Sunday, April 10, 2016

வார்த்தை தவறிய வைகோவுக்கு பலத்த எதிர்ப்பு


அரசியல் எதிரிகளை வசைபாடுவது அரசியலில் அநாகரிகத்தின் உச்சக்கட்டம்.   அரசியல் தலைவர்களில் பலர் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் வசைபாடும் அநாகரிகத்தைத் தொட்டுப்பார்த்தவர்கள். தேர்தல் காலத்தில் இந்த அரசியல் அநாகரிகம் உச்சக்கட்டத்தை அடைந்துவிடும். எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை   கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சிக்கும்   பேச்சாளர்களுக்கு கட்சிகள் பணம் கொடுக்கின்றன.  அவர்களின் பேச்சை ரசித்து கைதட்டி ஆரவாரம் செய்து தொண்டர்கள் உற்சாகப்படுத்துவர்கள். கட்சித் தலைவர்களும்  இரண்டாம் கட்டத் தலைவர்களும் மேடை  ஏறுவதற்கு முன்பு இந்த அநாகரிகம் அரங்கேறிவிடும். அந்த அநாகரிக அரசியல் பேச்சில் உண்மையும்  இட்டுக்கட்டிய பொய்களும் இருக்கும்.

கம்பீரமான பேச்சால்  தலைவர்களையும்,தொண்டர்களையும், மக்களையும் கட்டிப்போட்ட வைகோ உணர்ச்சி வசப்பட்டு பேசிய ஒரு சொல் அவரது அரசியல் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. அரசியல்,இலக்கியம்,வரலாறு, புறநாநூறு, மாக்யவல்லி,பெர்னாட்ஷா, முசோலினி,ஹிட்லர்,சோக்கிரடீஸ்  என அவர் எந்தத் தலைப்பிலும்   சிறு குறிப்பும் இல்லாமல் கரைபுரண்டோடும்  சொற்களால் மணிக்கணக்கில் சொற்பொழிவாற்றுவார்.. நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டசபையிலும் அவரது உரையை அனைவரும் அக்கறையுடன் செவிமடுப்பார். அவருடைய கேள்விகளுக்கான பதில் உடனடியாகக் கிடைக்காது. அப்படிப்பட்ட வைகோவின் வாயிலிருந்து வெளியான  சொல்லால் அவரது அரசியல் பயணத்தில் கரும்புள்ளி விழுந்துள்ளது.

வைகோ,பிரேமலதா ஆகிய இருவரும் கருணாநிதியையும்  ஸ்டாலினையும் குறிவைத்து மிகமோசமாகத் தாக்கிப் பேசுகின்றனர்.ஜெயலலிதாவை விமர்சிப்பதை இவர்கள் தவிர்த்து வருகின்றனர். கருணாநிதியின் சாதியைப் பற்றி பகிரங்கமாக வைகோ பேசியது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது. அரசியல் தலைவர்களின் சாதியைக் குறிப்பிட்டு முன்னரும் பல தடவைகளில் பலர் பேசியுள்ளனர். சாதியத்துக்கு எதிரான சதிக்கு எதிரான சாதிக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்திய வைகோ  சாதியைக் குறிப்பிட்டுப் பேசியதை ஏற்றுக்கொள்ள எவருமே தயாராக இல்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் முன்பொருமுறை சாதியைக் குறிப்பிட்டு கருணாநிதியை இகழ்ந்தார். அப்போது அவருக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் செய்தது. தமிழக சட்ட சபைத் தேர்தல் காலம் என்பதால் வைகோவுக்கு எதிரான போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது..


கருணாநிதிக்கு எதிராக தான் பேசியது தவறு என உணர்ந்து கொண்ட வைகோ உடனடியாக மன்னிப்புக் கேட்டுள்ளார். அவரது மன்னிப்பை ஏற்பதற்கு திராவிட முன்னேற்றக் கழக‌த்தவர்கள் தயாராக இல்லை. வைகோவுக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளது. வைகோவின் அநாகரிக உரையை தனக்குச் சார்பாகத் திருப்பிவிட  திராவிட முன்னேற்றக் கழக‌ம் முயற்சிக்கிறது. வைகோவின் உருவப் பொம்மைகள் முக்கிய நகரங்களில் எரிக்கப்படுகின்றன.  மக்கள் நலக் கூ ட்டணிக்கு வாக்களிக்கலாம் என விரும்பியவர்கள் தமது முடிவை மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.  சாதியத்துக்கு எதிரானவர் வைகோ என்ற முகத்திரை கிழிந்துள்ளது. 

சாதியத்துக்கு எதிராகப்  பல போராட்டங்களை நடத்தி சிறைக்குச் சென்ற இடதுசாரித் தலைவர்களும் திருமாவளவனும் வைகோவின் பேச்சால் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேர்தல் பரப்புரையின்போது  வைகோவுக்கு எதிரான குற்றச்சாட்டால் சாதிக்கு எதிரானவர்களின் வாக்கு மக்கள் நலக் கூட்டணிக்கு   கிடைக்காத நிலை தோன்றியுள்ளது. தலித்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக கட்சியை ஆரம்பித்த திருமாவளனுக்கு வைகோவின் பேச்சு அதிர்சியளித்துள்ளது. வைகோவின் தற்போதைய  பேச்சுக்கள்  கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக கம்யூனிஸ்ட்கள் அஞ்சுகிறார்கள். மக்கள்  நலக் கூட்டணியின் இணைப்பாளரான வைகோவின் அத்து மீறிய  அநாகரிகப் பேச்சு, பத்திரிகையளர்கள் மீதான  கோபம், எதிர்க்கட்சிகள் மீதான ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்பன கூட்டணித்  தலைவர்களை கிலேசமடைய வைத்துள்ளது.

 மக்கள் நலக் கூட்டணியின்  இணைப்பாளர் பதவியில் இருந்து வைகோவை அகற்றுவதற்கு  கம்யூனிஸ்ட்கள் விரும்புகிறார்கள். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அல்லது திருமாவளவனை இணைப்பாளராக்க  வேண்டும் என்பது கம்யூனிஸ்ட்களின் விருப்பம். அப்படி ஒருநிலை ஏற்பட்டால் அது வைகோவுக்கு பின்னடைவாக இருக்கும்.  வைகோவிடம் இருந்து இப்படியான பேச்சை  யாரும் எதிர்பார்க்கவில்லை. விஜயகாந்தைத் தவிர ஏனைய கூட்டணித்  தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தைத் தவிர ஏனைய கட்சித் தலைவர்கள் அனைவரும் வைகோவை கண்டித்துள்ளனர்.

கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை நேர்மையானதல்ல. இராஜதந்திரம் என்ற பெயரின் அவர் நடத்திய  அரசியல் சித்து விளையாட்டுகள் ஏற்புடையதல்ல. அரசியலுக்கு அப்பால் அவருடைய தமிழ் மொழி அறிவு,இலக்கியம், இதிகாசம் என்பனவற்றில் அவருக்குள்ள புலமை என்பன அவரை சற்று உயர்வாக வைத்துள்ளன..  92 வயதிலும் நவீன தொழில்  நுட்பங்களுக்கு ஈடு கொடுத்து அவர்   கடமையாற்றுவதை மதிக்காதவர் எவரும் இல்லை.   துவண்டு கிடந்த திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வைகோவின் பேச்சு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
விஜயகாந்துக்கு ஒரு கட்சி இருக்கிறது. அக்கட்சிக்கு அவர் தலைவர்.   விஜயகாந்துக்குப் பின்னால் இருந்த மனைவி பிரேமலதா இன்று முன்னணிக்கு வந்துள்ளார். விஜயகாந்தைப் புகழ்ந்து எதிரணிகளை விமர்சித்து அவர் ஆற்றும் உரை தொண்டர்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றுள்ளது. எம்.ஜி.ஆரையும் பெருந்தலைவர் காமராஜரையும் பிரேமலதா விமர்சித்ததை  அதிகமானோர் ஏற்கவில்லை. விஜயகாந்த் பேசுவது யாருக்குமே புரிவதில்லை. அது பற்றிய விமர்சனங்கள் அதிகளவில் வெளிவந்துள்ளன. விஜயகாந்தின் பேச்சு விளங்கவில்லை என்ற  விமர்சனம்  பிரேமலதாவை எரிச்சலடைய வைத்தது.

எம்.ஜி.ஆர் பேசியது யாருக்காச்சும் புரிந்ததா? சொல்லுங்க  எம்.ஜி.ஆர் பேசியது யாருக்காச்சும் புரிந்ததா? என்று தனது கட்சித் தொண்டர்களைப் பார்த்துக் கேட்டார். அவருடைய கட்சித் தொண்டர்கள் எதிர்த்து எதுவும் பேச மாட்டார்கள். பொது வெளியில் கேட்டிருந்தால் நிச்சயம் பதில் கிடைத்திருக்கும்.  எம்,ஆர். ராதா சுட்ட பின் எம்.ஜி.ஆரின்  பேச்சில் மற்றம் ஏற்பட்டது. அதன் பின்னர் எம்.ஜி.ஆர்  நடித்த போது ரசிகர்கள்  அவரை வசூல் சக்கரவர்த்தியாக்கினார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து வெளியேறி புதிய கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்ட போது மக்கள் அவரை முதலமைச்சராகினார்கள்.   விஜயகாந்த் தனித்து தேர்தல்களில் போட்டியிட்டு  படு தோல்வியடைந்தார். ஜெயலலிதாவின் புண்ணியத்தால் எதிர்க்கட்சித் தலைவரானார்.  படிக்காத காமராஜர் முதலமைச்சராகலாம் விஜயகாந்த் முதலமைச்சரக்க் கூடாதா என பிரேமலதா கேட்டுள்ளார். பிரேமலதாவின் இந்த பேச்சு எம்.ஜி.ஆரின் ரசிகர்களையும் காமராஜரின் விசுவாசிகளையும் கோபமடைய  வைத்துள்ளது.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதிரணித் தலைவர்களைப் பற்றிய கீழ்த்தரமான பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
வர்மா.
துளியம்.கொம்


No comments: