இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும்
பாக்குநீரிணையில் எதுவித முக்கியத்துவமும்
இல்லாது இருந்த கச்சதீவை இந்தியா இலங்கைக்குத்தாரை வார்த்தபின்னர் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த இடமாக மாறியது. தமது உரிமைக்காக ஆயுதம்
ஏந்தி இலங்கைத் தமிழ் இளைஞர்கள் நடத்திய
போராட்டத்தால் இந்திய மீனவர்களைப் பிடிக்கும் பொறியாக கச்சதீவு மாறியது. 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி
அப்போதைய இந்தியப்பிரதமர் இந்திர காந்தி , இலங்கைப்பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாடரநாயக்க ஆகிய இரண்டு தலைவர்களுக்கும்
இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இருநாடுகளின் நல்லுறவு வளர்வதற்காக
கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்தியா.
இந்திய இலங்கை பிரதமர்களின் ஒப்பந்தம் கைச்சாத்தானபோது தமிழக மீனவர்களின் எதிர்காலம் திசை மாறியது. அவர்களின்
வாழ்வாதாரம் முடக்கப்பட்ட்டது. இராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள கச்சதீவை இலங்கைக்கு விட்டுகொடுத்த
பெருந்தன்மை அன்று பெரிதாகப்பேசப்பட்டது. இந்திய இலங்கை உறவில் புதியதொரு பரிமாணம்
என்று பிரசாரம் செய்யப்பட்டது. இலங்கயின்
யுத்த மேகத்தால் தமிழக மீனவர்களும் இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களும் கடலிலே
போராடும் நிலை ஏற்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்காலத்தில் கச்சதீவு
இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு
வாய்ப்பாக அமைந்துவிட்டது. திராவிட
முன்னேற்றக் கழக ஆட்சியில் இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட கச்சதீவை மீட்பேன் என்று தேர்தல் காலத்தில் ஜெயலலிதா முழக்கமிடுவார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் கச்சதீவு பேசுபொருளாக
மாறியுள்ளது. கச்சதீவை மீட்பேன் என்று ஜெயலலிதா மேடைதோறும் பிரசாரம் செய்கிறார்.
ஐந்து வருட ஆட்சியில் இருந்தபோது கச்சதீவை
மீட்க நடவடிக்கை எடுக்காத ஜெயலலிதா அடுத்த முறை முதல்வரனால் கச்சதீவை
மீட்பேன் என்று சபதமிடுகிறார். 1991 ஆம்
ஆண்டு கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு கச்சதீவை மீட்பேன் என்று
உறுதிமொழி எடுத்தார். கோட்டையில் கொடி காற்றில்
பறந்ததுபோல அவருடைய உறுதிமொழியும் காற்றில் பறந்தது. இப்போதும் அதே போன்ற உறுதி மொழியை
வீசியுள்ளார்.
பாட்டாளி
மக்கள்கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸுசுக்கும் கச்சதீவின் மீது ஒருகண். பாட்டாளி மக்கள்
கட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிபீடம் ஏறினால் கச்சதீவை மீட்போம் என
ராமதாஸ் தெரிவித்துள்ளார். கச்சதீவை மீட்பதற்கு பழ.நெடுமாறன் போன்றோர் படகிலே
புறப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. இந்த முறையும் தேர்தல் பிரசாரத்தில் கச்சதீவு இடம்
பெற்றுள்ளது. இந்திராகாந்தி கச்சதீவை இலங்கைக்குக் கையளிக்கும் போது தமிழகத்தில் திராவிட
முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தது. கருணாநிதியும் இந்திராகாந்தியும் ஓரணியில் இருந்ததனால்
கருணாநிதியின் ஒப்புதலுடன் கச்சதீவு பறிபோனது என்ற பிரசாரம் வலுப்பெற்றது.
இந்தியா சுதந்திரமடைந்த போது ராமநாதபுரம் சமஸ்தானமும்
இந்தியாவுடன் இணைந்தது. ராமேஸ்வரத்தின் கண்ணுக்கு எட்டிய
தூரத்தில்உள்ள கச்சதீவும் இந்தியாவின் பகுதியாகியது. தமிழக மீனவர்கள் தங்கும் இடமாக கச்சதீவு
விளங்கியது. இலங்கயின் எல்லையிலும் இந்திய மீனவர்கள் சிலசமயம் மீன் பிடிப்பார்கள்.
அப்போது எதுவித பிரச்சினையும் ஏற்படவில்லை. இலங்கையில் யுத்தம் ஆரம்பித்தபோது
இந்திய மீனவர்கள் மீதான கெடு பிடியும் ஆரம்பமானது. கச்சதீவு இலங்கையின் கைக்கு
வந்தபின்னர் தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல் ஆரம்பமாகியது. தமிழ் ஈழம் கோரிப்
போராடும் இலங்கித் தமிழர்களுக்கு தமிழக மீனவர்கள் உதவி செய்கிறார்கள் என்ற
குற்றச்சாட்டு இலங்கை அரசால் சுமத்தப்பட்டது.
கச்சதீவை இலங்கைக்குக் கொடுக்கும் போது தமிழக மீனவர்கள்
கச்சதீவில் தங்குவதற்கும் வலைகளை காயப்போடுவதற்கும் அங்குள்ள சேர்ச்சின் வருடாந்த உற்சவத்தில் இந்திய மக்கள்
கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படும் என ஒப்பந்தத்தில் எழுதப்பட்டது. யுத்தம்
கொடூரமாக நடந்த போது ஒப்பந்தம் கடலிலே மூழ்கடிக்கப்பட்டது. 1983 ஆம்
ஆண்டுக்குப்பின்னர் கச்சதீவு சேர்ச்சுக்கு
செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை கச்சதீவை மையமாக வைத்து நடத்தப்பட்ட
தாக்குதல்களினால் எண்ணற்ற தமிழக மீனவர்கள்
கொல்லப்பட்டனர். பலர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இன்னும் பலர்
காணமல் போயினர். தமிழக மீனவர்களுக்கு
வருமானம் தரும் மீன்வகை இலங்கை கடல்
பரப்பில் அதிகளவில் காணப்படுவதே இப்பிரச்சினைக்குமுக்கிய காரணம். இதனைத் தடுப்பதற்கான எந்த விதமான வழி
முறைகளையும் இரு நாட்டு அரசாங்கங்களும் ஏற்படுத்தவில்லை. அதனால் தமிழக மீனவர்கள்
மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இரண்டு நாடுகளின் ஒப்பந்தத்தில் மாநில அரசு ஆதிக்கம்
செலுத்த முடியாது என்பதைத் தெரிந்து கொண்டும் மீனவர்களில் வாக்குகளைக் குறிவைத்து
தமிழக அரசியல் தலைவர்கள் வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றனர். தேர்தல் திருவிழா
முடிவடைந்ததும் வாக்குறுதி மறக்கப்பட்டுவிடும். தமிழக மீனவர்கள் கச்சதீவை
ஏக்கத்துடன் பார்த்து வருந்துவதைத் தவிர வேறு வழி இல்லை.
வர்மா
No comments:
Post a Comment