Wednesday, September 8, 2021

ஆப்கானிஸ்தான் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்குமா?

ஆப்கானிஸ்தானை  கைப்பற்றிய  தலிபான்கள் புதிய அரசாங்கத்தை அறிவித்துள்ளனர். இது இடைக்கால அரசு என  அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை வருடங்களுக்கு இடைக்கால‌  அரசாங்கமாக இருக்கும் என்பது தெரியவில்லை. எதிர்பார்த்ததுபோல்  பெண்களுக்கு இடம் இல்லை. அமெரிக்க  அரசாங்கத்தால் தேடப்படும் பட்டியலில் உள்ள‌வர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.

  ஆப்கானிஸ்தானின் புதிய அரசு தொடர்பான அறிவிப்பை  தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்  வெளியிட்டார்.

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவர்களின் விவரத்தை தாலிபன் தலைமை அறிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானை இனி 'ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்' என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தலைநகர் காபூலில் தாலிபன் செய்தித்தொடர்பாளர் சஃபியுல்லா முஜாஹிதின் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இடைக்கால அரசில் இடம்பெறும் அமைச்சர்களின் விவரங்களை வெளியிட்டார். அதன் விவரம்:

பிரதமர் - முல்லா மொஹம்மத் ஹஸன் அகுந்த் (இவர் தலிபான் இயக்கத்தின் நிறுவனர் முல்லா ஒமருடன் கூட்டாளியாக இருந்தவர்),துணை பிரதமர்கள் - முல்லா அப்துல் கனீ பரதர், மெளலவி அதுல் சலாம் ஹனாஃபி,உள்துறை - சிராஜுதீன் ஹக்கானி (இவர் ஹக்கானி ஆயுத போராளிகள் குழுவின் தலைவருடைய மகன் - இந்த குழு அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவால் தேடப்படும் நபர்)பாதுகாப்பு - முல்லா மொஹம்மத் யாகூப் முஜாஹித் (இவர் தலிபான் நிறுவனர் முல்லா ஒமரின் மகன்),வெளியுறவு - மெளலவி ஆமிர் கான் முட்டாக்கி,நிதி- முல்லா ஹிதாயத் பத்ரி,நீதித்துறை - அப்துல் ஹக்கீம் இஷாக்ஸி,தகவல் துறை - கைருல்லா சயீத் வாலி கெய்ர்க்வா

தற்போது அறிவிக்கப்பட்டவர்கள், முறைப்படி அரசு அமையும்வரை இடைக்காலமாக அமைச்சரவையை வழிநடத்துவார்கள் என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

தலிபான்இயக்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவரான முல்லா ஒமரின் கூட்டாளியாக இருந்தவர் முல்லா மொஹம்மத் ஹஸன் அகுந்த்.

 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை தலிபான் ஆண்டபோது, துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்தவர். முந்தைய தாலிபன் ஆளுகையின்போது கந்தஹார் மாகாண ஆளுநராகவும் இருந்துள்ளார்.

இவரை பிரதமர் பதவிக்கு தலிபான்அதிஉயர் தலைவர் ஹெபடுலா அகுந்த்ஸாதா தேர்வு செய்திருக்கலாம் என பிபிசி உருது கூறியுள்ளது.

பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளவர்களின் ஆவணங்களின்படி இவர் கந்தஹார் மாகாணம், மியால் பகுதி, ஸ்பின் போத்லாக் மாவட்டத்தில் பிறந்தவர், இவரது வயது 58. நூர்சாய் பழங்குடியைச் சேர்ந்தவர்.

முல்லா ஹஸ்ஸன் அகுந்த், ஐ.நா பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பவர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலிலும் இவர் இருக்கிறார்.

தலிபானின் அதிஉயர் தலைவர் ஹெபடுலா அகுந்த்ஸாதா. 2001இல் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையிடம் தலிபான்வீழ்ச்சி அடைந்த பிறகு பொதுவெளியில் தென்படாத இவர்,  ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசை தாலிபன் அறிவித்த பிறகே தனது பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். 

வயதில் 60களில் இருக்கும் இவர், தமது வாழ்வின் பெரும்பாலான நாட்களை ஆப்கானிஸ்தானிலேயே கழித்துள்ளார். 1980களில் சோவியத் ஆக்கிரமிப்பின்போது இஸ்லாமியவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கெடுத்த இவர், ஆயுதக்குழுவுக்கு தலைவர் என்பதை விட, சமய தலைவராகவே தலிபான்களால் போற்றப்பட்டார்.1990களில் தலிபான்ஆளுகையின்போது ஷரிய சட்டங்களின்படி தலிபான் நீதிமன்றத்துக்கு தலைமை வகித்தார்.

ஷரிய சட்டங்களின்படி தண்டனைகள் கடுமையானதாக இருந்தன. பொதுவெளியில் குற்றவாளிகள் கொல்லப்படுவது, தகாத உறவில் ஈடுபட்டால் கொல்லப்படுவது திருடினால் முடமாக்கப்படுவது என அந்த ஆளுகையில் தண்டனைகள் கடுமையாக இருந்தன.இந்த நிலையில், இன்று ஹெபடுலா அகுந்த்ஸாதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய விதிகள் மற்றும் ஷரிய சட்டத்தை அரசு பராமரிக்கும் என்று கூறியுள்ளார்.தேசத்தின் உயரிய நலன்களை பாதுகாத்து, அமைதி, வளம், வளர்ச்சி தழைத்தோங்க பொறுப்பில் உள்ளவர்கள் பணியாற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைக்கும் வைபவத்தில் கலந்துகொள்ள ஐக்கிய அமீரகம், பாகிஸ்தான், சவுதி அரேபியா சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய ஆறு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவை  தலிபான்களுக்கு  மிக நெருங்கிய  நாடுகளாகும்.இதில் பாகிஸ்தான், ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தலிபான்கள் ஆட்சி நடத்திய 90களிலே அவர்களுக்கு ஆதரவு அளித்தன.

தற்போது தலிபான்கள் நட்புப் பட்டியலில் புதிதாக சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் சேர்ந்துள்ளன. கட்டாருக்கும் தலிபான்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.கல்வித்துறை பற்றி குறிப்பிட்டுள்ள அவர், ஷரிய சட்டத்துக்கு உட்பட்டு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான மதம் மற்றும் நவீன அறிவியல் சூழ்நிலைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

அப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்கப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ள‌து. பயக்கரவாதிகளுடன் தொடர்பு கொள்ளப்போவதில்லை என  கனடா ஏற்கெனவே அறிவித்தது. பிரிட்டனால் தேடப்படும் நபர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் பிரிட்டனும் உடனடியாக அங்கீகாரமளிக்க மாட்டாது.சீனா, பாகிஸ்தான், தலிபான் எல்லாம் ஓரணியில் நிற்பதால் இந்தியா இப்போதைக்கு நெருங்க  மாட்டாது.

இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறுமா அரசியல் கட்சிகள் உருவாக இடம் கொடுக்கப்படுமா  போன்ற  கேள்விகளுக்கு எதுவித பதிலும் இல்லை.








No comments: