உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆரம்பமானதில் இருந்து இன்றுவரை ஒரு சில போட்டிகளின் முடிவுகள் கிரிக்கட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. உலகக் கிண்ணப் போட்டியின் முடிவுகளின் பின்னர் சில அணிகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவது வழமையான ஒன்றாக மாறி விட்டது. உலகக் கிண்ணப் போட்டியில் முதலில் பலிக்கடாவாகியவர் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொண்டிங்.
இந்தியாவுடனான காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததும் அணித் தலைவர் பதவியைத் துறந்தார் பொண்டிங். ஆஷஸ் கிண்ணத்தை இங்கிலாந்திடம் பறிகொடுத்ததில் இருந்தே பொன்டிங்குக்கு நெருக்கடி அதிகரித்தது. அவரைத் தலைமைப் பதவியிலிருந்து அகற்றினால் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் அணிக்குள் பிரச்சினைகள் ஏற்படுமே என்பதனால் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
அவுஸ்திரேலிய அணித் தலைவராக இருந்த பொண்டிங் லீக் போட்டிகளில் சிறப்பாக செயற்படவில்லை. இந்தியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் பழைய பொண்டிங்காக மாறி தனது திறமையை நிரூபித்தார். பொண்டிங்குக்கும் சச்சினுக்கும் இடையிலான இப்போட்டியில் சச்சின் முந்தி விட்டார். உலகக் கிண்ணப் போட்டிகளில் பொண்டிங், சச்சின், கங்குலி ஆகியோர் தலா நான்கு செஞ்சரிகள் அடித்துள்ளனர். இம்முறை சச்சின் இரண்டு செஞ்சரிகள் அடித்து முதலிடத்துக்குப் போய் விட்டார். பொண்டிங் ஒரு செஞ்சரி அடித்து இண்டாவது இடத்தைப் பிடித்தார்.
கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான தென்னாபிரிக்கா காலிறுதியுடன் வெளியேறியது. லீக் போட்டியில் எழுச்சியுடன் விளையாடிய பாகிஸ்தானை தகர்த்த தென்னாபிரிக்கா நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பலம் வாய்ந்த தென்னாபிரிக்காவின் கனவை நியூஸிலாந்து சிதறடித்தது. உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்க அணித் தலைவர் ஸ்மித் அறிவித்தார்.
அரையிறுதிப் போட்டியில் இலங்கையும், நியூஸிலாந்தும் மோதின. தென்னாபிரிக்காவை வீழ்த்திய நியூஸிலாந்து ஏதாவது அதிர்ச்சியளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நியூஸிலாந்தைத் தலையெடுக்க முடியாது கட்டுப்படுத்தியது இலங்கை. அரையிறுதியில் தோல்வியடைந்த நியூஸிலாந்து அணித் தலைவர் வெட்டோரி தலைமைப் பதவியிலிருந்து விலகி விட்டார். ஐ. பி. எல்லில் பெங்களூர் றோயல் சலஞ்ச் தலைவராக உள்ளார்.
இந்தியா இலங்கை ஆகியவற்றுக்கி??? இறுதிப் போட்டி??? ?? சச்சினையும் ஆட்டமிழக்கச் செய்த இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்க இலங்கை அதன் பின் எழுச்சி பெறவேயில்லை. கம்பீரும், டோனியும் வெற்றியை நழுவ விடாது துடுப்பெடுத்தாடினர். கம்பீர் ஆட்டமிழந்ததும் திருப்புமுனை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. டோனியுடன் இணைந்து யுவராஜ்சிங் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கினர்.
உலகக் கிண்ணத் தொடரில் பொறுப்பாக விளையாடாத குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்த டோனி இறுதிப் போட்டியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து இந்தியாவுக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுத் தந்தார்.
உலகக் கிண்ணம் இந்தியாவுக்கா இலங்கைக்கா என்பதை விட சச்சினுக்கா, முரளிக்கா என்பதே முன்னிலை பெற்றது. உலகக் கிண்ணப் போட்டித் தொடருடன் முரளி ஓய்வு பெற்று விட்டார். தலைவர் சங்கக்கார, உபதலைவர் மஹேல, அணித் தேர்வுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் வரிசையாக ராஜினாமாச் செய்தார்கள். ஐ. பி. எல். டெக்கான் சார்ஜஸ் அணிக்கு சங்கக்கார தலைவராக உள்ளார்.
1983 ஆம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளும் இந்தியாவும் இறுதிப் போட்டியில் விளையாடின. மூன்றாவது முறை தொடர்ச்சியாக மேற்கிந்திய தீவுகள் கிண்ணத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பை சிதறடித்த இந்தியா கிண்ணத்தை வென்றது. 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி மீது எந்தவிதமான எதிர்பார்ப்பும் ஏற்படவில்லை. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இப்படிதான் விளையாட வேண்டும் என்று புதிய விதியை உருவாக்கியவர் வட்மோர். ஆரம்பத் துடுப்பாட்டத்தில் அதிரடியை அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீகாந்த். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் அதிரடியாக விளையாட வேண்டும் என்பதை நிரூபித்தவர் வட்மோர். ஜயசூரிய, களுவிதாரண ஆகிய இருவரும் வட்மோரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தனர்.
1996 ஆம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளையும் 2007 ஆம் ஆண்டு இந்தியாவையும் தோற்கடித்து அவற்றை லீக் போட்டியில் இருந்து வெளியேற்றியது பங்களாதேஷ். 2003 ஆம் ஆண்டு அரையிறுதி வரை முன்னேறி கென்யாவின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக சர்வதேச கிரிக்கெட் சபை பாரிய நிதியை வழங்கியது. அந்நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையும் ஊழலும் கென்ய கிரிக்கெட்டை வளர விடவில்லை. கென்ய அணிக்கு அனுசரணையாளர்கள் யாரும் இல்லை. இந்த நிலையில் எப்படி வளர்வது.
2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானைத் தோற்கடித்த அயர்லாந்து இம்முறை இங்கிலாந்தைத் தோற்கடித்து அயர்லாந்து என்ற நாடு உருவாகக் கூடாது என்பதை விரும்பிய இங்கிலாந்தைத் தோற்கடித்து தமது பலத்தை நிரூபித்தது அயர்லாந்து. அயர்லாந்தில் றக்பிதான் புகழ்பெற்ற விளையாட்டு. அலுவலகம் முடிந்து பொழுதுபோக்காக ஒரு சிலர் கிரிக்கட் விளையாடுவார்கள். பொழுதுபோக்காக விளையாடுபவர்கள்தான் புதிய சாதனைகளை உருவாக்கியுள்ளனர்.
குறைந்த பந்தில் அதிவேக சதம், ஓட்டங்களை விரட்டி வெற்றி பெற்றது போன்ற சாதனைகளை அயர்லாந்து செய்துள்ளது. அதிவேக சதமடித்த கெவின் ஓ பிரைனுக்கு பக்கபலமாக இருந்த ஆசக் நான்கு வருடங்களுக்கு முன்னர் முழுநேர தச்சுத் தொழிலாளியாக இருந்தவர். அயர்லாந்து கடந்த வருடம் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. பங்களாதேஷுடன் இரண்டு போட்டிகளில் விளையாடியது. பெரிய அணிகள் அயர்லாந்துடன் விளையாடுவதில்லை. பண உதவியை அயர்லாந்து எதிர்பார்க்கவில்லை. தரமான அணிகளுடன் விளையாடி பயிற்சி பெறவே அயர்லாந்து விரும்புகிறது.
இந்திய அணி உலகக் கிண்ணத்தைப் பெற பிரதான காரணியாக இருந்தவர் பயிற்சியாளர் கரிகேர்ஸ்டன். இந்திய அணிக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்த பின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி விட்டார். அவரைப் போன்ற ஒரு திறமையானவரை இந்தியா தேடுகிறது. ஸ்ரீகாந் தலைமையிலான தேர்வுக் குழு தேர்வு செய்த அணி மீது ஒரு சில பத்திரிகைகளும் கிரிக்கெட் ஜாம்பவான்களும் விமர்சனம் செய்தனர். அந்த விமர்சனங்களை உலகக் கிண்ண வெற்றி அடக்கி விட்டது.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ் 15/04/2011
2 comments:
ஜிம்பாப்வே அணி பற்றி சொல்ல வில்லையே இந்த உலக கோபையில் அவர்களது
விளையாட்டு திருப்திகரமாக இல்லை
சிம்பப்வே அணீமீது எந்தவிதமான எதிர்பாப்பும் இல்லாமையினால் அந்த அணியைப்பற்றி எழுதவில்லை.தங்கள் வருகைக்குநன்றி
அன்புடன்
வர்மா
Post a Comment