தமிழகம்,புதுச்சேரி,அஸாம்,மேற்கு வங்காளம்,கேரளா ஆகிய ஐந்து
மாநிலத்தேர்தல்கள் இந்திய அரசியலில் புதிய
திருப்பத்தை ஏற்படுத்தப்போகின்றன.
இவற்றினுள் அஸாம் மாநிலத்தேர்தல் அரசியலில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
அஸாமில் தொடர்ந்து நான்கு வருடங்களாக
காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இம்முறை
அஸாமின் பாரதீய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள்
தெரிவிக்கின்றன. காங்கிரஸுக்கும் பாரதீய
ஜனதாக் கட்சிக்கும் இடையிலான பலப் பரீட்சையாக அஸாம் தேர்தல் களம் உள்ளது.
டில்லி,பீகார் ஆகிய சட்டப்பேரவைத்
தேர்தல்களில் படு தோல்வியடைந்த பாரதீய ஜானதா
அஸாமில் ஆசியைப்பிடித்து புதிய
சரித்திரத்தை ஏற்படுத்த எண்ணியுள்ளது. பாரதீய ஜனதாவின் வெற்றிக்கு வித்திடும் விதத்தில் நாடறிந்த பிரதமர் மோடியை பிரதானப்படுத்தாமல் அந்த மாநில
மக்களுக்கு நன்கு பரிச்சயமான மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவாலை முதல்வர்
வேட்பாளராக பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. அஸாமில் இரண்டு முறை ஆட்சிப்
பொறுப்பில் இருந்த முக்கிய மாநிலக் கட்சியான அஸாம் கண பரிஷத் கட்சியுடன் பாரதீய
ஜனதா வலுவான கூட்டணி அமைத்து களம்
கண்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியும், பாஜக கூட்டணியும் நீயா? நானா? என்ற ரீதியில் போட்டியிடும் அஸாமில், கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில்
மொத்தம் 82.20 சதவீதம்
வாக்குகள் பதிவாகின கடந்த 2011ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற பேரவைத் தேர்தலில்
பதிவான வாக்குகளைவிட 12 சதவீதம்
அதிகமாகும்.
"தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகமானால்,
பொதுமக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என அர்த்தம்' என்ற பொதுவான அரசியல் வரையறையின்படி, அஸாமில்
இந்தமுறை எப்படியும் ஆட்சியைப் பிடித்து, அங்கு காங்கிரஸின் தொடர் வெற்றிக்கு
முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை பாரதீய ஜனதாக் கூட்டணிக் கட்சியினர் மத்தியில்
வலுப்பெற்றுள்ளது. அஸாமில் கடந்த திங்கள்கிழமை (ஏப்.11) நடைபெற்ற இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு
மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. காரணம், இரண்டாம்கட்டத் தேர்தல் நடைபெற்ற 61 சட்டப்பேரவைத் தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் "கை'
ஓங்கியுள்ள இடங்களாகும்.
அஸாமின் மத்திய மற்றும் சமவெளிப் பகுதிகளில் அமைந்துள்ள இந்த 61 தொகுதிகளில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்
காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களைக்
கைப்பற்றியது. மாறாக பாஜக கூட்டணி 17 இடங்களில்தான் வெற்றி பெற்றது. எனவே காங்கிரஸ் வலுவாக உள்ள
இந்த மாவட்டங்களில், பாரதீய ஜனதா கூட்டணி
அதிகப்படியான வாக்குகளைப் பெற்றால் மட்டுமே, அதன் "மிஷன் 84'(பெரும்பான்மை இடங்களில் வெற்றி) எண்ணம் வெற்றி
பெறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிரான மாநில மக்களின் மனநிலையும்
பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு அலைகடலென
திரளும் மக்கள் கூட்டமும் பாஜகவுக்கு சாதகமான அம்சங்கள்தான். இருந்தாலும்
இரண்டாம்கட்டத் தேர்தல் நடைபெற்ற மாவட்டங்களில் பெருவாரியாக உள்ள சிறுபான்மையினரின்
ஆதரவு காங்கிரஸýக்கு உள்ளதால்
கடைசி நேரத்தில் தேர்தல் முடிவுகள் மாற வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
அஸாமில் திங்கள்கிழமை நடைபெற்ற இரண்டாவது இறுதிக் கட்ட
தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85 சதவீத வாக்குகள் பதிவாயின. ஒட்டுமொத்தமாக
அங்கு 81.5 சதவீத வாக்குகள்
பதிவாகியுள்ளன.
அஸாமில்
வன்முறையின்போது சிஆர்பிஎஃப் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முதியவர் ஒருவர்
உயிரிழந்தார். சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்
முன்னாள் பிரதமர்
மன்மோகன் சிங் குவாஹாட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த
வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அவரது மனைவி குர்சரண் சிங்
கெளரும்வாக்களித்தார்.மன்மோகன் சிங் 1991-ஆம் ஆண்டு முதல் அஸ்ஸாமில் இருந்து
மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு வருகிறார். அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் மீது தேர்தல்
ஆணையத்தின் உத்தரவுப்படி போலீஸார் தங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.தேர்தல்
நடைபெற்றபோது தருண் கோகோய் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். மக்கள்
பிரதிநிதித்துவச் சட்டப்படி இது தவறாகும். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை
மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தேர்தலின் இரண்டாவது பிரிவாக
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தலின்
போது 79.51 சதவீதம் வாக்குகள் பதிவாயின..மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கான
பொதுத் தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில்முதல் கட்டத் தேர்தல்இ இரு
பகுதிகளாக நடத்தப்படுகிறது. முதல் பகுதியாக கடந்த 4ஆம் திகதி 18 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதையடுத்து மேற்கு மிதுனபுரி, பாங்குரா, பர்த்வான் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 31 தொகுதிகளுக்கு 2ஆவது பகுதியாக தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே ஏராளமானோர் நீண்ட
வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர்.ஒரு சில வாக்குச்சாவடிகளில்
இடதுசாரி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஜமூரியாவில்
இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர், திரிணமூல் காங்கிரஸ்
கட்சியிரால் தாக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வாக்குப்பதிவை
பாதிக்கக் கூடிய அளவுக்கு வன்முறை சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. அனைத்து
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.இந்த தேர்தலில் 79.51
சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறின.
தமிழகம்,புதுச்சேரி,
கேரளா,அஸாம் , மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்கு பணம் கொடுப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை
தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது.உரிய ஆதாரங்கள் இன்றி பெருமளவில் பணத்தை
எடுத்து செல்கிறபோது, அதை தேர்தல் கமிஷனின் பறக்கும் படை பறிமுதல் செய்து
வருகிறது.இதுவரை உரிய ஆதாரமின்றி சட்டவிரோதமாக எடுத்துச்செல்லப்பட்ட 53 கோடி
ரூபா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 21.45 கோடி ரூபா
பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் அஸாம்உள்ளது.அங்கு11.66கோடிரூபாபறிமுதல்செய்யப்பட்டுள்ளது.கேரளாவில்
9.65 கோடி ரூபாவும் மேற்கு வங்காளத்தில் 9.61 கோடி ரூபாவும்
புதுச்சேரியில் ரூ.60.88 லட்சம் ரூபாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்
கமிஷன் மூத்த அதிகாரி ஒருவர் இந்த தகவல்களை தெரிவித்தார்.
கரூரில்
தனியார் தொலைக்காட்சி நிருபர் குடியிருக்கும் வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்
படம் பொறித்த 695 சுவர் கடிகாரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் . கரூர் தொகுதி தேர்தல் பறக்கும்படை அலுவலர்
சொர்ணமாணிக்கம் தலைமையிலான குழுவினர், கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள
தனியார் தொலைக் காட்சி நிருபர் பத்மநாபன் குடியிருக்கும் பகுதியில் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.
அப்போது 18 அட்டைப் பெட்டிகளில் சுவர்
கடிகாரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை சோதனை செய்தபோது அந்த கடிகாரங்களில்
இரட்டை
இலை சின்னத்துடன் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் அச்சிடப்பட்டு வி.செந்தில்பாலாஜி, மாவட்டச் செயலாளர்
போக்குவரத்துத் துறை அமைச்சர் என அச்சிடப்பட்டுள்ளது. இதையடுத்து 695 சுவர்க்
கடிகாரங்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவற்றை கரூர் நகர பொலிஸில் ஒப்படைத்தனர்.
கடந்த ஆண்டு ஆசிரியர் தின விழாவையொட்டி ஆசிரியர்களுக்கு வழங்குவதற்காக இந்த
சுவர்க் கடிகாரங்கள் தயார் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது
தமிழகம்,புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெறுவதை
நினைத்தும் பார்க்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழக்த்தின் புண்ணியத்தில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன்
இருக்கிறது. இந்த நிலையில் அஸாம் மாநிலத்தேர்தல்
காங்கிரஸுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் கெளரவப்பிரச்சினையாக மாறியுள்ளது.
ரமணி
தமிழ்த்தந்தி
17/04/16
No comments:
Post a Comment