திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் ஒன்று
சேர்ந்ததால் இரண்டு கட்சித் தலைவர்களும் குதூகலமடைந்தனர். அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியும் மக்கள் நலக் கூட்டணியின் ஆரவாரமும்
இரண்டு கட்சிகளையும் கதிகலங்க வைத்தன. திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் இணைந்ததால் தமிழக சட்ட சபைத்
தேர்தலில் போட்டியிட விருப்பு மனுதாக்கல் செய்தவர்கள் நிம்மதிப்
பெருமூச்சுவிட்டனர். விஜயகாந்த் வருவர் என்ற எதிர்பார்ப்பில் தொகுதிப்பங்கீடு
செய்யாமல் காத்திருந்தனர். மக்கள் நலக் கூட்டணியின் பக்கம் விஜயகாந்த சாய்ந்ததும்
தொகுதிப்பங்கீடு பற்றிப் பேசுவதற்காக காங்கிரஸின் பிரதிநிதியான குலாம்நபி
ஆசாத் தமிழகத்துக்கு விரைந்தார். தொகுதி
உடன்பாடு பற்றிய முடிவு எட்டப்படாமல் அவர் டில்லிக்குத் திரும்பிவிட்டார்.
குலாம்நபி ஆசாத்
வந்துவிட்டார். தொகுதி உடன்பாடு எட்டப்படும் என நம்பி இருந்த தமிழக காங்கிரஸ்
தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 65 தொகுதிகளை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. 40
தொகுதிகள் கொடுத்தால் ஏற்றுக்கொள்ளும் நிலையில்
காங்கிரஸ் இருந்தது. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை
மிரட்டி 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஐந்து தொகுதிகளில் மட்டும் தான்
வெற்றி பெற்றது. காங்கிரஸில் இருந்து வாசன் பிரிந்து தனிக் கட்சி ஆரம்பித்ததால்
அக்கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளதாக திராவிட
முன்னேற்றக் கழகம கருதுகிறது. வாசனையும்
கூட்டணியில் சேர்ப்பதற்கு
கருணாநிதி திட்டமிடுகிறார். பிரிந்திருக்கும் காங்கிரஸ் கட்சியை ஒன்றாக்கி முழுப்பலனையும் பெறுவதற்கான வியூகத்தை கருணாநிதி வகுத்துள்ளார்.
வாசனை
இணைக்கும் கருணாநிதியின் திட்டத்தை ராகுல்
விரும்பவில்லை.தமது கட்சியில் இருந்து பிரிந்து சென்றவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதை தமிழக காங்கிரஸ்
தலைவர்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு 30 தொகுதிகளும் வாசனுக்கு 20 தொகுதிகளும்
கொடுப்பதே கருணாநிதியின் திட்டம்.காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களில் அதிகமானோர்
வாசனின் வருகையை விரும்பவில்லை.வாசன் உள்ளே வருவதைக் காரணம் காட்டி நாங்கள்
வெளியேறக்கூடாது என சில தலைவர்கள் கருதுகின்றனர். தனித்துப் போட்டியிட்டால் கட்டுப்பணமும்
கிடைக்காது என்பதை இவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தனித்துப் போட்டியிட்டால்
நான்காவது அல்லது ஐந்தாவது இடத்துக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளது. காங்கிரஸின் பலவீனத்தை நன்கு தெரிந்து
கொண்டு காய் நகர்த்துகிறார் கருணாநிதி. 50தொகுதிகளுக்கு
அடம் பிடிக்கும் காங்கிரஸ் 25 தொகுதிகளில்
வெற்றி பெறுவது கடினம். வாசனின் நிலையும்
இதேதான். அதிக தொகுதிகளுக்கு ஆசைப்படும் அவரால் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி
பெறமுடியாது.
விஜயகாந்தின் வருகையை திராவிட முன்னேற்றக் கழகம் பெரிதும்
எதிர்பார்த்திருந்தது. அவர் டாட்டா காட்டியதால் அவருடைய ஐந்து சதவீத வாக்கை
சமப்படுத்த கருணாநிதி திட்டமிட்டுள்ளார். முஸ்லிம் கட்சிகளையும் பிரிந்திருக்கும்
காங்கிரஸையும் ஒரே அணிக்குள் கொண்டுவந்தால் ஐந்து சதவீத வாக்கு கிடைக்கும் என
கருணாநிதி கணக்குப்போட்டுள்ளார். காங்கிரஸில் இருந்து வெளியேறி புதிய கட்சி
ஆரம்பித்ததில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணைவதற்கு வாசன்
விரும்பினார். அவர் எதிர்பார்த்த இரட்டை இலக்க தொகுதிகள் ஒதுக்கப்படமையினால் திராவிட
முன்னேற்றக் கழகத்தின் பக்கம் பார்வையைச்
செலுத்தியுள்ளார். திராவிட முன்னேற்றக்
கழகத்துடன் வாசன் இணையும்முடிவு ஜெயலலிதாவின் கையில் உள்ளது. வாசனால் திராவிட
முன்னேற்றக் கழகத்துக்கு இலாபம் என
ஜெயலலிதா கருதினால் அவர் வாசனை தனது பக்கம் இழுத்து விடுவார். மதில் மேல் பூனையாக
இருக்கும் வாசனுக்காக கருணாநிதி
காத்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் வாசன் இணையக்கூடாது என காங்கிரஸ் நினைக்கிறது.
மக்கள் நலக்
கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்த சந்தோசத்தில் அவரது மைத்துனர் சுதீஷ் என்ன
பேசுவதென்று தெரியாது வைகோவிடம் வாங்கிக் கட்டியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற
பின் விஜயகாந்த் முதலமைச்சராகப் பதவி
ஏற்பார். துணை முதல்வர் பதவியை ஏற்பதற்கு வைகோ முன் வர வேண்டும் என சுதீஷ்
அழைப்பு விடுத்துள்ளார்.வைகோவின் அரசியல் அனுபவம் முதிர்ச்சி என்பனவற்றைக்
கணக்கில் எடுக்காத சுதீஷின் தான் தோன்றித்தனமான பேச்சு அரசியல் நடு நிலையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக
அரசியல்வாதிகளில் அதிக காலம் சிறைக்குச்சென்றவர் வைகோ. சிறைவாசம் அனுபவித்து அரசியலில் வளர்ந்த வைகோவுக்கு விஜயகாந்தின் சினிமாக் கவர்ச்சியால் அரசியலுக்குள் நுழைந்த சுதீஷ்
அழைப்பு விடுப்பதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சுதீசின் அழைப்பை
வைகோ உடனடியாக நிராகரித்துவிட்டார். அப்படி ஒரு எண்ணம் இருக்கக்கூடாது என
காட்டமாகக் கூறியுள்ளார். ரோசக்கார வைகோவை சுதீஷ்
சீண்டியுள்ளார். எதிர்க்கட்சிகளின்
தேர்தல் பிரசாரத்துக்கு சுதீஷ் தீனி போட்டுள்ளார்.
விஜயகாந்தின்
கட்சியை உடைக்கும் வேலையை திராவிட
முன்னேற்றக் கழகம் ஆரம்பித்துள்ளது. வட சென்னை மாவட்டச் செயலர் யுவராஜ் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். 2014
ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்
திருவள்ளூர் தொகுதியில் விஜயகாந்தின் கட்சி சார்பில் போட்டியிட்டவர். சேலம் மாவட்ட ஓமலூர் ஒன்றியச்செயலர் சண்முகம் தலைமையில் 130 பேர்
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். விஜயகாந்தின் கட்சியில் உள்ள பொறுப்பாளர்களையும் அடிமட்டத் தொண்டர்களையும்
வளைத்துப்பிடித்து விஜயகாந்துக்கு எதிரான
பிரசாரத்தை திராவிட முன்னேற்றக் கழகம ஆரம்பித்துள்ளது.
விஜயகாந்தின்
கட்சியில் சேரும் போது கோடீஸ்வரனாக
இருந்த யுவராஜ் இன்று கடனாளியாகிவிட்டார்.
இவர்களைப் போன்றவர்களை வளைத்துப் பிடிப்பதற்கு
திராவிட முன்னேற்றக் கழகம் திட்டமிட்டுள்ளது.
திராவிட
முன்னேற்றக் கழகத்தில் விஜயகாந்த் இணைந்தால் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் இருந்தவர்கள் நொந்து போயுள்ளனர். அப்படிப்பட்டவர்களை இனம்
கண்டு விஜயகாந்தின் கட்சியைப் பிரிக்கும் வேலையை
திராவிட முன்னேற்றக் கழகம்
ஆரம்பித்துள்ளது. வைகோவின் கட்சியை பலவீனமாக்கியது போல விஜயகாந்தின்
கட்சியை பலவீனமாக்கும் திட்டத்தை திராவிட
முன்னேற்றக் கழகம் ஆரம்பித்துள்ளது. கட்சியில்
இருந்து வெளியேறுவோரைத் தடுத்துநிறுத்த வேண்டிய சூழ் நிலைக்கு விஜயகாந்த்
தள்ளப்பட்டுள்ளார்.
ரமணி
தினத்தந்தி
05/04/16
No comments:
Post a Comment