Sunday, April 11, 2010

அழகிரியின் அதிரடியால்குழப்பத்தில் தி.மு.க.


திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று அனைவரும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கையில், ஸ்டாலினுக்குப் போட்டியாக மு.க. அழகிரி புறப்பட்டிருப்பதால் கட்சிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது. முதல்வர் கருணாநிதியின் நிழலில் வளர்ந்து அரசியலில் புகுந்தவரல்ல ஸ்டாலின். 40 வருட காலம் போராட்டங்கள் செய்து சிறைக்குச் சென்று தனக்கென அரசியல் வாழ்வை ஸ்திரப்படுத்தியவர் ஸ்டாலின்.
ஸ்டாலினுக்கு எதிராக வெளிப்படையாக விமர்சனம் செய்பவர்கள் யாரும் கட்சிக்குள் இல்லை. ஸ்டாலினுக்கு முடிசூட்ட முதல்வர் கருணாநிதி முயன்ற போதெல்லாம் நாசூக்காக எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் அனைவரையும் தன் வழிக்குக் கொண்டு வந்துள்ளார் முதல்வர் கருணாநிதி. முதல்வரின் இன்னொரு வாரிசான மு. க. அழகிரியிடமிருந்து இப்படி எதிர்ப்புக் கிளம்பும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பேரறிஞர் அண்ணா மரணமானதும் திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்தும் தகுதி யாருக்கு என்ற பட்டிமன்றம் நடைபெற்றது.
கலைஞர் கருணாநிதி தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்ந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமானவர் கருணாநிதிதான் என்பது வெளிப்படை. அன்று கட்சியை வளர்த்தவர் இன்று வாரிசுகளையும் வானளாவ வளர்த்துள்ளார்.
ஸ்டாலினின் அரசியல் திட்டமிட்டு உருவானதல்ல. கருணாநிதியின் போராட்டங்களிடையே கவரப்பட்ட ஸ்டாலின் அரசியல் பாதையில் அடி எடுத்து வைத்தார். போராட்டம், சிறை வாசம் என்பன ஸ்டாலினை மெருகேற்றின. மதுரையில் அழகிரி கட்சியை வளர்த்ததோடு தனது செல்வாக்கையும் அபரிமிதமாக வளர்த்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்பது உறுதியான நிலையில் மூத்த தலைவர்கள் சிலர் ஸ்டாலினுக்கு வழிவிட்டனர். ஸ்டாலின் தலைவராக வருவதை விரும்பாத சிலர் ஒதுக்கப்பட்டனர். ஸ்டாலினின் தலைமையின்கீழ் செயற்படுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாரான நிலையில் குடும்பத்துக்குள்ளேயே பூகம்பம் வெடித்துள்ளது.
ஸ்டாலினா அழகிரியா என்ற கேள்வி எழுந்த போது ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்பதை மறைமுகமாகவும் நாசூக்காகவும் வெளிப்படுத்தி உள்ளார் முதல்வர் கருணாநிதி. அனைவரையும் அரவணைத்து காரியமாற்றுபவர் ஸ்டாலின். அதிரடியான நடவடிக்கையினால் அரசியல் களத்தில் தனக்கென இடத்தைப் பெற்றுள்ளார் அழகிரி. அழகிரிக்கும் ஸ்டாலினுக்குமான பனிப் போரை தனது இராஜ தந்திரம் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தார் முதல்வர் கருணாநிதி.
தமிழ் நாட்டுக்கு ஸ்டாலின், டில்லிக்கு அழகிரி என்ற முதல்வர் கருணாநிதியின் தீர்மானத்தால் அழகிரி அடங்கி விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அடங்குவது போல் அமைதியாக இருந்த அழகிரி அவ்வப்போது அதிரடியாக ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார். மத்திய அமைச்சராக டில்லி சென்ற பின்னர் அங்குள்ள நிலைமை அழகிரிக்கு சாதகமாக இருக்கவில்லை. கேள்வி நேரங்களின் போது அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பதிலளிக்க வேண்டும். ஆங்கிலத்தில் அவ்வளவு புலமை இல்லாமையினால் கேள்விக்குப் பதிலளிப்பதை அழகிரி தவிர்த்து வந்தார். தமிழில் பதிலளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றது. சபாநாயகரும் இப்பிரச்சினையில் அதிக கவனம் எடுத்தார்.
டில்லியில் அரசியல் செய்வதற்கு அழகிரி தகுதியற்றவர் என்ற பிரசாரம் ஒருபுறத்தில் முடுக்கி விடப்பட்டது. அழகிரி டில்லியில் சாதிப்பார் என்று முதல்வர் கருணாநிதி முழு நம்பிக்கையுடன் இருந்தார். ஸ்டாலினுக்கு கட்சித் தலைமைப் பதவி வழங்கும் சந்தர்ப்பம் நெருங்குகையில் முதல்வர் கலைஞரைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்று அதிரடியாகப் பேட்டியளித்தார் அழகிரி. இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தெரிவு செய்வது எப்படி என்று கட்சியின் யாப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கட்சியின் யாப்பின் பிரகாரம் தேர்வு செய்யப்படுபவரை தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டியது கட்சியின் உறுப்பினர்களின் தலையாய கடமை. கருணாநிதியைத் தவிர வேறு ஒருவர் கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டால் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். கருணாநிதியைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று அழகிரி கூறியது கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயலாகும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் ஸ்டாலினுக்குத்தான் செல்வாக்கு அதிகம். ஸ்டாலினுக்குப் பின்னர் அரசியலில் களமிறங்கிய அழகிரி, ஸ்டாலினை முந்தும் வகையில் அதிரடியாக தனது கடமைகளை முன்னெடுத்தார். அழகிரியின் அரசியல் அவதாரம் ஸ்டாலினுக்குப் பல வழிகளிலும் நெருக்கடியைக் கொடுத்தது. தலைமைப் பதவிக்குப் போட்டியிடுவேன் என்று கூறியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அழகிரியின் அறிவிப்பினால் எதிர்க் கட்சிகள் மகிழ்ச்சியடைந்துள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் முக்கியஸ்தர்களை வலை வீசிப் பிடித்தது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த நடவடிக்கையினால் எதிர்க் கட்சிகள் பலமிழந்துள்ளன.
பலமாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்கு வழி தெரியாது எதிர்க் கட்சிகள் தவித்துக் கொண்டிருக்கையில் அழகிரியின் அதிரடி அறிவிப்பு மகிழ்ச்சியை ஊட்டியுள்ளது.
அழகிரியா? ஸ்டாலினா? என்ற கேள்வி எழும் போது முதல்வர் கருணாநிதியின் பார்வை ஸ்டாலினின் பக்கமே செல்லும் சாத்தியம் உள்ளது. மறைமுகமாகவும் நாசூக்காகவும் தனது நிலைப்பாட்டை பலமுறை முதல்வர் வெளிப்படுத்தி விட்டார். அழகிரிக்கு அது புரியாமல் இல்லை. அழகிரி வெளியேறினால் தென் மாவட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் பலமிழந்து விடும். கட்சியின் செல்வாக்குடன் அழகிரியின் செல்வாக்கும் இணைத்திருப்பதனால்தான் தென்மாநிலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுகிறது.
ஸ்டாலின் அழகிரி இருவரும் இணைந்திருந்தால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும். இருவரில் ஒருவர் கட்சியை விட்டு வெளியேறினாலும் திராவிட முன்னேற்றக் கழகம் பலமிழந்து விடும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாரிய வளர்ச்சியை தடுக்க முடியாமல் எதிர்க் கட்சிகள் தடுமாறும் வேளையில் எதிர்க் கட்சிகளுக்குச் சாதகமான நடவடிக்கைகளை அழகிரி முன்னெடுத்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்காது என்று சூளுரைத்த அழகிரி, தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தை பலவீனப்படுத்தி உள்ளார். தலைமைப் பதவி கிடைக்கவில்லை என்றால் கட்சியில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகச் செயற்படுவார் அழகிரி.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எம். ஜி. ஆர்., வைகோ ஆகியோர் வெளியேறிய போது கழகம் பலவீனமடைந்தது. எம். ஜி. ஆரின் வெளியேற்றம் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. எம். ஜி. ஆர். உயிரோடு இருக்கும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் தலை தூக்கவில்லை. வைகோவின் வெளியேற்றம் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.
அழகிரியின் அதிரடியான அறிவிப்பு திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் பலவீனமடைந்தால் அதனுடனான கூட்டணி பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படலாம். காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், தேசிய முன்னணி திராவிடக் கழகமும் ஆர்வம் காட்டுகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து இருக்கும் வரை தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த முடியாது என்பது வெளிப்படையானது.
மாறன் சகோதரர்களுடனான பிரச்சினையின் போது திராவிட முன்னேற்றக் கழகம் சிறிது தடுமாறியது. அப்பிரச்சினையும் சமரசம் ஏற்படுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர் அழகிரி. இப்போது அழகிரியினால் கழகத்துக்குள் பிரச்சினை தோன்ற ஆரம்பித்துள்ளது.
அழகிரியின் தலைமையை ஸ்டாலின் ஏற்க மாட்டார். ஸ்டாலினின் தலைமையை அழகிரி விரும்ப மாட்டார். வாரிசா? கழகமா? என்ற இரு தலைக் கொள்ளி எறும்பான நிலையில் உள்ளார் முதல்வர் கருணாநிதி.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 11/04/10

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in