்தி என்பதுபோல ஜெயலலிதா இருக்கும் இடம்தான் தமிழக அரசு இயந்திரம் இயங்கும் இடம் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. ஒய்வெடுப்பதற்காக கொடநாடு பங்களாவுக்கு ஜெயலலிதா சென்றுள்ளார்.அங்கிருந்தபடியே தமிழக அரசு இயந்திரத்தை அவர் இயக்குவார்.தமிழக மக்கள் பலபிரச்சினைகளுக்கு முமம் கொடுக்கமுடியாது தடுமாறுகிறார்கள் முதல்வர் ஜெயலலிதா கொடநாடு பங்களாவில் உல்லாசமாக ஓய்வெடுக்கிறார் என எதிர்க்கட்சியின கூப்பாடுபோடுகின்றனர். ஜெயலலிதா கொடநாடு பங்களாவில் இருந்தபடியே தமிழக அரசை இயக்கும் அதேவேளை கழகத்தையும் கட்டுக்கோப்பாகப் பார்க்கிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பதினேழாவது ஆண்டுவிழா கோத்தகிரிக்கு இடமாற்றம் பெற்றுள்ளது. ஜெயலலிதா கொடநாட்டில் தங்கி இருப்பதனால் சென்னையில் நடக்க வேண்டிய கழகத்தின் ஆண்டு விழா கோத்தகிரியில் மிக மிக எளிமையாக நடை பெற்றது. எந்தவிதமான பகட்டும் இல்லாமல் ஐந்து நிமிடங்களில் ஆண்டுவிழா முடிவடைந்தது. ஆனால் ஜெயலலிதாவுக்கு பிரமாண்டமான வரவேற்பளிக்கப்பட்டது. திரும்பும் இடமெல்லாம் அவரை வாழ்த்தி பனர்கள் கட்டவுட்டுக்கள் வைக்கப்பட்டன.கூடைகூடையாக பூக்கள் தூவி ஜெயலலிதா வரவேற்கப்பட்டார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆண்டுவிழாவா ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழாவா என்ற சந்தேகம் ஏற்பட்டது. கழகத்தைப்பற்றிய அறிவிப்பு வாழ்த்து எவையுமே அங்கு காட்சிப்படுத்தப்படவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆண்டுவிழாவுக்கு முந்தைய நாள், வழக்கம்போல் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதினார் ஜெயலலிதா. ‘தமிழக மக்களின் மகிழ்ச்சிதான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும், வளமான வாழ்வும்தான், நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்’ என கடிதத்தில் உருகியிருக்கிறார் ஜெயலலிதா. ‘சட்டமன்றத் தேர்தலில் பெரு வெற்றி பெற்றிட இன்றே பணிகளைத் தொடங்க வேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார்.
தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கொடநாட்டில் குவிந்தார்கள். ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை படவேண்டும் என்பதே இவர்களது முக்கிய நோக்கம். போக்குவரத்து நெருக்கடியில் கோத்தகிரி திணறியது.பயணப்பாதை மாற்றப்பட்டதனால் பொது மக்கள் சிரமப்பட்டார்கள்.
தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றபின்னர் ஜெயலலிதா பல கடிதங்கள் எழுதிவிட்டார்.பிரதமர் மோடியின் விலாசத்துக்கு அவர் எழுதிய கடிதங்களுக்கு என்ன நடந்ததெனத்தெரியாது. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பல கடிதங்கள் எழுதினார். அவற்றுக்கும் என்னநடந்ததென இன்றுவரை தெரியாது. இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை ந்டத்திய தாக்குதல் பற்றி கருணாநிதி அன்று பலகடிதங்களை பிரதமரின் விலாசத்துக்கு அனுப்பினார். அன்று கருணாநிதியைக் கேலிசெய்த ஜெயலலிதா இன்றைய பிரதமருக்கு கடிதங்கள் எழுதுகிறார்.
தமிழக மீனவர் பிரச்சினை பற்றி பேசுவதற்கு பிரதமரைச் ச்ந்தித்துப்பேச அண்ணா திராவிட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் விண்ணப்பம் கொடுத்து ஒரு வாரமாகியும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் வரவில்லை. வழமையாக ஓரிரு நாட்களில் பதிலளிக்கப்படுவது வழமை.
இதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மத்திய அரசு உதாசீனம் செய்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு விஜயம் செய்த பிரதமர் சம்பிரதாயங்களை மீறி ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்தார். பிரதமரை சந்திக்க ஜெயலலிதாவின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் முடியவில்லை.மத்திய அரசின் அரசியல் சதுரங்கத்தில் இதுவும் ஒன்று
கொடநாட்டில் ஜெயலலிதா ஒருமாதம்தங்கி இருப்பார் எனறுதெரிவிக்கப்படுகிறது. ஒருமாத நிகழ்ச்சிநிரல் அனைத்தும் கொடநாட்டைச்சுற்றியே நடைபெறும். சும்மா இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு நல்ல தீனி கிடைத்து விட்டது. தமிழக அரசியலில் வழ்மையாக நடைபெறும் சம்பவம்தான் இது.இவற்றுக்கெல்லாம் ஜெயலலிதா அசைந்து கொடுக்க மாட்டார். அவர் கொடநாட்டில் இருந்தபடியே தான் நினைத்ததை நடத்துவார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆண்டு விழாவில் ஜெயலலிதா ஏதாவது முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என நினைத்திருந்த தொண்டர்கள் ஏமாந்துவிட்டனர். அவரது உடல்நிலை சரியில்லை என்பதனால்தான் ஆண்டு விழாவில் பேசவில்லை என கருதப்படுகிறது.
சென்னையில் இருந்தபோதுகூட ஜெயலலிதா வெளியில் நடமாடவில்லை. முக்கிய நிகழ்ச்சிகளை அலுவலகத்தில் அல்லது வீட்டில் இருந்தபடி ஆரம்பித்து வைத்தார். அப்போதே அவருடைய உடல்நிலை பற்றி அரசல்புரசலாக செய்திகள் வெளியாகின.இதெல்லாம் எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்த அவல், இதனால் தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள்.
நமக்கு நாம் என்ற ஸ்டாலினின் நடைப்பயணம் தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. உடல்நிலை காரனமாக கருணாநிதி வெளியூர் போக முடியாத நிலையில் ஸ்டாலின் களத்தில் இறங்கியது அவர் மீது நம்பிக்கையை உருவாக்கி உள்ளது. ஸ்டாலினின் நடைப்பயனம் மக்களுடனான சந்திப்பு என்பன அவர்மீதான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
ஸ்டாலினுடன் செல்பி எடுக்க முற்பட்ட ஒருவர் அவரால் தாக்கப்பட்ட வீடியோ வைரசாக பரவியது. மெட்ரோரயில்பயணத்தின் போது ஸ்டாலினால் ஒருவர் தாக்கப்பட்டார். இன்னொரு சந்தர்ப்பத்தில் ஸ்டாலினை நெருங்கிய ஒருவர் தாக்கப்பட்டார். இப்போது மூன்றாவது முறையாக ஸ்டாலின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.செல்பி எடுக்க முற்பட்டபோது ஸ்டாலினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுபவர் ஸ்டாலினுடன் இணைந்து எடுத்த செல்பி மறுநாள் ஊடகங்களில் முக்கிய இடத்தைப்பிடித்தது. முன்னைய தாகுதல்களின் போது அப்படி எதுவும் நடக்கவில்லை என ஸ்டாலின் தெரிவித்தார். இப்போது ஒருபடி முன்னேறி தன்னால் தாக்கப்பட்டதாகக்கூறியவரை யே அழைத்து செல்பி எடுத்து மற்றவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.
ஸ்டாலினின் நடைப்பயணத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சிலர் ரசிக்கவில்லை. அழகிரி மீண்டும் வருவார் என நினைப்பவர்கள் ஸ்டாலினின் வளர்ச்சியை விரும்பவில்லை. நடைப்பயணத்தால் மக்களின் மனதைக் கவர்ந்த வைகோவும் ஸ்டாலின்மீது சீறிவிழுந்துள்ளார்.வைகோவின் நடைப்பயணம் மக்களைத் திரும்பிப்பார்க்க வைத்தது உணமைதான். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவரது நடைப்பயணம் உதவவில்லை. ஸ்டாலினின் நிலையும் அப்படித்தான் இருக்கும் என அவர் சாடியுள்ளார்.
கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். சக்கர நாற்காலியில் இருந்தபடி சகல அலுவல்களையும் செய்து முடிக்கிறார். ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அவ்வப்போது தகவல்கள் வெளிவந்தாலும் உண்மை நிலைவரம் எவருக்கும் தெரியாது.முதல்வ ர்பதவியை பிடிக்கும் போட்டியில் இருக்கும் ஸ்டாலினின் உடல்நிலை நடுநிலையான வாக்காளர்களை கவரும். இது தேர்தல் முடிவை மாற்றும் காரணியாகவும் அமையலாம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அழகிரி வெளியேற்றப்பட்டநிலையின் ஸ்டாலினின் நடைப்பயனம் அவரது ஆதரவாளர்களூக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
வர்மா
தமிழ்த்தந்தி
25/10/15
No comments:
Post a Comment