Friday, September 10, 2021

ஆப்கானிஸ்தானில் ஆழமாகக் கால் பதிக்கும் சீனா

அமெரிக்கா, இந்தியா  ஆகிய இரண்டு நாடுகளின் கண்காணிப்பில்  ஆப்கானிஸ்தான் இருந்தபோது  அதிக  ஈடுபாடு  இல்லாமல் இருந்த  சீனா இப்போது  அதிக  அக்கறை  காட்டுகிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள்   கைப்பற்றியபோது  உலக நாடுகள்  அனைத்தும்  அதிர்ச்சியுடன் பார்த்த போது  சீனா முந்திக்கொண்டு  ஆதரவு தெரிவித்தது.

உலக நாடுகளுடன் நட்புறவு பாராட்ட விரும்பும் தலிபான்கள் அமெரிக்காவுடனும், இந்தியாவுடனும்  நெருக்கமாக செயற்பட மாட்டார்கள். அந்த இடத்தை நிரப்ப சீனா முயற்சிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான புதிய ஒரு எல்லை உருவாகுவதை  சீனா விரும்புகிறது. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதை தடுக்க, இந்தியாவின்  அண்டை நாடுகளை வளைத்துள்ளது போல், ஆப்கானையும் கைக்குள் வைக்க சீனா முயற்சிக்கிறது.

இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் என பல நாடுகளை சீனா கைக்குள் வைத்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை செய்வதாக இந்த நாடுகளில் அதிக அளவில் முதலீடுகள் செய்து, அவற்றை தன் கட்டுப்பாட்டில் சீனா வைத்துள்ளது.திபெத் அதன் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறு அருகில் உள்ள அனைத்து நாடுகளையும் வளைத்து, இந்தியாவுக்கு மிகப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக சீனா விளங்கி வருகிறது. எதிர்காலத்தில் போர் ஏற்பட்டால் தன் படைகளை அந்த நாடுகளில் நிலைநிறுத்தி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பது அதன் திட்டம்.நேரடியாக போரில் ஈடுபடாவிட்டாலும், இந்தியாவுக்கு பாதுகாப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சீனா நிச்சயம் ஏற்படுத்தும்.

ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில்  செய்யப்பட்ட   வர்த்தக பொருளாதார  ஒப்பந்தங்கள் அனைத்தும் கைவிடப்படும் நிலையில் உள்ளன. அந்த  இடத்தை  சீனா  கெட்டியாகப் பிடிக்க  சந்தர்ப்பம் உள்ள‌து. ஆப்கானிஸ்தானுக்கு உட்கட்ட‌மைப்பு வசதிகள் தேவையாக உள்ளது. சீனா முன்னின்று  அதனை  நிறைவேற்றும்

ஆப்கானிஸ்தானூடாக பல நாடுகளை  சீனாவுடன் இணைக்கும், பிரமாண்ட சாலை திட்டத்துக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பது ஒரு காரணம். தங்கள் நாட்டுக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த சீனாவுக்கு தலிபான்கள் அனுமதிக்க வேண்டும்.மற்றொன்று, ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு துர்கிஸ்தான் அமைப்பு என்ற பயங்கரவாத அமைப்பு, உய்குர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தானில் வலுவாக உள்ளது.

ஆப்கானுடன் 80 கி.மீ., நீள எல்லையை சீனா பகிர்ந்து கொள்கிறது. அதில் பெரும்பகுதி ஜின்ஜியாங் மாகாணத்தில் வருகிறது. அதனால், தன் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தவிர்க்க சீனா விரும்புகிறது. தலிபான் அமைப்பின் முக்கிய தலைவர்கள்  சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீயை சந்தித்து பேசினர். அப்போது, 'இந்த பயங்கரவாத அமைப்பினர் எங்கள் எல்லையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்' என, தலிபான் உறுதி அளித்துள்ளது.

பல வகையான  தாதுக்கள் அடங்கிய அரிய பூமி ஆப்கானிஸ்தான். சுமார் 1 டிரில்லியன் டொலர் மதிப்பினால் ஆன பூமியின் மீது  ஆப்கானிஸ்தான் அமர்ந்துள்ளது. பொருளாதாரம்,நிதி ரீதியாக பின்னடைவில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு உதவ உலக நாடுகள் பின் வாங்கியிருந்தாலும், தற்போது சீனா உதவலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது.ஆப்கானில் உள்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்துதல், தொழில் கட்டமைப்பு வாய்ப்புகள் மற்றும் பயன்படுத்தப்படாத 1 டிரில்லியன் டொலர் மதிப்பிலான விலையுயர்ந்த கனிமங்களை அணுகுதல் என சீனாவுக்கு தேவையானதாக உள்ளது

தலிபான்களுக்கு உதவ எந்த ஒரு  நாடும் இப்போது தயாராக இல்லை.தலிபானுக்கு உதவ ஒரு பலமான நாடு தேவை. இதனால் சீனாவை தாலிபான்கள் ஏற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவும் ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் சீனா 1 டிரில்லியன் கனிமங்களை எடுப்பதிலும் உதவி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் உதவியுடன், தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் பொருளாதார மீட்சிக்கு போராடுவார்கள் என்று  தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இத்தாலிய செய்தித்தாளிடம் கூறினார். சீனாவிடம் இருந்து பெரும் உதவிகளை  தலிபான்கள் எதிபாரப்ப‌தை இது வெளிப்படுத்துகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தை திறந்து வைக்க சீனா உறுதி அளித்துள்ளதாகவும்  'மாட்டிறைச்சி' உறவை சீனா பராமரிக்கும் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

"சீனா எங்கள் மிக முக்கியமான பங்குதாரர் மற்றும் எங்களுக்கு ஒரு அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கிறது, ஏனென்றால் அது நம் நாட்டை முதலீடு செய்து மீண்டும் கட்ட தயாராக உள்ளது" என்று தாலிபான் செய்தி தொடர்பாளர் பேட்டியில் கூறினார்.வர்த்தகப் பாதைகளைத் திறப்பதன் மூலம் சீனா தனது உலகளாவிய செல்வாக்கை அதிகரிக்க விரும்பும் உள்கட்டமைப்பு முயற்சியான புதிய சில்க் சாலை - தலிபான்களால் மதிக்கப்படுவதாக அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள  செப்புச்  சுரங்கங்கலை இயக்குவதற்கு  சீனாவின் உதவிய  தலிபான்கள் நாடக்கூடும். விமான நிலையங்களை இயக்குவதற்கான தொழில் நுட்ப  உதவிகளையும்  சீனாவிடம் இருந்து தலிபான்கள் பெறுவதற்கான சந்தர்ப்பம் உள்ள‌து.  .

  சில சிறிய அளவிலான முதலீடுகளை சீனா செய்யக்கூடும், ஆனால் அந்த நீண்ட கால முதலீடுகள் நாட்டில் போதுமான நிலைத்தன்மை மற்றும் நாட்டில் போதுமான பாதுகாப்பு இருப்பதைப் பொறுத்தது, இவை பொருளாதார ரீதியாக சாத்தியமான ஒன்றாக மாறும். ஆனால், தலிபான்கள் சில வரம்புகளை விதித்தே  உதவியைப் பெறுவார்கள். 

இன்றைய நாளில் இலத்திரனியல் சாதனங்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் சீனாவுக்கு, ஆப்கானில் உள்ள கனிமங்கள் தேவை. குறிப்பாக பட்ரிகளில் பயன்படுத்தப்படும் லித்தியத்திற்கு தேவை அதிகம் உள்ளது.  சீனாவின் குறி ஆப்கானில் இருக்கும் தாதுக்கள் என்பதால், மெதுவாக ஆப்கானிஸ்தானுக்கு தனது ஆதரவினை கொடுக்க தொடங்கியுள்ளது. இது அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான அப்பிள், டெஸ்லா நிறுவனங்களுக்கு போட்டியாக அமையலாம் எனவும் கருத்துகள் நிலவி வருகின்றன. மொத்தத்தில் நேரம் பார்த்து காய் நகர்த்த தொடங்கியுள்ளது சீனா.

அமெரிக்காவுக்கு இணையான  ஒரு  நாடு தலிபான்களுக்குத் தேவையாக உள்ளது. அது சீனாவாகத்தான்  இருக்க முடியும்.

No comments: