Thursday, February 24, 2011

205 ஓட்டங்களால் வென்றது பாகிஸ்தான்

பாகிஸ்தான், கென்யா ஆகியவற்றுக்கிடையே அம்பாந்தோட்டையில் நடைபெற்ற உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 205 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயச் சூழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 317 ஓட்டங்கள் எடுத்தது. மொஹமட் ஹபிஸ், அஹமட் ஷேஷாட் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.
கென்ய வீரர்களின் பந்து வீச்சில் பாகிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் திணறினார்கள். பாகிஸ்தான் 11 ஓட்டங்கள் எடுத்திருந்தவேளை மொஹமட் ஹபிஸ் ஆட்டமிழந்தார். 20 பந்துகளைச் சந்தித்த மொஹமட் ஹபிஸ் ஒரு பவுண்டரி உட்பட ஒன்பது ஓட்டங்களை எடுத்தார். 18 பந்துகளுக்கு முகம் கொடுத்த அஹமட் ஷேஷாட் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். 6.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான் 12 ஓட்டங்களை எடுத்தது.
கம்ரன் அக்மல், யூனிஸ்கான் ஜோடி பாகிஸ்தானைச் சரிவிலிருந்து மீட்டது. இவர்கள் இருவரும் இணை ந்து 98 ஓட்டங்கள் எடுத்தனர். 67 பந்துகளுக்கு முகம்கொடுத்த கம்ரன் அக்மல் ஐந்து பவுண்டரிகள் உட்பட 55 ஓட்டங்கள் எடுத்தார். யூனிஸ்கானுடன் மிஸ்பா உல் ஹக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாகத் துடுப்பெடுத்தாடி 45 ஓட்டங்கள் சேர்த்தது. 67 பந்துகளைச் சந்தித்த யூனிஸ்கான் இரண்டு பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்தார்.
மிஸ்பா உல் ஹக்குடன் உமர் அக்மல் ஜோடி சேர்ந்தார். கென்ய வீரர்களின் பந்து வீச்சை உமர் அக்மல் சிதறடித்தார். 69 பந்துகளுக்கு முகம்கொடுத்த மிஸ்பா உல் ஹக் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 65 ஓட்டங்கள் எடுத்தார்.
52 பந்துகளுக்கு முகம் கொடுத்த உமர் அக்மல் ஒரு சிக்ஸர், எட்டு பவுண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்கள் எடுத்தார். அப்ரிடி ஏழு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அப்துல் ரஸாக் ஆட்டமிழக்காது எட்டு ஓட்டங்களும் அப்துல் ரெஹமான் ஆட்டமிழக்காது 5 ஓட்டங்களும் எடுத்தனர்.
தோமஸ் ஒடாயோ 3 விக்கெட்டுக்களையும் ஒடியானோ, கோச்சே, கமாண்டே, டிக்கா÷லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். கென்ய வீரர்கள் உதிரிகளாக 46 ஓட்டங்களைக் கொடுத்தனர்.
நியூசிலாந்துடனான போட்டியில் 69 ஓட்டங்களில் சுருண்ட கென்யா 318 என்ற இமாலய இலக்கை எதிர்நோக்கிக் களமிறங்கியது.
318 என்ற பிரமாண்டமான இலக்குடன் களமிறங்கிய கென்யா 33.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்ளை எடுத்தது. அணித் தலைவர் அப்ரிடியின் சுழலில் சிக்கிய கென்ய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஒபுயா அதிகபட்சமாக 47 ஓட்டங்கள் எடுத்தார்.
மொரிஸ், வோட்டஸ் ஆகியோர் களமிறங்கினர். வோட்டஸ் 17 ஓட்டங்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மொரிஸ் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஒபுயா இருவரும் சிறிது நேரம் தாக்குப் பிடித்தனர். இருவரும் இணைந்து 73 ஓட்டங்கள் எடுத்தனர்.
டிகாலோ 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மிஸ்ரா ஆறு ஓட்டங்களுடனும் பட்டேல் இரண்டு ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். கென்யாவின் ஐந்து வீரர்கள் ஓட்டமெதுவும் எடுக்கவில்லை. 33.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்கள் எடுத்த கென்யா 205 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஏமாற்றிய அப்ரிடி பந்து வீச்சில் பிரகாசித்தார். மூன்று ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட எட்டு ஓவர்கள் பந்து வீசிய அப்ரிடி 16 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கட்டுகளைக் கைப்பற்றினார். சர்வதேச அரங்கில் நான்காவது முறை ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தினார்.
உமர் குல் இரண்டு விக்கட்டுகளையும் மொஹமட் ஹபீஸ் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். உமர் அக்மல் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட் டார். சர்வதேச ஒருநாள் அரங்கில் 46 உதிரிகளை விட்டுக் கொடுத்து கென்யா நான்காவது இடத்தில் உள் ளது. முதல் மூன்று இடங்களில் ஸ்கொட்லாந்து (59), இந்தியா (51), பாகிஸ்தான் (47) உள்ளன.
1999 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய கென்யா 44 உதிரிகளை விட்டுக் கொடுத்தது.
ரமணிசூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

No comments: