Sunday, August 26, 2012

மதுரையில் கிர‌னைட் மோசடி கலக்கத்தில் அரசியல் பிரபலங்கள்



தமிழக அரசைப் புரட்டிப் போட்ட ஸ்பெக்ரம் ஊழலை விட மிக மோசமான மோசடி பற்றிய விபரங்கள் சகலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளன. சட்டவிரோதமாக கிரனைட் கற்களை வெட்டி எடுத்து கோடி கோடியாகப் பணம் சம்பாதித்த முதலைகளைப் பற்றிய தகவல்கள் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்ததால் அது பற்றிய முழு விசாரணைக்கு உத்தரவிட்டார். புலன் விசாரணை செய்த பொலிஸார் பல ஆயிரம் கோடி ரூபா தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை சமர்ப்பித்தனர்.
கிரனைட் கற்களை வெட்டி எடுப்பதற்கு ஒரு சில நிறுவனங்களுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது. அரசுக்கு கணக்குக் காட்டாது சட்டவிரோதமான முறையில் கிரனைட் கற்களை வெட்டி எடுத்த நிறுவனங்களை இனம் கண்ட இரகசியப் பொலிஸார் அவற்றின் மீது சட்ட நடவடிக்கை எடுத்தனர்.
தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையினால் பி.ஆர். பழனிச்சாமிக்குச் சொந்தமான பி.ஆர்.பி. நிறுவனம் செய்த முறைகேடு அம்பலத்துக்கு வந்தது. மதுரையில் உள்ள இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி தலைமறைவாக இருந்து பொலிஸாரிடம் சரணடைந்தார்.
மதுரை மாவட்டத்தில் அதிகாரிகள் பல வாரங்களாக நடத்திய ஆய்வின் பின்னர் அரசு அனுமதியளிக்கப்பட்டதற்கு அதிகமான கிரனைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரிய வந்தது. அதிக மோசடி செய்த பி.ஆர். நிறுவனம் தமிழக அரசின் கழுகுக் கண்களில் அகப்பட்டது. தமிழக அரசு அதிக அக்கறையுடன் மதுரையைத் தேர்ந்தெடுத்ததற்கு அரசியல் காரணம் உள்ளது.
மதுரையை ஒரு காலத்தில் தனது கைக்குள் வைத்திருந்த அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கும் பி.ஆர்.சி. நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தமிழக அரசு நம்புகிறது. அழகிரி, துரை தயாநிதி, பொன் முடி உட்பட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களுடன் பி.ஆர். பழனிச்சாமி மிக நெருக்கமாகப் பழகியதாக பொலிஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. பி.ஆர். பழனிச்சாமி என்ற துருப்புச் சீட்டை வைத்துக் கொண்டு அழகிரி, துரை தயாநிதி ஆகியோரைக் கைது செய்யத் தமிழக அரசு முயற்சி செய்கிறது. தமிழக பொலிஸாரின் கழுகுப்பார்வை தன் மீது விழுந்ததனால் துøர தயாநிதி தலைமறைவாகி விட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடம் ஏறியதும் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் ஜெயலலிதா அவசரப்படவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். நில அபகரிப்புகளில் திராவிட முன்னேற்றம் கழக முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்ட போது அரசியல் பழிவாங்கல்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கூறியது.
அழகிரியின் மனைவியின் பெயரில் மதுரையில் உள்ள தொழில் நுட்ப நிறுவனம் முறைகேடான வகையில் அமைக்கப்பட்டதாகக் கூறி அதன் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முயற்சி செய்தது. அந்த முயற்சி அப்படியே அமுங்கிப் போனது. ஸ்பெக்ரம் ஊழலை மிஞ்சும் வகையில் கிரனைட் மோசடி உள்ளதாக அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. பி.ஆர். பழனிச்சாமி என்ற துருப்புச் சீட்டின் மூலம் அழகிரியை அடக்குவதற்கு முயற்சி செய்கிறது தமிழக அரசு.
கிரனைட் மோசடியின் முக்கிய புள்ளியான பி.ஆர். பழனிச்சாமி சரணடைந்துள்ளார். அவரிடம் நடைபெறும் விசாரணைகள் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய புள்ளிகள் பொலிஸ் வலையில் விழுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களுக்கு தமிழக அரசு வைத்துள்ள பொறியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பிரமுகர்களும் அகப்படும் சூழ்நிலை உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது அமைச்சர்களுடன் மிக நெருக்கமாகப் பழகியவர் பி.ஆர். பழனிச்சாமி. ஆட்சி மாறியதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சிலருடன் மிக நெருக்கமானார். பி.ஆர். பழனிச்சாமி கைது செய்யப்பட்டதால் அவர்கள் கலங்கிப் போயுள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது இருந்த அதே செல்வாக்குடனேயே அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போதும் பி.ஆர். பழனிச்சõமி பவனி வந்தார். தமிழகத்தில் ஆட்சி மாறியதே தவிர அவரின் ஆளுமை மாறவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியின்@பாது மதுரையில் நடைபெறும் இந்த முறைகேடு பற்றி ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். மதுரை மாவட்டம் அழகிரியின் ஆட்சிக்குட்பட்டிருந்ததால் அன்றைய அரசாங்கம் பெரிதாக அக்கறை காட்டவில்லை. 
ஜெயலலிதா முதல்வரானதும் மதுரையில் நடைபெறும் இந்த முறைகேடு பற்றிய பூரண விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த இரண்டு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் மீண்டும் தமது கடமையைப் பொறுப்பேற்றனர்.
தமிழக அரசில் பி.ஆர். பழனிச்சாமியின் செல்வாக்கை இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது. பெங்களூரில் நடைபெறும் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டால் அடுத்த முதல்வர் யார் என்று கூடி ஆலோசித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சசிகலாவும் அவரது உறவினர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விரட்டப்பட்டார்கள். ஜெயலலிதாவுக்கு எதிரான இந்தச் சதியில் பி.ஆர். பழனிச்சாமியும் சம்பந்தப்பட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
கிரனைட் மோசடி விசாரணை துரிதமாக நடைபெறுவதால் தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கதி கலங்கிப் போயுள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைபெறும் இந்த மோசடி பற்றி வாய் திறக்காது மௌனமாக உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு26/08/12

No comments: