Sunday, April 17, 2016

விஜயகாந்தின் நிம்மதியை குலைத்த விசுவாசிகள்

தமிழக அரசியல் தலைவர்களை குழப்பியடித்து   தடுமாற வைத்த விஜயகாந்த்     அவரது கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களின் செயற்பாட்டினால்   நிம்மதி இழந்து தவிக்கிறார். விஜயகாந்தின் வாக்கு வங்கியினால் வெற்றி பெறலாம் என கணக்குப்போட்டிருந்த கட்சித் தலைவர்கள் விஜயகாந்த் தம்முடன் வருவர் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர். தனது கட்சிக்கு அதிக  தொகுதிகளும் மனைவிக்கும் மைத்துனருக்கும் பெரிய பதவிகளையும் எதிர்பார்த்து விஜயகாந்த் பேச்சு  வார்த்தை நடத்தினார். விஜயாகாந்த் எதிர்பார்ப்பை யாருமே நிறைவேற்றவில்லை.வெறுத்துப் போன விஜயகாந்த் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.அவரது அறிவிப்பு கட்சியில் உள்ளவர்களை கலங்கடித்தது.

திராவிட முன்னேற்றக் கழக‌கத்துடன்  இணைந்து தேர்தலைச்  சந்திக்க  வேண்டும் என்பதே விஜயகாந்தின் கட்சியில் உள்ள பலரின் விருப்பம். அவரின் மனதை மாற்றி  திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேரலாம் என அவர்கள் எதிர்பார்த்தனர். அனைவரின் விருப்பத்தையும் தவிடு பொடியாக்கிய விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணியுடன்  சேர்ந்தார். அவரின் முடிவை ஏற்றுக்கொள்ளாதவர்கள்  போர்க்கொடி தூக்கினர். முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கோரி காலக்கெடு விதித்தனர். விஜயகாந்த் தனது முடிவை மாற்றவில்லை. ஆகையால்  விஜயகாந்தை எதிர்த்தவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்தனர்.

தேசிய முற்போக்கு திராவிட கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரகுமார் தலைமையிலான அணியில் கும்மிடிபூண்டி சேகர், மேட்டூர் பார்த்திபன் ஆகிய சட்டசபை உறுப்பினர்களும்  ஈரோடு வடக்கு-தெற்கு திருவண்ணாமலை வேலூர் சேலம் மேற்கு திருப்பூர்உட்பட பத்து  மாவட்டச் செயலாளர்கள்  கட்சியை விட்டு வெளியேறி  மக்கள்  தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

விஜயகாந்த் வருவர் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தனது அஸ்திரத்தைப் பிரயோகித்து விஜயகாந்தின்  முடிவால் வெறுப்புற்றவர்களுக்கு வலை வீசியது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலையில் சந்திரகுமார் தலைமைமயிலான அணி விழுந்தது.விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்ட போது திராவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஆகியவற்றின் வாக்குகளைப் பிரித்தார்.  ஜெயலலிதாவுடன் சேர்ந்தபோது எதிர்க்கட்சித்தலைவர் பதவி தேடி வந்தது. விஜயகாந்த்,அவரது மனைவி பிரேமலதா,மைத்துனர் சுதீஷ் ஆகியோரே கட்சியில் பிரதானிகள். அவர்களைத்தவிர வேறு யாரும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தவர்களின் பெயர் பத்திரிகைகளில் அடிபட்டது. ஜெயாதொலைக்கட்சியில் அவர்களை முன்னிலைப்படுத்தினர்கள் தன்னை நம்பி இருந்த தேசிய முற்போக்கு திராவிடகழக  சட்ட மன்ற உறுப்பினர்களை ஜெயலலிதா கைவிட்டுவிட்டார். ஒருவருக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கி உள்ளார். அவர் வெற்றி  பெறுவார்  என்பது சந்தேகம்.


விஜயகாந்தின் கட்சியில் இருந்து பிரிந்தவர்களுக்கு சன் கலைஞர் ஆகிய தொலைக்காட்சிகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. சமூகத்துக்கும் மக்களுக்கும் சேவை செய்யும் அரசியல், தொலைந்து நீண்ட காலமாகிவிட்டது. விஜயகாந்தின் கட்சியை வளர்ப்பதற்காக தண்ணீராக பணத்தைச்  செலவு செய்தவர்கள் இன்று கடனாளியாகி விட்டனர். போட்ட பணத்தைத்  திரும்ப எடுக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலையில் விழுந்துள்ளனர். 
 சந்திரகுமார் விலகியதைவிட சி.ஹெச்.சேகர் உள்ளிட்டோர் விலகியது தான் விஜயகாந்த் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சி எனக்  கூறப்படுகிறது.சி.ஹெச்.சேகர் விஜயகாந்திற்கு மிகவும் நெருக்கமானவர் பல விஷயங்களில் ஆலோசனை கொடுப்பவர். அதே போல்    கட்சியின் மாநில நிர்வாகியான தேனி முருகேசன் விஜயகாந்தின் அதி தீவிர பக்தர். ரசிகர் மன்றத்தில் இருந்து விஜயகாந்தை போலவே உடையணிந்து வலம் வந்த நபர்.   தேசிய முற்போக்கு திராவிட கழக நிவகிகளில்  பலர் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்தின் கட்சியில் இருந்த பலரின் பெயர் இப்பொழுதுதான் மக்களுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது.

விஜயகாந்தின் வெற்றிக்குப் பின்னால் அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகம்,ஜெயலலிதாவின் செல்வாக்கு, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு, என்பனவும் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் ஆகியவற்றின் எதிர்ப்பு என்பவவும் இருந்தன. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கட்சிகளின் வாக்கு வங்கியைவிட சாதி வாக்கு முக்கியமானது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் விஜயகாந்தின் கட்சியை விட்டு விலகியவர்களுக்குப் பதிலாக அதே சாதியைச்சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவைரைத் தேடிப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்ட மன்றத்  தேர்தலில் விஜயகாந்தின் கட்சிக்கு இருந்த செல்வாக்கு இப்போது குறைந்துள்ளது.  சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றிபெற்ற விஜயகாந்த் அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் படு  தோல்வியடைந்தார். விஜயகாந்த் கட்சியை ஆரம்பித்த போது சுமார் 50 தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் பலம் அவரிடம் இருந்தது.  அதே போன்ற சக்தி இப்போது அவரிடம் இல்லை. விஜயகாந்த் கட்சியை ஆரம்பித்த போது  அவரே  முன்னிலை வகித்தார். விஜயகாந்த் இன்று மெளன காந்தாக  மாறிவிட்டார். விஜயகாந்தின் வாய் பொல்லாதது. ஆகையினால் அவர் வாய் மூடி மெளனியாகிவிட்டார். கட்சியின் முடிவு அனைத்தையும் பிரமலதா தான்  மேற்கொள்கிறார். கட்சியில் இருந்து வெளியேறிய அனைவரும் பிரேமலதாவையே குற்றம் சாட்டுகின்றனர்.

பிரேமலதாவின் விருப்பத்துக்காகவே விஜயகாந்த் மக்கள் நலக்  கூட்டணியுடன் சேர்ந்தார். பிரேமலதாவின்  பிரதான எதிர்க்கட்சி திராவிட முன்னேற்றக் கழகம.  கருணாநிதியும் ஸ்டாலினும் அவரது பிரதான எதிரிகள். ஜெயலலிதாவையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அவர் விமர்சிப்பதில்லை. மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் ஐக்கியமானபோது  அவர் எதுவுமே  பேசவில்லை. வைகோதான் விளக்கமளித்தார். கொள்கை விளக்கக் கூதடத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த் எதுவும் பேசாது அமைதியாக இருந்தார். அவரைப் பேச அழைத்தபோது  திக்கித் திணறி எல்லோரும் பேசிட்டாங்க நான் என்னத்தைப் பேச எனக்கூறி அமர்ந்துவிட்டார்.

வருங்கால முதல்வரின் முக்கிய உரையை கேட்பதற்கு ஆவலுடன் காத்திருந்தவர்கள் ஏமாந்துவிட்டனர். தனது நம்பிக்கைக்குரிய விசுவாசிகள் கட்சியை விட்டு வெளியேறி புதிய கட்சி ஆரம்பித்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைவதைப்ப்றி ஏதாவது சொல்வர் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.  அதைப்பற்றி அவர் எதுவும் இதுவரை பேசவில்லை. அவருக்காகக வைகோதான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக சவால் விடுகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் எதிர்த்து அரசியல் செய்த விஜயகாந்த் தனது கட்சியினரை  எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழ் நிலை தோன்றியுள்ளது. கட்சியில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனும்  சேர்ந்தவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில்  தனது கட்சி உறுப்பினரை தேர்தலில் நிறுத்தி தனது வெற்றியை உறுதி செய்வாரா அல்லது மக்கள் நலக் கூட்டணிக்கு  விட்டுக்கொடுப்பாரா என்பது இன்று பெறுமதியான கேள்வியாக உள்ளது.
தமிழக அரசியல் தலைவர்களை ஆட்டிப்படைத்த விஜயகாந்தை அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் அசைத்துள்ளனர். இவர்களை போன்று இன்னும் சிலர் வெளியேறினால் அவரது கட்சிக்கு ஆபத்து  அதிருப்தியாளர்களை தன் வழிக்குக் கொண்டுவரவில்லையானால் கட்சியில் பெரும் பின்னடைவு ஏற்படும்.
வர்மா
தமிழ்த்தந்தி
17/04/16




No comments: