Thursday, July 14, 2011

சரித்திரம் படைத்தது ஜப்பான்

ஜேர்மனியில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு ஜப்பான் தகுதி பெற்றது. சுவீடனுக்கு எதிரான போட்டியில் 3 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜப்பான் முதன் முதலாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. உதைபந்தாட்ட அரங்கில் ஜப்பானை விட பலம் வாய்ந்த சுவீடன் நம்பிக்கையுடன் களமிறங்கியது. உதைபந்தாட்ட ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜப்பான், சுவீடனை இலகுவாக வீழ்த்தியது. 45435 ரசிகர்கள் முன்னிலையில் பரபரப்பாக இப்போட்டி நடைபெற்றது. 10 ஆவது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனை குவிஸ்ட் கோல் அடித்து தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார். 19 ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீராங்கனையான குவாசமி கோல் அடித்து சமப்படுத்தினார். ஜப்பானின் ஆதிக்கத்துக்கு பதிலளிக்க முடியாத சுவீடன் வீராங்கனைகள் தடுமாறினார்கள்.
60 ஆவது நிமிடத்தில் சாவாவும் 64 ஆவது நிமிடத்தில் சுவாசுமியும் கோல் அடித்ததால் 3 1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் முன்னிலை வகித்தது. ஜப்பான் கோல் கம்பத்தை நோக்கி சுவீடன் நான்கு முறை மட்டும்தான் பந்தை அடித்தது. ஜப்பான் 14 தடவை சுவீடனின் கோல் பகுதியை ஆக்கிரமித்தது. ஜப்பான் வீராங்கனைகளின் தடுப்பு அரணாக உடைத்துக் கொண்டு உட்செல்ல முடியாத சவீடன் பரிதாபகரமாகத் தோல்வியடைந்தது. அயா பியாமா சிறந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
பிரான்ஸுக்கு எதிரான அரையிறுதியில் 3 1 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா இறுதிப் போட்டியில் விளையாடத் தகதி பெற்றது. கடைசி 10 நிமிடங்களில் அடிக்கப்பட்ட இரண்டு கோல்களினால் அமெரிக்கா வெற்றி பெற்றது. 1996 ஆம் ஆண்டின் பின்னர் இறுதிப் போட்டியில் விளையாட அமெரிக்கா தகுதி பெற்றது.
ஒன்பதாவது நிமிடத்தில் அமெரிக்க வீராங்கனையான சென்னி கோல் அடித்து நம்பிக்கையூட்டினார். 55 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீராங்கனையான பொம்பஸ்ரர் கோல் அடித்து சமப்படுத்தினார். அமெரிக்காவின் விளையாட்டுக்கு ஈடுகொடுக்க முடியாத பிரான்ஸ் தடுமாறியது. 79 ஆவது நிமிடத்தில் வம்பச்சும் 82 ஆவது நிமிடத்தில் மோர்கனும் கோல் அடித்து அமெரிக்காவின் வெற்றியை ஊர்ஜிதப்படுத்தினர். அமெரிக்க வீராங்கனையான அபிவம்பச் சிறந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டார். 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜப்பான், அமெரிக்கா ஆகியன இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. நாளை சனிக்கிழமை சுவீடனுக்கும் பிரான்ஸுக்கும் மூன்றாவது இடத்தைப் பெற விளையாடுகின்றன.

ரமணி


சூரன்.ஏ.ரவிவர்மா



மெட்ரோநியூஸ்

No comments: