Friday, October 9, 2020

ஐதராபாத் அணி 3-வது வெற்றி சதத்தை தவற விட்டார் பேர்ஸ்டோ

 அபுதாபியில் நேற்றிரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின. பஞ்சாப் அணியில் மூன்று மாற்றமாக கிறிஸ் ஜோர்டான், ஹர்பிரீத் பிரார், சர்ப்ராஸ்கான் நீக்கப்பட்டு முஜீப் ரகுமான், அர்ஷ்தீப்சிங், விக்கெட் கீப்பர் சிம்ரன்சிங் ஆகியோர் இடம் பிடித்தனர். ‘சிக்சர் மன்னன்கிறிஸ் கெய்லையும் இந்த ஆட்டத்தில் களம் இறக்க பஞ்சாப் அணி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக (புட்பாய்சனால் பாதிப்பு) அவரை சேர்க்க இயலாமல் போய் விட்டதுநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் கப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.

 வார்னரும், பேர்ஸ்டோவும் தொடக்க வீரர்களாக களம் புகுந்தனர். காட்ரெலின் முதல் ஓவரில் வார்னர் 2 பவுண்டரியுடன் அதிரடிக்கு சுழி போட்டார். நங்கூரம் பாய்ச்சியது போல் தங்களை நிலை நிறுத்திக்கொண்டு விளையாடிய இவர்கள் பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 58 ஓட்டங்கள் சேர்த்தனர். இந்த சீசனில் பவர்-பிளேயில் ஐதராபாத்தின் சிறந்த செயல்பாடு இதுவாகும்.  பேர்ஸ்டோ 19 ஓட்டங்களீல் கொடுத்த கொஞ்சம் கடினமான கேட்ச் வாய்ப்பை லோகேஷ் ராகுல் தவரவிட்டார்.




அதன் பிறகு பேர்ஸ்டோ ஓட்ட வேகத்தை தீவிரப்படுத்தினார். சுழற்பந்து வீச்சாளர்களை குறி வைத்து தாக்குதல் தொடுத்த அவர், ரவி பிஷ்னோய், மேக்ஸ்வெல், முஜீப் ரகுமானின் ஓவர்களில் தலா 2 சிக்சர் வீதம் தெறிக்க விட்டார். இந்த ஜோடியை கட்டுப்படுத்த வழி தெரியாமல் பஞ்சாப் கப்டன் லோகேஷ் ராகுல் விழிபிதுங்கிப் போனார். ஓட்ட விகிதம் 11-க்கு மேலாக எகிறியது.

 15.1 ஓவரில்  160 ஓட்டங்கள் எடுத்தபோது  போது வார்னர் (52 ஓட்டங்கள், 40 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயின் பந்து வீச்சை தூக்கியடித்து பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில்  சதத்தைத் தவறவிட்ட பேர்ஸ்டோ (97 ஓட்டங்கள், 55 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்து பஞ்சாப் சாதகமான தீர்ப்பை பெற்றது. தொடர்ந்து மனிஷ் பாண்டே (1   ), அப்துல் சமத் (8   பிரியம் கார்க் (0) அடுத்தடுத்து வெளியேற இறுதி கட்டத்தில் ஹைதராபாத்தின் வாகத்துக்கு  முட்டுக்கட்டை விழுந்தது.



 நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்கள் குவித்தது. இந்த சீசனில் ஐதராபாத் அணியின் அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும். கேன் வில்லியம்சன் 20 ஓட்டங்களுடன் (10 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். அபிஷேக் ஷர்மா 12 ரஓட்டங்களில் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார்.

  202 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் (9), கப்டன் லோகேஷ் ராகுல் (11 ) ஏமாற்றம் அளித்தனர். இதன் பின்னர் நிகோலஸ் பூரன் ஒரு பக்கம் ருத்ரதாண்டவம் ஆட இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் குறிப்பிட்ட இடைவெளியில் சரிந்தது. எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 7 ஓட்டங்களில் ரன்-அவுட் ஆனார். தனிநபராக போராடிய நிகோலஸ் பூரன் 77 ஓட்டங்களில் (37 பந்து, 5 பவுண்டரி, 7 சிக்சர்) ரஷித்கானின் சுழலில் வெளியேறினார். அத்துடன் பஞ்சாப் அணியின் நம்பிக்கை தகர்ந்தது.

முடிவில் பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் 132 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஷித்கான் 3 விக்கெட்டும், நடராஜன், கலீல் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 6-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். பஞ்சாப் சந்தித்த 5-வது தோல்வியாகும்.



சாதனை துளிகள்

*
பஞ்சாப் அணிக்கு எதிராக வார்னர் தொடர்ச்சியாக 9 ஆட்டங் களில் 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். 2015-ம் ஆண்டில் இருந்து பஞ்சாப்புக்கு எதிரான அவரது ரன்வேட்டை தொடருகிறது.

*
இந்த ஆட்டத்தில் பேர்ஸ்டோ தனது முதலாவது சிக்சரை அடித்த போது, அது நடப்பு தொடரில் 300-வது சிக்சராக பதிவானது.

*
வார்னர் -பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 160 ஓட்டக்கள் அடித்தது தொடக்க விக்கெட்டுக்கு ஐதராபாத் ஜோடியின் 2-வது அதிபட்சம் இதுவாகும். இதே வார்னர்-பேர்ஸ்டோ கூட்டணி ஏற்கனவே கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக 185 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்திருக்கிறது.

 

ஐபிஎல்2020,   விளையாட்டு

 

No comments: