Monday, September 13, 2021

ஆப்கான் அரசியலில் மூக்கை நுழைக்கும் பாகிஸ்தான்

தலிபான்கள் ஆப்கானிஸ்தானைப் பொறுப்பேற்றது முதல் அங்கு பாகிஸ்தானின் கை ஓங்கி உள்ளது. ஆப்கானில் அமெரிக்கா இருக்கும் வரை  வெளிப்படையாக உதவி செய்யாமல் அமைதிகாத்த பாகிஸ்தான் அமெரிக்காவின்  வெளியேற்றத்துக்குப் பின்னர் வெளிப்படையாக தன‌து காய்களை நகர்த்தத் தொடங்கி உள்ளது.

ஆப்கானின் அரசுத் த‌லைவர்களில்  அனேகமானோர் பாகிஸ்தானைப்  பின்னணியாக கொண்டவர்கள்.  அமெரிக்காவாலும்  பிற நாடுகளாலும் தேடப்படும் பட்டியலில் உள்ளவர்களின் அரசுக்கு பாகிஸ்தான் முண்டு கொடுக்கிறது.ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் நிலையில் அங்கு புதிய அரசு அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைவரான பயஸ் ஹமீத் காபுல் சென்று அங்கு தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பு பல்வேறு யூகங்களையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

ஆப்க‌னின் புதிய அமைச்சரவையை தஜிக், உஸ்பெக், ஹசாரா சிறுபான்மையினர் என அனைவரையும் உள்ளடக்கியதாக அமைக்க தாலிபான்கள் விரும்பினர். முன்னாள் அரசியல்வாதிகளை அமைச்சரவையில் இடம்பெறச் செய்வதன் மூலம் சர்வதேச அங்கீகாரத்தை பெற முடியும் என்பது தலிபான்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.பாகிஸ்தானின் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே, ஹக்கானி பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.


ஆப்கானிஸ்தானின்பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், அந்நாட்டுனான வர்த்தகம் பாகிஸ்தானின் நாணயமான ரூபாய் மதிப்பிலேயே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் அமெரிக்க டொலரிலேயே நடைபெற்று வந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் டொலருக்குப் பதிலாக பாகிஸ்தானின் பணம் புழக்கத்தில் வர உள்ளது.

ஆப்கானிஸ்தான் தலிபான் வசம் சென்றுள்ளதை தங்களுக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். ஆர்ப்பாட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தானுக்கு எதிராக ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பாகிஸ்தான் தூதரகம் முன்பு அவர்கள் பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர். தாலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தானுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்ட பலர், பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு அந்நாட்டுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். முதலில் பெண்கள் அதிகளவு கூடினர். அதனை தொடர்ந்து ஆண்களும் கூடி கோஷம் எழுப்பினர்.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என்றும்  விடுதலை வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தை படம் பிடிக்க முயன்ற‌ பத்திரிக்கையாளர்களை தலிபான்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் விதமாக வானத்தை நோக்கி தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்கள் கலைந்து சென்றனர்

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியிருப்பதில் பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

 ஆப்கானில் புதிய இடைக்கால   அரசை அங்கீகரிப்பதில் சர்வதேச நாடுகள் தயக்கம் காட்டி வருவதுடன் இன்னமும் தெளிவான முடிவை எடுக்க முடியாமல் உள்ளனர்.  ஆனால், ஆப்கானின் எல்லை நாடான பாகிஸ்தானில்  உள்ள மக்கள் தலிபான்களின் ஆட்சியை விரும்புகிறார்கள்.

பாகிஸ்தாலில்  சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்திருப்பதற்கு பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கலப் பாகிஸ்தான் என்ற அமைப்பினால் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 55% சதவிகித பாகிஸ்தானியர்கள் தலிபான் ஆட்சிக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். 25% பாகிஸ்தானியர்கள் மட்டுமே தலிபான் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்த 65% பேர் தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 5ம் திக‌தி வரையில் சுமார் 2500 பாகிஸ்தானியர்களிடையே இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டோரின் மொத்தம் 58% ஆண்களும், 36% பெண்களும் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியால் மகிழ்ச்சியடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் நகர்ப்புறங்களில் வசிப்போர் 58% தாலிபான்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானுக்கு உலக நாடுகள் உதவ முன்வரவில்லை என்றால், அந்நாடு முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஆட்சியாளர்களின் வங்கிக் கணக்குகளை தலிபான்கள் முடக்கியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், அந்நாட்டு மத்திய வங்கியில் இருந்த 10 பில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்கா முடக்கியுள்ளது. இதேபோல, 440 மில்லியன் அமெரிக்க டொலர்வ்மதிப்பிலான அவசர இருப்புத் தொகையை சர்வதேச கண்காணிப்பு நிதியம் முடக்கியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் சூழல் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தியது.

அப்போது பேசிய ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா சிறப்பு தூதர் டிபோரா லயன்ஸ், ஆப்கானிஸ்தானில் உள்ள 97 சதவிகித மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் செல்லும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார். அந்நாட்டில் பொருளாதார முடக்கம் ஏற்படும் முன்னர் சர்வதேச நாடுகள் உதவ முன் வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். ஆப்கான் நாணயத்தின் மதிப்பு படுபாதாளத்திற்கு செல்லும் என்றும், உணவுப் பொருட்கள் மற்றும் எரிவாயு விலை நினைக்க முடியாத அளவிற்கு உயரும் என்றும் லயன்ஸ் தெரிவித்தார். ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் அரசிடம் பணம் இல்லை என்றும் அவர் கூறினார்.

பொருளாதார நடவடிக்கையை மேற்கொள்ள சில காலம் அனுமதி அளிக்க வேண்டும். நெகிழ்வுத்தன்மை மற்றும் உண்மையை நிலைநாட்ட அனுமதி அளித்தால், இம்முறை அவர்கள் மனித உரிமையைக் காத்து பயங்கரவாதத்தை எதிர்ப்பார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் ஆப்கானிஸ்தான் அரசு செய்த செலவில் 75 சதவிகிதத்தை கொடுத்து வந்தன. ஆப்கானை விட்டு தப்பிபோடிய முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி உள்ளிட்ட சிலரது மத்திய வங்கி கணக்குகளை தலிபான்கள் முடக்கியுள்ளனர். முன்னாள் துணை அதிபர், முன்னாள் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தலிபான்களின் கலாச்சார குழுத் தலைவர் ஆன்மானுல்லா சமன் கனி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள், ஆளுநர்கள் உள்ளிட்டோர் மற்ற வங்கிகளில் வைத்துள்ள கணக்குகளை முடக்கவும் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, ஆப்கான் பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்றும், குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே பெண்களின் கடமை என்றும் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சயத் ஜக்ருல்லா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments: