யாழ்ப்பாணத்தில் இருந்து படையினரை அகற்று,சிங்களக் குடியேற்றத்தை நிறுத்து,
பாதுகாப்பு வலயத்தை நீக்கு போன்ற கோஷங்களை முன்வைத்து மக்களும் அரசியல்வாதிகளும்
அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் சாவகச்சேரியில்
தற்கொலை அங்கியும்,வெடிப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது.யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் சில இடங்களில் ஆயுதங்கள்
கண்டுபிடிக்கப்பட்டன. கிணறு துப்புரவக்கும்போது, அத்திபாரம் வெட்டும்போது, வீடு
வளவு துப்புரவாக்கும் போது ஆயுதங்கள் இருப்பதை அறிந்த மக்கள் அவற்றை உடனடியாக
கிராம சேவகர் பொலிஸ் ஆகியோருக்கு அறிவித்து அவற்றை அப்புறப்படுத்தினர். ஆனால், சாவகச்சேரி
மறவன்புலவில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. அந்த வீட்டில்
குடியிருந்தவரின் இரண்டாவது மனைவி காட்டிக்கொடுத்ததால் ஆயுதங்கள் வெளிவந்தன.
மறவன்புலவில் உள்ள விடொன்றில்
கஞ்சா,போதைப்பொருள் என்பன பதுக்கி வைத்திருப்பதாககிடைத்த இரகசியத் தகவலை
அடுத்து பொலிஸாரால் அந்தவீடு சோதனையிடப்பட்டது.
அப்போது எதிர்பாரதவிதமாக தற்கொலை அங்கி,கிளைமோர்,வெடிப்பொருட்கள் என்பன கிடைத்தன.
போதை வஸ்த்தைத் தேடிப்போன பொலிஸார் ஆயுதங்களைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த
வீட்டில் குடியிருந்தவரின் இரண்டாவது
மனைவி,மகள், தகப்பன் ஆகியோர் விசாரணை செய்யப்பட்டனர். அந்தவீட்டில் குடியிருந்த எட்வேட் ஜுலியஸ் என்பவர் தப்பி ஓடியதால் வீதித்தடை போட்டு தேடுதல்
நடத்தப்பட்டது. அக்கராயனில் மறைத்திருந்த அவர் கைது செய்யப்பட்டார்.
மறவன்புலவு பகுதி வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கியொன்றும், 4 கிளைமோர் ரகத்தைச் சேர்ந்த
குண்டுகள், இரு கிளைமோர் ரக குண்டுகளை வெடிக்க வைக்கும் பற்றரிகள், 12 கிலோகிராம்
நிறைகொண்ட அதிசக்தி வாய்ந்த 12 கிலோ டி.என்.டி.வெடிபொருட்கள், 9 மில்லிமீற்றர் ரக
துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 100 தோட்டாக்கள் ஆகியன பொலிஸாரினால்
மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட
தற்கொலை அங்கி, கிளேமோர் குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியன 10 முதல் 15
வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டவை எனவும், விடுதலைப் புலிகளின்
பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டவை என்று ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து
தெரியவந்துள்ளது.
தற்கொலை அங்கி,
கிளைமோர் வெடிபொருட்கள் ஆகியன சுமார் 10 முதல் 15 வருடங்களுக்கு முன்னர்
தயாரிக்கப்பட்டவை என விசாரணைகளின் மூலம் ஊகிக்கப்பட்டுள்ளது.எனினும் பழைமையான தற்கொலை அங்கி உள்ளிட்ட ஆயுதங்களை
சந்தேக நபர் எதற்காக வைத்திருந்தார் என்ற காரணம் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்த ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தன, எதற்காக மறவன்புலவு
வீட்டில் மறைத்து வைக்கப்பட்டன, நாசகார வேலைகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தால் சதி
முயற்சி தொடர்பான பின்னணி ஆகியவற்றை வெளிப்படுத்த கைது செய்யப்பட்ட முன்னாள் புலி
உறுப்பினரை பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தடுப்பு காவலில் வைத்து பொலிஸார்
தொடர்ந்தும் விசாரித்து வருகின்றனர்.
சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட
ஆயுதங்களினால் வடக்கிலும் தெற்கிலும் இரண்டுவிதமான உணர்வலைகள் ஏற்பட்டுள்ளன.
இத்தனை கெடுபிடிகளுக்கு மத்தியிலும் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பது சத்தியமா என்ற சந்தேகம் வடக்கில்
எழுந்துள்ளது. புலிகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளார்கள் அவர்களின் ஆயுதங்கள்
இன்னமும் மெளனித்துவிடவில்லை.. ஆங்காங்கே இது போன்ற ஆயுதங்கள் தேவை ஏற்படும் போது
வெளிவரும் என்ற வழமையான புலிப்பூசாண்டி
தெற்கில் கிலிகொள்ளவைத்தது. இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறவேண்டும் எனக்
காத்திருந்தவர்கள் போல இனவாத அரசியல்வாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத
விதையைத் தூவினர். ஒருகாலத்தில் சக்தி மிக்க அமைச்சராக இருந்த ஜீ.எல்.பீரிஸ் ஒருபடி மேலே போய் வெள்ளவத்தைக்கு கொண்டுவருவதற்கு மறைத்துவைக்கப்பட்ட ஆயுதங்கள் தான் அவை என
அடித்துக் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தற்கொலை அங்கி
கண்டுபிடிக்கப்பட்டதை சிங்களப் பத்திரிகைகள் முக்கியத்துவம்கொடுத்து
பிரசுரித்துள்ளன. புலிகளின் செயற்பாடு இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதை அவை
வெளிப்படுத்துகின்றன. புலிகளால் கிலிகொண்ட சிங்கள மக்கள் அவற்றை உடனடியாக நம்பிவிடுவார்கள். மறவன்புலவில் கைப்பற்றப்பட்ட
ஆயுதங்களினால் எதுவித அச்சுறுத்தலும் இல்லை. மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் கண்டு
பிடிக்கப்படுவது வழமையானது என வடமாகாண
ஆளுனர். ரெஜினோல்ட் கூரேயும், யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்
மகேஷ் சேனநாயக்கவும்
கூறியுள்ளனர். இவர்களின் கூற்றை
சிங்கள மக்கள் ஏற்கமாட்டார்கள்.
வெடிபொருட்களை மறைத்து
வைத்திருந்தவர் முன்னாள் புலி
உறுப்பினர். மக்களுடன் மக்களாக வாழும் முன்னாள் புலிகளால் பாதுகாப்புக்கு
அச்சுறுத்தல் என்று சொல்பவர்கள் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமது கூற்று
உணமையானது என்பது அவர்களின் வாதம். விடுதலைப்புலிகள் மீள வருவார்கள் என
நல்லாட்சிக்கு எதிரானவர்கள் ஆருடம் சொல்கிறார்கள். அவர்களின் ஆருடத்துக்கு சான்றாக
மறவன்புலவு சம்பவம் அமைந்துள்ளது.
மறவன்புலவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வீட்டில் குடியிருந்தவர் மன்னர்
மாவட்டத்தைச் சேர்ந்தவர்.அண்மையில்தான் அந்த வீட்டுக்கு குடிவந்தார்.
அவர் வேலையின் நிமித்தம் மறவன்புலவில் குடியேறினாரா ஆயுதங்களை மறைத்துவைப்பதற்கு அங்கு சென்றாரா என்பது இன்னமும் தெரிய வரவில்லை. யாழ்ப்பணத்தில் அதிகளவில் நிலை கொண்டிருக்கும்
படையினரை அகற்ற வேண்டும் உயர்பாதுகாப்பு வலயம் நீக்கப்பட வேண்டும் என
அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும் வேளையில் வெடிபொருட்கள்
கண்டுபிடிக்கப்பட்டது தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வானதி
சுடர் ஒளி
ஏப்ரல்06/ஏப்ரல்12
No comments:
Post a Comment