Thursday, February 17, 2011

தமிழக முதலமைச்சருக்கு எதிராகசுப்பிரமணிய சுவாமி போர்க்கொடி


தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு மூச்சாக இறங்கிவிட்டது. நடிகர் கார்த்திக்குடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் பார்வட் பிளாக் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா. சில கட்சிகளுடன் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டார். திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் இன்னமும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. தேர்தல் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் குழு அமைத்துள்ளன.
தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தைக் குழுவில் முக்கியமான சிலர் சேர்க்கப்படாததனால் இரண்டு கட்சிக்குள்ளும் புகைச்சல் கிளம்பியுள்ளது. துணை முதல்வரும் பொருளாளருமான ஸ்டாலின், முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான ஆர்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் அமைச்சருமான பொன்முடி, நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக்கழக குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். கட்சிக்குள் இருந்து கொண்டு அடிக்கடி பரபரப்பு செய்யும் அழகிரி, தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் இல்லாதது அவரது ஆதரவாளர்களைச் சீற்றமடைய வைத்துள்ளது.
அழகிரியின் தயவு இல்லாமல் தென் மாவட்டங்களில் வெற்றி பெற முடியாது. ஸ்டாலின், அழகிரி என்ற கோஷ்டிப் பூசல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் உள்ளது. இது வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும் ஸ்டாலினின் ஆதரவாளர் அழகிரியின் ஆதரவாளர் என்ற பிரிவு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தலைவரின் சொல்லுக்குக் கட்டுப்படும் அழகிரி, தலைவரின் சில முடிவுகளை விமர்சிக்கவும் தவறுவதில்லை. அழகிரியைத் தலைவர் ஒதுக்குகிறாரோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளதனால் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழுவில் அழகிரியும் சேர்க்கப்படலாம்.
இதேவேளை கட்சியுடன் அதிகம் ஒட்டாமல் இருக்கும் தயாநிதிமாறனும் குழுவில் சேர்க்கப்படலாம். சோனியாவுடனும், ராகுல் காந்தியுடனும் மிக நெருக்கமாக இருப்பவர் தயாநிதிமாறன். தயாநிதிமாறனும் குழுவில் இருந்தால் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் இளங்கோவன் இல்லாததால் அவரது ஆதரவாளர்கள் சீற்றமடைந்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகளை மூர்க்கமாக எதிர்த்த இளங்கோவன் தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் இல்லாதது திராவிட முன்னேற்றக் கழகத்தைத் திருப்திப்படுத்தவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் இளங்கோவன். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணி தொடரும் என்று சோனியா காந்தி அறிவித்ததும் பழையது எல்லாவற்றையும் மறந்து கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடப் போவதாக முழங்கினார் இளங்கோவன்.
காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கையினால் வெறுப்படைந்துள்ள இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மீது ஏற்பட்ட வெறுப்பில் உள்ளவர்களுக்கு வலை விரிக்கத் தயாராகிறது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் கட்சி வெற்றி பெறக்கூடிய தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு விட்டுக் கொடுத்தலில் அல்லது தாம் எதிர்பார்க்கும் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் அனுமதி மறுத்தால் கட்சி மாறுவதற்குத் தயாராக சிலர் உள்ளனர்.
தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை என்ற பெயரில் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் காலத்தை இழுத்தடிக்கத் திட்டமிடுகின்றன. விஜயகாந்தின் அறிவிப்புக்கமைய இரண்டு கட்சிகளும் காத்திருக்கின்றன. விஜயகாந்த், ஜெயலலிதாவுடன் இணைவதற்கான சாத்தியக்கூறு எதுவும் இப்போதைக்கு இல்லை. தமிழகத்தில் 10 சதவீத வாக்கு வங்கியை வைத்திருக்கும் விஜயகாந்தை ஒதுக்கிவிட்டு சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில் விஜயகாந்தின் வரவுக்காக இன்னொரு கதவை திறந்து வைத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.
கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறி நிலையில் இருக்கும் வேளையில் தமிழக முதல்வர் கருணாநிதி மீது வழக்குத் தொடர்வதற்கு கவர்னரின் அனுமதி கோரியுள்ளார் சுப்பிரமணிய சுவாமி.
"அரசு விருப்புரிமை' என்ற பெயரில் சட்ட விதிகளை மீறி தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு நிலத்தையும் வீடுகளையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார் சுப்பிரமணிய சுவாமி. சுப்பிரமணிய சுவாமியின் குற்றச்சாட்டினால் நிலை குலைந்த அரசு விருப்புரிமை வழங்கலை இடைநிறுத்தியுள்ளது. கடந்த அரசின் நடைமுறையையே பின்பற்றியதாகக் கூறி இக்குற்றச்சாட்டில் இருந்து விடுபட முயற்சி செய்கிறார் முதல்வர் கருணாநிதி. தாம் வழங்கிய நடைமுறை சரி என்று அடித்துக் கூறாது ஜெயலலிதா மீது குற்றத்தைத் திசை திருப்புகிறார் கருணாநிதி.
2004ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போது கருணாநிதியின் முயற்சியினால். தமிழகத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டவர் சுர்ஜித்சிங் பர்னாலா சுப்பிரமணிய சுவாமியின் வேண்டுகோளுக்கு கண்ணை மூடிக்கொண்டு கவர்னர் அனுமதி வழங்கமாட்டார்.
கருணாநிதி மீது வழக்குத் தொடர கவர்னர் அனுமதி வழங்கினால் கருணாநிதிக்கும் சிக்கல். அனுமதி வழங்காவிட்டால் கவர்னருக்கு சிக்கல். கவர்னர் சரியான பதில் அளிக்கவில்லை என்றால் நீதிமன்றம் சென்று நியாயம் கேட்கத் தயங்கமாட்டார் சுப்பிரமணிய சுவாமி.
ஸ்பெக்ரம் வழக்கில் ராசா கைது செய்யப்படுவதற்கு சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த வழக்கும் ஒரு காரணம். 1995ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவின் மீது வழக்குத் தொடர்வதற்காக அன்றைய கவர்னரான சென்னா ரெட்டியிடம் சுப்பிரமணிய சுவாமி கொடுத்த மனுவின் பிரகாரம் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது வழக்குத் தொடர்வதற்காக இரண்டு வக்கீல்கள் சுவர்னர் பரத்வாஜிடம் கொடுத்த மனுவின் காரணமாக எடியூரப்பா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 1997ஆம் ஆண்டு பீகார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு கொடுக்கப்பட்ட மனுவுக்கு ஒப்புதல் வழங்கினார் கவர்னர் ஏ. ஆர். கித்வாய்.
சுப்பிரமணிய சுவாமி மீது வழக்குத் தொடரப் போவதாக முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் முதல்வர் மீது வழக்குத் தொடர்வதற்கு அனுமதி கேட்டு மனுக் கொடுத்துள்ளார் சுப்பிரமணிய சுவாமி.
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் சுப்பிரமணியன் சுவாமி கொடுக்கும் குடைச்சல் முதல்வர் கருணாநிதிக்கு பெரும் தலை இடியைக் கொடுக்கப் போகிறது.வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளீயீடு 13/02/11

No comments: