Sunday, April 18, 2010

தி.மு.க. பக்கம் சாய்வதற்குமுயற்சி செய்யும் பா.ம.க.










தமிழக சட்ட சபையில் மேல் சபை அமைக்க வேண்டும் என்ற முதல்வர் கருணாநிதியின் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்வதற்கான தீர்மானத்தை தமிழக சட்ட சபை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிக் கட்சிகள் ஆகியனவற்றின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. யாருமே எதிர்பாராத வகையில் திடீரென பாட்டாளி மக்கள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவளித்தது. "மைனாரிட்டி அரசு' என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவினால் வர்ணிக்கப்படும் தமிழக அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இதேவேளை, பென்னாகரம் இடைத் தேர்தலின் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பலத்த போட்டியின் மத்தியில் பென்னாகரத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பாட்டாளி மக்கள் கட்சி பலம் வாய்ந்த கட்சி ஒன்றுடன் கூட்டணி சேர்ந்தால்தான் அடுத்து வரும் சட்ட சபைத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சி விரும்புகிறது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி சேரக் கூடாது என்ற கருத்து திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் உள்ளது. பென்னாகரம் இடைத் தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் பேச்சாளர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை மிக மோசமாகத் தாக்கிப் பேசினார்கள். அந்தத் தாக்கத்தில் இருந்து விடுபடாத திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி சேர்வதை விரும்பவில்லை.
ஜூன் மாதத்துடன் அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால்தான் அன்புமணியின் பதவியைத் தொடர முடியும். இல்லையேல் அன்புமணியின் நாடாளுமன்றப் பதவி பறிபோய் விடும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவினாலேதான் அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினரானார். அதன் பின் மத்திய அரசில் சுகாதார அமைச்சராகி பல புரட்சிகரமான திட்டங்களை அமுல்படுத்தினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி தோல்வி அடையும் என்று கருதிய டாக்டர் ராமதாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார். தன் மகன் அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பங்கமில்லாத வகையில் ஜெயலலிதாவுடன் ஒப்பந்தம் செய்தார் டாக்டர் ராமதாஸ். ஜெயலலிதாவுடனான கூட்டணியினால் முதலுக்கே மோசமானதால் கூட்டணியிலிருந்து வெளியேறி தனி ஆவர்த்தனம் வாசிக்கத் தொடங்கினார் டாக்டர் ராமதாஸ்.
ஜெயலலிதாவுடன் இணைந்த பின்னர் வீழ்ந்து விட்ட தனது கட்சியின் செல்வாக்கை தூக்கி நிறுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். டாக்டர் ராமதாஸின் முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போன நிலையில் பொன்னாகரம் இடைத்தேர்தல் முடிவு ராமதாஸுக்கு கை கொடுத்தது. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் கூட்டணிக் கட்சிகளுடன் பென்னாகரம் இடைத் தேர்தலைச் சந்தித்தன. விஜயகாந்தும் டாக்டர் ராமதாஸும் கூட்டணிகளின் தயவின்றி தனியாக இடைத் தேர்தலைச் சந்தித்தனர். விஜயகாந்த் வழமை போல் படுதோல்வி அடைந்தார். டாக்டர் ராமதாஸின் தனிக் கட்சி 40 ஆயிரம் வாக்குகள் பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அதிர்ச்சியளித்தது.
தமிழக சட்ட சபையின் மேல் சபை 1986 ஆம் ஆண்டு எம். ஜி. ஆர். முதல்வராக இருந்த போது ஒரு அறிவிப்பின் மூலம் கலைக்கப்பட்டது. சட்ட சபையில் காரசாரமாக விவாதிக்கப்படும் சில தீர்மானங்களை மேலவையில் உள்ள உறுப்பினர்கள் நிதானமாக சிந்தித்து விவாதித்தார்கள். கட்சி நலனுக்கு அப்பாற்பட்டு பொது நலனைச் சிந்தித்து மேலவை நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் சட்ட சபையில் உள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கேற்ப மேல் சபை உறுப்பினர்களை நியமிக்கலாம்.
தமிழக சட்ட சபையில் இயங்கி வந்த மேல் சபைக்கு வழக்கறிஞர் ராகவாச்சாரி, நடிகை நிர்மலா உட்பட நான்கு பேரை அன்றைய முதல்வர் எம். ஜி. ஆர். நியமித்தார். நடிகை நிர்மலாவின் நியமனம் சர்ச்சையைக் கிளப்பியது. எதிர்க்கட்சிகள் நிர்மலாவின் நியமனத்தை கடுமையாகக் கண்டித்தன. நிர்மலாவுக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்கும்படி வற்புறுத்தின. எதிர்க் கட்சிகளின் கோரிக்கைகள் எதனையும் செவிமடுக்காத முதல்வர் எம்.ஜி. ஆர். நடிகை நிர்மலாவை மேல் சபைக்கு நியமனம் செய்வதில் உறுதியாக இருந்தார்.
நிர்மலாவின் நியமனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிர்மலாவின் நியமனம் தகுதியற்றது என்று தீர்ப்பு வழங்கியது. இதனால் கோபமுற்ற எம்.ஜி.ஆர். மேலவையை முடக்கினார். ஆந்திரா சட்ட சபையில் இயங்கி வந்த மேலவையை 1987 ஆம் ஆண்டு முதல்வர் என். டி. ராமராவ் முடக்கினார்.
1989 ஆம் ஆண்டு தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்த போது மீண்டும் மேலவைக்கு புத்துயிரளிக்க முயற்சி செய்யப்பட்டது. அப்போது அது கைகூடவில்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மேலவை அமைப்பது பற்றி தமிழகத்தில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு முயற்சி செய்தது. அப்போது ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆந்திராவில் மேலவை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் குரல் கொடுத்தது. தமிழகத்தில் மேலவை அமைத்தால் ஆந்திராவிலும் மேலவை அமைக்க வேண்டும் என்பதனால் அந்த கோரிக்கையை வாஜ்பாய் அரசு நிராகரித்தது.
இப்போது தமிழக காங்கிரஸ் கட்சியினைத் திருப்திப்படுத்தவே முதல்வர் கருணாநிதி மேலவை அமைக்க கடும் முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸின் தயவிலேதான் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்கிறது. காங்கிரஸ் கட்சியின் தயவு இன்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்வதன் முதற்கட்டமே மேலவை அமைப்பதற்கான அவசியம் என்று கருதப்படுகிறது. அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கு முயற்சி செய்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி என்ற ராகுலின் திட்டத்தை தவிடு பொடியாக்குவதற்கு மேலவையை முக்கிய காரணியாக்க முயற்சிக்கிறார் முதல்வர்.
பென்னாகரத்தில் கிடைத்த வாக்குகளை வைத்துக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரத் துடிக்கிறார் டாக்டர் ராமதாஸ். கட்சிக் கொள்கையை ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு தன் மகன் அன்புமணியின் நாடாளுமன்றப் பதவியை தக்க வைக்க வேண்டிய முக்கிய கடமை டாக்டர் ராமதாஸுக்கு உள்ளது.
தன் மகன் அவையில் முந்தி இருப்பதற்காகக் கீழே இறங்கி வரத் தயாராக உள்ளார் டாக்டர் ராமதாஸ். ராமதாஸுக்கு இரக்கப்படும் நிலையில் முதல்வர் கருணாநிதி இல்லை.
அதேவேளை, தனது மகன் அழகிரியின் ஆவேசப் பேச்சினால் மனம் நொந்து போயுள்ளார் முதல்வர் கருணாநிதி. சக்கர நாற்காலியில் இருந்து கொண்டு தமிழ் நாட்டையும் கட்சியையும் முதல்வர் கருணாநிதி நிர்வகித்து வரும் நிலையில் முதல்வர் கருணாநிதி விரும்பாத வார்த்தைகளை வெளியிட்டுள்ளார் அழகிரி.
அழகிரியின் பேச்சு தமிழ் நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கட்சியில் உள்ளவர்கள் மௌனத்தைக் கடைபிடிக்கிறார்கள். அழகிரியைக் கண்டித்து அல்லது எதிர்த்து தமிழகத்தை ஆளும் கட்சி பிரமுகர்கள் யாரும் இதுவரை வாயைத் திறக்கவில்லை. முதல்வர் மட்டும் அவ்வப்போது அறிக்கை விடுகிறார். குடும்பப் பின்னணியை முதல்வரே தீர்க்கட்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் அதனை முதல்வரின் பொறுப்பில் விட்டு விட்டார்கள். குடும்பமா? கட்சியா? என்ற முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 18/04/10

No comments: