Friday, August 10, 2012

உசைன் போல்ட்டை நோக்கிபியர் போத்தல் எறிந்தவர் கைது


லண்டன் 2012 ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற்ற மைதானத்தில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற 100 மீற்றர் ஓட்டப் பந்தய இறுதிப் போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த அதிவேக மனிதன் உசேன் போல்ட்டுக்குப் பின்னால் வெற்று பியர் போத்தலொன்று வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விற்பனை இயந்திர தொழில்நுட்பவியாளர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
உசேன் போல்ட் 9.63 வினாடிகளில் பந்தய தூரத்தை மின்னல் வேகத்தில் கடந்து தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொள்ள சற்று நேரத்திற்கு முன்னரே இந்த பரபரப்பான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள லீட்ஸ் எனுமிடத்தைச் சேர்ந்த அஷ்லி கில் (Ashley Gill) ) ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்பிப்பவர் என அவரது அயலவர்கள் பொலிஸாரிடம் தெரி வித்த அதேவேளை அவர் இதற்கு முன்னர் ஒரு ஆசிரி யராகப் பயிற்றப்பட்டிருந்ததாக தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறினார்.
எடுக்கப்பட்டிருந்த காணொளியில் நீல நிற உடையணிந்த பார்வையாளரொருவர் தட களத்தை நோக்கி வெற்றுப் போத்தலொன்றை வீசியெறிவதாகவும் அந்தப் போத்தல் தடகள அருகில் நின்றிருந்த ஜூடோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவரான ஒல்லாந்து வீராங்கனை எடித் போஸ் (Edith Bosch) அருகில் போய் விழுவதையும் பதிவாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து போத்தலை வீசிய அந்த மனிதனுக்கு தான் அடித்ததாகவும் அவர் ருவிட்டர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இன்னுமொரு காணொளியில் தனது இறுதிப் போட்டி ஆரம்பமாகும் இடத்தை நோக்கி உசேன் போல்ட் போய்க் கொண்டிருக்கும் போது குறித்த நீல நிற உடை தரித்த அந்த மனிதன் உசேன் போல்ட்டை பார்த்து நீ வெல்லப் போவதில்லை என உரத்துச் சத்தமிடுவதும் பதிவாகியுள்ளது. கிழக்கு லண்டன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஆஷ்லி கில் குடி போதையிலேயே அந்த வெற்று பியர் போத்தலை எறிந்ததாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

மெட்ரோநியூஸ்08/08/12

No comments: