Thursday, February 24, 2011

மிரட்டியது நெதர்லாந்து


இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கிடையே நாக்பூரில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட்களால் வெற்றி பெற் றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 292 ஓட்டங்கள் எடுத்தது.
ஒருநாள் கிரிக்கெட் அரங்கின் பாலகனான நெதர்லாந்தை இலகுவாக மடக்கி விடலாம் என்ற எண்ணத்துடன் களம் புகுந்த இங்கிலாந்து வீரர்கள் திணறினார்கள். நெதர்லாந்து வீரர்களின் துடுப்பாட்ட ஆக்கிரமிப்பை உடைப்பதற்கு இங்கிலாந்து வீரர்கள் சிரமப்பட்டனர்.
இங்கிலாந்து அணி பெரிதும் நம்பிக்கை வைத்திருந்த ஜேம்ஸ் அன்டர்ஸனின் பந்து வீச்சை நெதர்லாந்து வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்தனர். 10 ஓவர்கள் பந்து வீசிய அன்டர்ஸன் விக்கெட் எதுவும் எடுக்காது 72 ஓட்டங்களைக் கொடுத்தார்.
கெöவாசி, பெரெஸி ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். 16 ஓட்டங்களில் செவேஸி ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் பெரெஸி 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
மூன்றாவது இணைப்பாட்டத்தில் கூப்பருடன் ஜோடி சேர்ந்தார் டஸ்ட்டே. இவர்கள் இருவரும் இணைந்து 17 ஓவர்களில் 78 ஓட்டங்கள் எடுத்தனர். கூப்பர் 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டஸ்ட்டே, டிகுரூத் ஜோடி 10 ஒவர்களில் 64 ஓட்டங்கள் எடுத்தது. டி குரூத் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
42.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்த நெதர்லாந்து 213 ஓட்டங்கள் எடுத்தது. டஸ்காட்டேவுடன் இணைந்த அணித் தலைவர் பொரென் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினார்.
நெதர்லாந்து விக்கெட்கள் வீழ்ந்த போதும் டஸ்காதி தனது முழுத்திறமையை வெளிப்படுத்தி இங்கிலாந்து வீரர்களைத் திணறடித்தார். கொலிங்வூட், அன்டர்ஸன் ஆகியோர் டஸ்கட்டேயின் துடுப்பாட்டத்துக்கு இரையானார்கள்.
டஸ்கட்டேயின் பந்தில் போபராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 110 பந்துகளுக்கு முகம் கொடுத்த டஸ்ட்டே மூன்று சிக்ஸர், ஒன்பது பவுண்டரி அடங்கலாக 119 ஓட்டங்கள் எடுத்தார்.
ஐந்தாவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய டஸ்ட்டே 323 ஓட்டங் கள் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்துள்ளார்.
பிராட், அன்டர்சன் ஆகியோர் அதிக ஓட்டங்களைக் கொடுத்தனர். பிரொட், ஸ்வான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் பிரெஸ்னன், கொலிங்வூட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நெதர்லாந்து நிர்ணயித்த 293 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 48.4 ஓவர்களில் நான்கு விக்கெட்களை இழந்து 296 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அணித் தலைவர் ஸ்ரோட்ஸ், பீட்டர்ஸன் ஆகியோர் இணைந்து இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். 39 ஓட்டங்கள் எடுத்த பீட்டர்ஸன் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 17.4 ஓவர்களில் 105 ஒட்டங்கள் எடுத்தனர். ஸ்ரோட்ஸுடன் டிராட் ஜோடி சேர்ந்தார். 27 ஆவது அரைச் சதத்தை பதிவு செய்த ஸ்ரோட்ஸ் 88 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ட்ரொட்டுடன் இயன்பெல் இணைந்தார்.
இருவரும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். ஏழாவது அரைச் சதத்தை அடித்த ட்ராட் 62 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். பெல் 33 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
கொலிங்வுட், போபரா ஜோடி ஆட்டமிழக்காது தலா 30 ஓட்டங்கள் எடுத்தது. 48.4 ஓவர்களில் நான்கு விக்கெட்களை இழந்து 296 ஓட்டங்கள் எடுக்க இங்கிலாந்து ஆறு விக்கெட்டுகளால் வெற்றியடைந்தது.
புகாரி, சீலர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 119 ஓட்டங்கள் அடித்து இரண்டு விக்கெட்களை வீழ்த்திய டஸ்ட்டே ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
நெதர்லாந்து வீரர்கள் மூன்று சிக்ஸர்கள் அடித்தனர். இங்கிலாந்து வீரர் போபரா மட்டும் ஒரே ஒரு சிக்ஸரை அடித்தார். நெதர்லாந்து 27 பவுண்டரிகள் அடித்தது. இங்கிலாந்து 24 பவுண்டரிகள் அடித்தது.
ரமணிசூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

No comments: