Friday, April 1, 2016

தமிழக அரசியலில் வைகோவின் விஸ்வரூப வளர்ச்சி


திராவிட  முன்னேற்றக் கழக‌த்தின் இமாலய வெற்றிகளுக்கு ஒருகாலத்தில் மூலாதாரமாக விளங்கியவர் வைகோ.  வைகோவின் பிரசாரத்தைக் கேட்பதற்கு தமிழகத்தின்   பட்டி தொட்டியெங்கும் மக்கள் காத்திருந்தனர். திராவிட  முன்னேற்றக் கழக‌த் தலைவர் கருணாநிதிக்கு ஈடாக கர்ஜனை செய்து மக்களைக் கவர்ந்தவர். வைகோவின் அபரிமித வளர்ச்சி திராவிட  முன்னேற்றக் கழக‌ இளவல்  ஸ்டாலினுக்கு நெருக்கடியாக இருந்தது.   கொலைப்பழி சுமத்தப்பட்டு   1993 ஆம் ஆண்டு  திராவிட  முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். நொந்த மனத்துடன் தாய்க் கழகத்தில் இருந்து வெளியேறிய வைகோ மறுமலர்ச்சி திராவிட  முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார்.

தனித்துவமாக கட்சியை ஆரம்பித்த வைகோ காலப்போக்கில் தனது  அரசியல் கொள்கைகளை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கட்சியைக் காப்பாற்றுவதற்காக தன்னை வெளியேற்றிய திராவிட முன்னேற்றக் கழக‌ம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம், இடதுசாரிக் கட்சிகள்,பாரதீய ஜனதாக் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணிசேர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டார். அச்சுறுத்தும் வாக்கு வங்கி இல்லாதபோதும், பிரதான கட்சிகளின் வெற்றிதோல்விகளைத்  தீர்மானிக்கும் சக்தியாக வைகோ விளங்கினார். வைகோவின் வாக்கு வங்கியும் செல்வாக்கும் குறையத் தொடங்கியதும், பிரதான கட்சிகள் அவரைத் திரும்பியும் பார்க்கவில்லை.  மேமாதம் நடைபெற உள்ள  தமிழக சட்ட மன்றத் தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக வைகோ  உருவாகியுள்ளார்.

வைகோ,நல்லகண்ணு, ஜி. ராமகிருஷ்ணன், திருமாவளவன் ஆகியோர் இணைந்து தமிழக அரசுக்கு எதிராக மக்கள் கூட்டு இயக்கத்தை ஆரம்பித்தனர். ஊழல், மதுபானம் ஆகியவற்றுக்கு எதிரான இயக்கமாக பரிணமித்த போது வைகோ அதனை அரசியல் கூட்டணியாகப் பிரகடனம் செய்தார். வைகோவைத் தவிர ஏனைய தலைவர்கள் முழுமனதுடன் சம்மதம் தெரிவிக்கவில்லை. மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகிய தால் மற்றைய தலைவர்களும் மனப்பூர்வமாக  ஏற்றுக்கொண்டனர். திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கும் மாற்றீடாக மக்கள் நலக்  கூட்டணியை கட்டி வளர்ப்பதில் வைகோ பெரும்  பங்காற்றினார்.  மக்கள் நலக் கூட்டணியில்   விஜயகாந்த் இணைந்ததால் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. விஜயகாந்தை எதிர்பார்த்துக்  காத்திருந்த .  கருணாநிதி கலக்கமடைந்துள்ளார்.  ஜெயலலிதாவின் வெற்றி விகிதம் குறைவடையும் நிலை உள்ளது. இது வைகோவின் திடமான நம்பிக்கையால் உருவான நிலைமை.

திராவிட முன்னேற்றக் கழகத்தில்  இருந்து விரட்டப்பட்ட வைகோ அரசியல் சூறாவளியில் சிக்கி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தில் தஞ்சமடைந்தார். ஜெயலலிதாவின் வஞ்சக அரசியலால் பதிக்கப்பட்ட வைகோவின்மீது  தடா சட்டம் பாய்ந்தது. வைகோவின் அரசியல் எதிரிகளும் ஜெயலலிதாவின் செயலால் கொதிப்படைந்தனர். நள்ளிரவில் கருணாநிதியை கதறக் கதற இழுத்துச் சென்ற அரசியல் அநாகரிகத்தின்  பின்னர் மிக மோசமான அரசியல் பழி வாங்கலாக இச்சம்பவம் கருதப்பட்டது. வைகோவின் துயரைத் துடைக்க கருணாநிதி கை கொடுத்தார். சிறையில் இருந்து விடுதலையான வைகோ, திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன்  கூட்டுச் சேர்ந்தார். ஆதரவு கொடுத்த திராவிட முன்னேற்றக் கழக‌ம் புறம் தள்ளியதால் அங்கிருந்து வெளியேறிய வைகோ , மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் ஐக்கியமானார். அரசியல் வங்குரோத்துக் காரணமாக அங்கிருந்தும் வைகோ வெளியேறினார்..
ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்றுவதற்கு வைகோவின் உதவிதேவை என்பதை உணர்ந்த கருணாநிதி, வைகோவுக்கு நேசக்கரம் நீட்டினார். ஜெயலலிதாவை வீழ்த்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் இணைய வேண்டும் என வைகோ பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தார். திராவிட முன்னேற்றக் கழக‌த்தில் உள்ள சிலர் வைகோவின் வரவை விரும்பவில்லை.அதன் காரணமாக வைகோ தனிமைப்படுத்தப்பட்டார்.

திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்குச் சென்றால் தனது மதிப்புக் குறைந்துவிடும் எனத்தெரிந்த வைகோ இடதுசாரிகளுடனும் திருமாவளவனுடனும்  சேர்ந்து மக்கள் நலக் கூட்டணியை வலுப்படுத்தினார். திராவிட முன்னேற்றக் கழக‌த்தில் வைகோ சேர்வதைத் தடுத்தவர்கள் அதற்கான எதிர்வினையை தேர்தல் முடிந்தபின் தெரிந்து கொள்வார்கள்.வைகோவின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழக‌மும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌மும் திரை மறைவில் கரியமாற்றின. வைகோவின் கட்சியைச் சேர்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்களையும்,  மாவட்டச் செயலாளர்களையும் திராவிட முன்னேற்றக் கழக‌ம் வளைத்துப் பிடித்தது. வைகோவின் கட்சிப் பலம் குறைவடைந்தது. ஆனால், மக்கள் நலக் கூட்டணியின் பலம் அதிகரித்தது.
1993 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து கொலைப் பழி சுமத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட வைகோ சந்திக்கும் ஐந்தாவது சட்டமன்றத் தேர்தல் இது. 1996 ஆம் ஆண்டு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும்இ 2001ஆம் ஆண்டு ஆம் ஆண்டு  தனியாகவும்இ 2006 ஆம் ஆண்டு  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துடனும் இணைந்து   போட்டியிட்ட வைகோ 2011 இல் நடைபெற்ற தேர்தலை புறக்கணித்தார். 2016 ல் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக களத்தில் நின்று கொண்டிருக்கிறார். வைகோவின் வளர்ச்சி மலைப்படைய வைத்துள்ளது.
விஜயகாந்துக்கு 500 கோடி ரூபாவும்  80 தொகுதிகளும் கொடுப்பதற்கு   திராவிட முன்னேற்றக் கழகம்  பேரம் பேசியதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதனை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் வக்கீல்  நோட்டீஸ் அனுப்பியுள்ளாது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் இணையப்போகிறார் என்ற செய்தி வெளியானபோது  வைகோ தெரிவித்த குற்றச்சாட்டு இன்று அவருக்கு எதிராகத் திரும்பி உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேரம் பேசவில்லை என விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி உள்ள வைகோவைக் குறிவைத்து   இலஞ்சப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் கிளைக் கட்சியாக மக்கள் நலக் கூட்டணி இயங்குகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக கூறப்படுகிறது. மக்கள் நலக்  கூட்டணியை ஆரம்பிப்பதற்காக  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்திடம் இருந்து  வைகோவுக்கு 1500 கோடி  ரூபா கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இது உண்மையா பொய்யா  எனத் தெரியாது மக்கள் குழம்பினர். வைகோவுக்கு எதிரான சதிகளில் இதுவும் ஒன்று என மக்கள் கருதினர்.
பொலிமர் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும்  “மக்களுக்காக எனும் நிகழ்ச்சில் வைகோ கலந்துகொண்டார். நேரடியாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை தமிழக மக்கள் ஆர்வத்துடன் பார்த்தார்கள். தமிழகத் தேர்தல் சூடு பிடித்துள்ள வேளையில் வைகோவின் கருத்து மிக முக்கியமானது.  நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஏ.எல்.கண்ணன் , “அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்திடம் இருந்து    மக்கள் நலக் கூட்டணிக்கு  1500 கோடி  ரூபா  என  கேள்வியை முடிப்பதற்கிடையில் மைக்கைக் கழற்றி எறிந்துவிட்டு வைகோ வெளியேறிவிட்டார். வைகோவிடம் இருந்து பதிலை எதிர்பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பொலிமர் தொலைக்காட்சியின் பேட்டியை இடையில் கைவிட்ட வைகோவின் வீடியோ  வைரலாகப் பரவுகிறது. வைகோவுக்கு எதிரான பிரச்சாரமாக இது முன்னெடுக்கப்படும் அபாயம் உள்ளது.
வதுளியம்.கொம்
ஏப்ரல் 1



No comments: