Friday, August 24, 2012

கனத்த இதயத்துடன்விடைபெற்றார் லக்ஷ்மண்



இந்திய கிரிக்கெட் அணியின் பல வெற்றிகளுக்கு காரண கர்த்தாவான வி.வி. லக்ஷ்மண் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு பெற்று விட்டார். அவரது முடிவு கிரிக்கெட் இரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தோல்விப் பாதையில் போய்க் கொண்டிருந்த சந்தர்ப்பங்களில் வெற்றிக் கம்பத்தைக் கெட்டியாகப் பிடித்து எதிரணிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தவர்.

இந்திய அணியில் தோல்வி உறுதி என நினைத்து இரசிகர்கள் வெளியேறிய பல சந்தர்ப்பங்களில் எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் பொய்யாக்கி தனது அற்புதமான விளையாட்டினால் வெற்றியைத் தேடிக் கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர். டெஸ்ட் போட்டிக்குத் தேவையான பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடித்து எதிரணி வீரர்களை வெறுப்பேற்றிய லக்ஷ்மண் அவசரப்பட்டு ஓய்வை அறிவித்து விட்டார் என்று கருத்து நிலவுகிறது. மருத்துவப் படிப்பில் நுழைய வேண்டிய சந்தர்ப்பத்தை ஒதுக்கித் தள்ளி கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்த லக்ஷ்மன் கிரிக்கெட்டில் பல சாதனைகளைச் செய்து தனது பெயரைப் பொறித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி அஹமதாபாத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக அறிமுக வீரராகக் களமிறங்கிய லக்ஷ்மண் இரண்டாவது இன்னிங்ஸில் அரைச் சதம் அடித்துத் தனது திறமையை வெளிப்படுத்தினார். 2000 ஆம் ஆண்டு சிட்னியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய லக்ஷ்மண் தனது துடுப்பின் மூலம் எதிரணிகளை கலக்கமடைய வைத்தார்.
சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி, 167 ஓட்டங்கள் அடித்து எதிரணியை மிரட்டினார்.
16டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று சாதனை செய்த  ஸ்டீவோ தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 2001 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இந்தியாவுக்கு எதிராகக் களமிறங்கியது. 17 ஆவது டெஸ்ட் வெற்றியைக் குறி வைத்து விளையாடிய  அவுஸ்திரேலிய அணியின் முன்னால் இந்தியா தடுமாறியது. பெரலோ ஓன் பெற்ற இந்தியா தோல்வியடையும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் லக்ஷ்மண், ட்ராவிட் ஜோடி அவுஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சைத் துவம்சம் செய்தது. லக்ஷ்மண் 281 ஓட்டங்களும் ட்ராவிட் 180 எடுத்தனர்.
 இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 657 ஓட்டங்கள் எடுத்தது. இந்த டெஸ்ட்டில் அவுஸ்திரேலியா 171 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. 16 டெஸ்ட் தொடர்களை  வென்ற அவுஸ்திரேலியா, இந்தியாவில் தொடரை இழந்து வெறுங் கையுடன் நாடு திரும்பியது.

உலகின் முதல் தர அணியாக விளங்கிய அவுஸ்தி@ரலியாவுக்கு எதிராக தனது  ஆதிக்கத்தை நிலை நாட்டினார். 2003 ஆம் ஆண்டு அடிலெயிட்டில் நடந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார்.  இப்@பாட்டியில் லக்ஷ்மண் 148 ஓட்டங்களும் ட்ராவிட் 233 ஓட்டங்களும் எடுத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட் இணைப்பாட்டத்தில் 303 ஓட்டங்கள் எடுத்தனர். இந்த டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றது.
2007-.08. இல் பாகிஸ்தானுக்கு எதிராக  மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு ச‌தம்  அரைச் சதம் உட்பட 209 ஓட்டங்களை எடுத்தார்.

134 டெஸ்ட்டுகளில் விளையாடி 17 சதம் 56 அரைச் சதங்களுடன் 8781 ஓட்டங்கள் எடுத்த நான்காவது இந்திய வீரராக உள்ளார்.  முதல் மூன்று இடங்களில் முறையே சச்சின், ட்ராவிட், கவாஸ்கர் உள்ளனர். வெளிநாட்டு மண்ணில் 5 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் குவித்த நான்கு இந்திய வீரர்களில் லக்ஷ்மணும் ஒருவர்.

2001 ஆம் ஆண்டு கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 59,281 ஓட்டங்கள் என்று மொத்தமாக 304 ஓட்டங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 135  பிடி எடுத்த இரண்டாவது இந்திய வீரர். முதலிடத்தில் ட்ராவிட் (210) உள்ளார்.
2004 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சினுடன் இணைந்து  நான்காவது விக்கெட்  இணைப்பாட்டத்தில் 376  ஓட்டங்கள் அடித்தார்.
2010 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் @டானியுடன் இணைந்து 7 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்தில் 259 ஓட்டங்கள்  எடுத்தார்.
டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளைச் செய்த லக்ஷ்மண் ஒரு நாள் போட்டியில்  சோபிக்கவில்லை. அதிரடி இவருக்கு கை கொடுக்கவில்லை. நிதானம் பொறுமை என்பவற்றினால் கட்டுப்பட்ட லக்ஷ்மண் ஒருநாள் போட்டிகளில் இருந்து காலப் போக்கில் ஓரம் கட்டப்பட்டார்.
2006 ஆம் ஆண்டின் பின் ஒருநாள் போட்டியில் லக்ஷ்மண் விளையாடவில்லை. 2004 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் மூன்று சதங்கள் அடித்து ஒரு தொடரின் அதிக சதம் அடித்த சாதனையாளர் பட்டியலில் இணைந்தார்.  இத் தொடரில் 10போட்டிகளில் 12 பிடிகள் எடுத்து ஒரு தொடரில் அதிக பிடி எடுத்த அலன் போடரின் சாதனையை சமப்படுத்தினார்.


கிரிக்கெட்டை நேசித்த லக்ஷ்மணுக்கு உரிய மதிப்பும் கௌரவமும் வழங்கப்படவில்லை. 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய லக்ஷ்மனுக்கு அணித் தலைவர் பதவி வழங்கப்படவில்லை. உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பின் லக்ஷ்மண் ஓய்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அவசரப்பட்டு அவர் ஓய்வை அறிவித்த காரணம் தெரியவில்லை.

கங்குலி, ட்ராவிட் ஆகியோரைத் தொடர்ந்து லக்ஷ்மணும் ஓய்வு பெற்று விட்டார். இளைஞர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்குவதற்காகவே ஓய்வு பெற்றதாக லக்ஷ்மண் அறிவித்துள்ளார். அவருடைய இடத்தை நிரப்பக் கூடிய இளம் வீரர் இந்திய அணியில் இல்லை. ட்ராவிட், கங்குலி ஆகியோர் விட்டுச் சென்ற இடைவெளி இன்னமும் காலியாகவே உள்ளது. அதேபோல் லக்ஷ்மணின் இடமும் இப்போதைக்கு காலியாகவே உள்ளது.
16 வருட கிரிக்கெட் விளையாட்டில் பிரச்சினைகள், சர்ச்சைகள் எவற்றிலும் சிக்காதவர் லக்ஷ்மண். இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கெதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியா படுதோல்வியடைந்தது. அப்போது லக்ஷ்மண் மீதும் கடும் விமர்சனம் சுமத்தப்பட்டது. அந்த விமர்சனங்களுக்கு லக்ஷ்மண் பதிலளிப்பார் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டது. நாட்டுக்காக விளையாடிய திருப்தியுடன் விடை பெற்றுள்ளார் லக்ஷ்மண்.
ரமணி
மெட்ரோநியூஸ் 24/08/12



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்திய கிரிக்கெட்டின் மற்றுமொரு சுவர்...
...ம்... வாழ்த்துவோம்...
நல்லதொரு தொகுப்பிற்கு நன்றி...

வர்மா said...

தங்கள் வருகை ஊக்கமளிக்கிறது.
அன்புடன்
வர்மா