திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் இருப்பதாக பகிரங்கமாக அறிவித்தாலும் கொள்கையில் இரண்டு கட்சிகளும் வேறு வேறு பாதையில் செல்கின்றன. ""காங்கிரஸ் கட்சி செய்வதெல்லாம் சரி அதில் தவறு எதுவும் இல்லை'' என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி வந்த திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளது.
ஊழலுக்கு எதிரான போராட்டம் முனைப்புப் பெற்று வருகிறது. ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை அரசியலில் இருந்து ஓரம் கட்டுவதற்கு அன்னா ஹசாரே அழைப்பு விடுத்துள்ளார். அவரின் உத்தரவு கிடைத்ததும் களத்தில் குதிக்க இலட்சக்கணக்கான மக்கள் தயாராக இருக்கிறார்கள். காந்தீயத்தில் பற்றுக் கொண்டவர்களும் இளைஞர்களும் அன்னா ஹசாரே பின்னால் அணி திரளத் தயாராக உள்ளனர்.
ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை விசாரிப்பதற்குரிய லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர் பதவியையும் கொண்டு வர வேண்டும் என்று ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்கள் வலியுறுத்துகிறார்கள். லோக்பால் சட்ட வரம்புக்குட்பட்ட பதவியில் உள்ளவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். பிரதமர் யாருக்கும் பதிலளிப்பதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. ஆகையால் லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வரக் கூடாது என்று காங்கிரஸ் கருதுகிறது.
லோக்பால் வரம்புக்குள் பிரதமர் பதவியைக் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. காங்கிரஸும் அதன் தோழமைக் கட்சிகளும் அதனைக் கடுமையாக எதிர்க்கின்றன. காங்கிரஸில் முறுகிக் கொண்டிருக்கும் திரõவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை சரியானது என்று கூறுகிறது. இப்பிரச்சினை ஆரம்பித்த போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்த திராவிட முன்னேற்றக் கழகம் ஸ்பெக்ரம் பிரச்சினை இறுகியதும் காங்கிரஸின் கருத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் கட்சிகளின் பக்கம் சாய்ந்துள்ளது.
லோக்பால் வரம்புக்குள் பிரதமர் பதவியைக் கொண்டு வர வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்தினால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ஸ்பெக்ரம் கறை படிந்துள்ளதால் எச்சரிக்கையாக இருக்கின்றன எதிர்க்கட்சிகள்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. கூட்டணியில் இருக்கும் கருணாநிதி காங்கிரஸைக் கைவிட எதிர்க்கட்சியில் உள்ள ஜெயலலிதா ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். ஜெயலலிதாவின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகளால் எச்சரிக்கையாக உள்ள காங்கிரஸ் ஜெயலலிதாவின் ஆதரவான குரலை எச்சரிக்கையுடன் அவதானிக்கிறது.
காங்கிரஸின் ஆதரவாளரான கருணாநிதி எதிராகவும் காங்கிரஸுக்கு எதிரான ஜெயலலிதா ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில் லோக்பால் வரம்புக்குக் கட்டுப்பட்டு கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயார் என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். ஸ்பெக்ரம் ஊழலுக்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை பிரதமர் மன்மோகன்சிங்குக்கு உள்ளது. அவருடைய நேர்மையின் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகப்படுகின்றன. அந்தச் சந்தேகத்தைப் போக்க வேண்டியது அவரது தலையாயப் பணி. தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்கு அவர் தயாராக இருக்கிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைய வேண்டும் என்பதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் உறுதியாக உள்ளனர். மத்திய அரசில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறினால் ஆதரவு கொடுக்கத் தயார் என்று முன்னர் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்று இப்போது அறிவித்துள்ளõர்.
தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற பின் டில்லிக்கு ஜெயலலிதா விஜயம் செய்த பின்னர் அவருக்கு அங்கு பலத்த வரவேற்பு வழங்கப்பட்து. தேசியக் கட்சிகளின் பிரமுகர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்தனர். ஜெயலலிதõவின் டெல்லி விஜயத்துக்கு அவர்கள் முன்னுரிமை கொடுத்தனர்.
சோனியா காந்தியிடமிருந்து சாதகமான சமிக்ஞை கிடைக்காததால் வருத்தத்தில் உள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுடன் நெருங்குவதற்கு சோனியா காந்தி தயாராக இல்லை. ஆகையினால் காங்கிரஸ் கட்சியை சற்றுத் தூரத்தில் வைத்திருக்க விரும்புகிறார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழக சட்ட மன்றத் தேர்தல் தோல்விக்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்று காங்கிரஸும் பாட்டாளி மக்கள் கட்சியும் வெளிப்படையாகப் புலம்ப ஆரம்பித்துள்ளன. சட்டமன்றத் தேர்தலின் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சிக்குள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவு முறிந்துள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேற பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. அதனை வரவேற்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சியும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினாலும் ஜெயலலிதாவுடனோ விஜயகாந்துடனோ உடனடியாகச் சேர வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கிடையேயான குழப்பத்தினால் ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணி அடுத்து வரும் தேர்தல்களிலும் வெற்றி பெறத் தயாராக உள்ளது.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு03/07/11
No comments:
Post a Comment