Saturday, October 3, 2015

மண்ணில நல்ல வண்ணம் வாழலாம்



இலங்கையில் ஆங்கிலேயர் வருகையுடன் மேற்கத்தைய மயமாதல் {West  ernization} ஏற்படத்தொடங்கியபோதுதான்  "மேன்மைகொள் சைவநீதி" ஆட்டங்காணத்தொடங்கியது. அந்நாட்களில் சமூக மாற்றத்துக்கான ஓர் உபாயமாக கிறிஸ்த‌வ மதத்தைத் தழுவும்வழமை ஏற்படத் தொடங்கிய போது, அதுவரை மறுக்கப்பட்டிருந்த உயர்கல்வி வாய்ப்புகள்கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கிடைக்கத்தொடங்கின. உயர்கல்வி வாய்ப்புகளினூடாக சமூக மாற்றம்   மேற்கத்தையமயமாதலின் அம்சங்களைப்பெற்றுஅதுகாலவரை நிலவிவந்த ஏற்றத்தாழ்வு மிகுந்த பாரம்பரிய  சமூக அமைப்பின் பாரிய மாற்றங்களைத் தோற்றுவித்து விடுமோ என்ற அச்சமே இச்சமூகமாற்றம் குறித்து அந்நாளில் சைவசமயப் பாதுகாவலர்கள்  { நாவலர் உட்பட}விழிப்புநிலை அடையக் காரணமாயிற்று. இவர்கள் சைவசமயத்தின் பாதுகாவலர்களாகத் தம்மை வெளிக்காட்டிக்கொண்டு "காலனி த்துவம்,பாரம்பரியகுல ஏற்றத்தாழ்வுச் சமூக முறைமை ஆகிய இரண்டினையும் நுணுக்கமான‌ ஒரு ச‌ம‌நிலையில் வைத்துப் பேணும் ந‌டைமுறை அத்த‌னையையும் அறிமுக‌ப்ப‌டுத்த முய‌ன்ற‌ன‌ர்".

இத்த‌கைய‌ சமூக‌ச் சூழ‌லிலேயே  "பிற‌ந்த‌ குல‌ம் மேலோங்க‌ பேணிக்காக்கும் பெரும் ப‌ணி"யை  வ‌திரியைப் பிற‌ப்பிட‌மாக‌க்கொண்ட‌ சைவ‌ப்பெரியார்  திரு.கா.சூர‌ன் மேற்கொண்டார். 'அன்ன‌யாவினும் புண்ணிய‌ம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்த‌றிவித்த‌ல்' என்ற‌ பார‌தியின் பிர‌க‌ட‌ன‌ம் சூர‌னின் ப‌ணியில் விள‌க்க‌ம் பெற்ற‌து. 'அறியாமை அக‌ல‌ அறிவு வ‌ரும் அந்த‌ அறிவு சைவ‌ வாழ்வின் மேன்மையை உண‌ர்த்தி எம‌க்கு ஈடேற்ற‌ம் த‌ரும்' என்ப‌தே சூர‌னின் ச‌மூக‌ப்ப‌ணியின் அடிப்ப‌டை ஆயிற்று. முப்ப‌து வ‌ய‌துக்குள் முழுமையான‌ ச‌மூக‌ நோக்கு சூர‌னிட‌ம் முகிழ்த்த‌து. இந்த‌ச் ச‌மூக‌ நோக்கே தேவ‌ர‌யாளிச் சைவ‌ வித்தியாசாலையின் ஆர‌ம்ப‌த்திற்குக் கால்கோளாயிற்று. சைவ‌ ச‌ம‌ய‌ப் ப‌ணியில் நாட்ட‌முள்ள‌ த‌ன‌து ச‌மூக‌த்த‌வ‌ர‌யும் இணைத்துக்கொண்டு சூர‌னின் க‌ல்விப்ப‌ணி தொட‌ர்ந்த‌து; ப‌ல‌ இட‌ர்க‌ளைத்தான்டி வ‌ள‌ர்ந்த‌து.


  சூரனின் இலட்சியம் தெளிவானது. அது, ச‌மூகப் பள்ளியினூடு சமூக விருத்தியையும் சமூக அறிவுத்தெளிவையும் ஏற்படுத்த முனைந்தது. 'சமூகப்பள்ளி' {Community school} என்பது  ஒரு குறித்த சமூகத்தினர் படிப்பதற்கான பாடசாலை அன்று. சமூகத் தேவையை   நிறைவேற்றக்கூடியதாக்ப் பாடசாலையின் குறிக்கோள்களை வகுப்பதும் பாடசாலைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாகச் சமூகச் செயல்களைத் திட்டமிடுவதும்' எனப் பாட‌ச்சாலையும் சமூகமும் ஒரே நோக்கத்திற்காகச் செயற்படும் வகையில் அமையும் பள்ளியே சமூகப்பள்ளி என்ற  இற்றைநாள் விளக்கத்தை அன்றே சூரன் உணர்ந்திருந்தார். 'கன்மயவப்பட்டு இந்நிலைமையில் பிறந்த நாம் சிந்திக்கத் தெரிந்து கொள்ளும் அறிவை இறைவன் மனிதவர்க்கத்துக்கு அருளியபடி நாங்களே எங்கள் பாட்டுக்கு கல்வி கற்று  அறிவைப் பெருக்கி  ந‌ல்லொழுக்கம், இறைவழிபாடு முதலியவைகளால் மேம்பட்டு உயர் சாதி மக்களை நாண‌ச்செய்ய வேன்டும் என்பதே எனது இலட்சியம்' என்ற சூரனின் கூற்றில் சமூகப்பள்ளியின் குறிக்கோளின் அடிநாதமே தொனிக்கிறது.

சமூகப்பள்ளியின் குறிக்கோள் சூரனின் உணர்வில் கலந்திருந்தத‌னாலேயே இன்றைய 'வதிரி பூவற்கரைப் பிள்லையார் ஆலயம்' அன்றைய 'வதிரி பூவற்கரை அண்ணமார் கோயில்' ஆக விளங்கிய வேளையில்  அங்கு வழ‌மையாகி இருந்த உயிர்ப்பலியை நிறுத்துவதற்காக, ஆட்டின் தலைக்குப் ப‌திலாக   தனது கழுத்தை வெட்டுமாறு  பணிக்கும் துணிச்சலையும் மன ஓர்மத்தையும் அது சூரனுக்குக் கொடுத்தது. வெற்றியும் கண்டது. உயிர்ப்பலி தொடர்பான சூரனின் தீரச்செயல் அவரது மாணவர்களையும் வீறுகொண்டெழச்செய்தது. சூரனின் விதைப்பின் அறுவடையான 'பிறிலிம்' மாணவர் ஒருவர் அன்றைய 'ஈழகேசரி' பத்திரிகையில் 'ஓர் ஆட்டின் பிரலாபம்' என்ற கட்டுரையினூடாக உயிர்ப்பலியிடுதலின் அநீதியைத்  தோலுரித்துக் காட்டினார். சூரனின் அறுவடையான மாணவர்களின் எழுச்சி வதிரி பூவற்கரையை அண்டிய, உயிர்ப்பலியிடும் அண்ணமார் ஆலயங்களிலும் உயிர்ப்பலி நீக்கம் ஏற்பட வழிவகுத்தது. எனினும், வதிரி பூவற்கரை அண்ணமார் ஆலயத்தில் உயிர்ப்பலி நீக்கம் நிகழ்ந்து ஒருகால் நூற்றாண்டின் பின்னரே அயற்கிராமமான அல்வாயில் உள்ள அண்ணமார் ஆலயத்தில் உயிர்ப்பலி நீக்கம்  ஏற்பட முடிந்தது. இச்சமூகத்தில் வழ‌மையாகிப்போன ஒன்றை மாற்றுவதென்பது எவ்வளவு சிரமமானது என்பதை உணர்த்தி, இந்த 'மாற்றவிசையை' {Change force} பொருத்தமாகப் பிரயோகித்த சூரனின் வீரியத்திற்குக் கட்டியம் கூறி நிற்கிறது.  

 1923 இல்  பெரியார் சூர‌ன் கார‌ண‌மாக‌ உயிர்ப்ப‌லி நீக்க‌ம் நிக‌ழ்ந்த‌ ஆல‌ய‌ம் எண்ப‌து ஆண்டுக‌ளின் பின்ன‌ர்  இன்று சித்திர‌த்தேர் காண்கிற‌து.
க‌லாநிதி.த‌.க‌லாமணி
க‌ல்வியிய‌ற்துறை,
யாழ்ப்பாண‌ப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம்.
வ‌திரி பூவ‌ற்க‌ரைப் பிள்ளையார் ஆல‌ய‌
சித்திர‌த்தேர் வெள்ளோட்ட‌ சிற‌ப்பு ம‌ல‌ர்
01/08/2003



No comments: