Sunday, February 14, 2016

உற்சாகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏக்கத்தில் ஏனைய கட்சிகள்

தமிழக சட்ட சபைத் தேர்தலில்  போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்புமனு வாங்கும் நடவடிக்கையை பிரதான கட்சிகள் ஆரம்பித்து விட்டன. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கட்டுப்பணம் செலுத்தி விண்ணப்பம் கொடுக்க வேண்டும். கோடிக்கணக்கில் சேரும் இக்கட்டுப்பணம் கட்சியின் தேர்தல் செலவுக்குப் பயன்படும். புதிதாக போட்டியிட விரும்புபவர்கள் தம்மைப் பற்றிய விபரங்களுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். பிரபலமான அரசியல்வாதிகளின்  பெயரில் அவர்களின்  ஆதரவளர்கள் பணம் கட்டி விண்ணப்பப்படிவத்தை கையளிப்பர்கள்.  பிரபலமான அரசியல்வாதி தமது தொகுதியில் போட்டியிட வேண்டும் என பல விண்ணப்பப் படிவங்கள் கையளிக்கப்ப்படும்போது அவர் மீது தலைமை தனிக் கவனம் செலுத்தும். தமக்குப் பழக்கமான தலைவர் வேறு தொகுதிக்கு போகக்கூடாது என்ற அக்கறையும் ஒரு காரணம்.

கட்சித்தலைவருக்காக பலர் விண்ணப்பப்படிவம் கையளிப்பர். தலைவர் தமது தொகுதியில் போட்டியிட வேண்டும் என அதிகமானோர் விருப்புமனு கையளிப்பார். தமது தொகுதி முதலமைச்சரின் தொகுதியாக இருக்க வேண்டும் என்ற அற்ப ஆசையும் இதற்கொருகாரணம். தலைவர் மீது தாம் விசுவாசமாக இருப்பதை இதன் மூலம் வெளிப்படுத்துவார்கள். தலைவருக்காக விருப்பு மனு கையளித்வர்களின் பட்டியலை அவர் பார்க்கும் போது எதாவது ஒரு முக்கிய பதவி கிடைக்கும் என்ற நப்பாசையும் அதற்குள் அடங்கும்.

விருப்பு மனு கையளிப்பதில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணியில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. மற்றைய கட்சிகளில் உள்ளவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தின் சார்பாகப் போட்டியிட ஒன்பது நாட்களில்    13 ஆயிரம்பேர் விண்ணப்பித்துள்ளனர். 15 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கு   14.30 கோடி ரூபா வசூலாகியுள்ளது. .   சுமார் 22 கோடி ரூபா வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்  மிகுந்த உற்சாகத்துடன் விருப்புமனு விண்ணப்பங்களைக் கையளிக்கின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனியாகவா அல்லது கூட்டணி சேர்ந்தா   தேர்தலை சந்திக்கப்போகிறது என இன்னமும் முடிவு செய்யவில்லை. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களிடம் இருப்பதனால் விருப்புமனு விண்ணப்பங்கள் குவிகின்றன. விருப்புமனு விண்ணப்பம் கொடுக்கும் அனைவரும்    முதலில் ஜெயலலிதாவுக்காக விருப்புமனு கையளித்த  பின்னரே தமது விருப்பு மனுவை கொடுத்தனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுதப்படாத விதியாக இது உள்ளது.விருப்பு மனுக்களில் பெயர் எழுதியே கையளிப்பார்கள். அனால், ஜெயலலிதாவுக்கு சார்பாக கையளிக்கப்பட்ட விருப்பு மனுக்களில் ஜெயலலிதாவின் பெயர் ரப்பர்  ஸ்ராம்பால் பொறிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் பெயர் பொறிக்கப்பட்டு விருப்பு மனு விற்பனை செய்யப்பட்டதை இது வெளிப்படுத்துகின்றது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து விருப்பு மனுக்களைக் கையளித்தவர்கள் நம்பிக்கையுடன் திரும்பினார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் சோபை  இழந்துள்ளது. எதிர்பார்த்தது போன்று  அதிகமானோர் விருப்புமனு கொடுக்கவில்லை. முதல் வாரத்தில்  200 மட்டுமே விருப்புமனுவை கையளித்தனர். திராவிட முன்னேற்றக் கழகம் எந்தக்  கட்சியுடன் கூட்டணி சேரும் என இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. கூட்டணி சேர திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக உள்ளது. வாக்கு வங்கி உள்ள கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத்  திரும்பியும் பார்க்கவில்லை. பலமான கூட்டணி  இல்லாது தேர்தலைச் சந்தித்து தோல்வியடைந்த அனுபவம் உள்ளதால் விருப்பு மனுக் கையளிக்க திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் பின்னடிக்கின்றனர்.


அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பு மனுக்கட்டணம்  11 ஆயிரம் ரூபா. திராவிட முன்னேற்றக் கழகம் 25 ஆயிரம் ரூபாவை விருப்பு மனுக் கட்டணமாக நிர்ணயித்துள்ளது.  திராவிட முன்னேற்றக் கழகத்தின்   கட்டண அதிகரிப்பும் விருப்புமனு குறைவடைவதற்கு ஒரு காரணம். பழையவர்களைத்  தூக்கி எறிந்து விட்டு புதியவர்களுக்கு  ஜெயலலிதா சந்தர்ப்பம் கொடுப்பதனால் புதியவர்கள் அதிகளவில் அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விருப்புமனு கையளித்தனர். ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா அல்லது ஜெயலலிதாவுக்கு விசுவாசமானவர்கள் சிபார்சு செய்தால்   வேட்பாளராகலாம் என்ற நம்பிக்கை   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளது.

  திராவிட முன்னேற்றக் கழகத்தில் இது எதிர்மறையாக உள்ளது. கருணாநிதி,ஸ்டாலின்,கனிமொழி  என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பங்கு போட வேண்டிய நிலை உள்ளது. அழகிரி வெளியில் நிற்பதனால் அவரின் பங்கு அந்தரத்தில் உள்ளது.  அரசியலில் இருந்து ஒதுங்கும் தலைவர்களின்  வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்கபடும். தோல்வியடைந்தாலும் பழையவர்களுக்கு தொடர்ந்தும் சந்தர்ப்பம் கொடுப்பார்கள். இதனால், புதியவர்கள் அதிக அக்க்கறை காட்டுவதில்லை. அண்ணா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிமட்டத் தொண்டனுக்கு அதிர்ஷ்டம் அடிப்பதனால் அவரி அரசியல் வாழ்க்கை உச்சத்துக்கு சென்றுவிடும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், பாரதீய ஜனதாக் கட்சி,காங்கிரஸ் கட்சி ஆகியன கூட்டணி பற்றிய உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. ஆகையினால் விருப்ப்பு மனு  கையளிக்க அக்கட்சியில் உள்ளவர்கள் அக்கறைப்படவில்லை. விஜயகாந்துடன் இணைவதற்கு பாரதீய ஜனதா விரும்புகிறது.  சகல கட்சிகளையும் காத்திருக்கும் பட்டியலில் வைத்திருக்கிறார்  விஜயகாந்த்.    திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்வதற்கு காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. பலமான கூட்டணியில் பாரதீய ஜனதாக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் இணைந்தால் அக்கட்சிகளில் போட்டியிடுவதற்கு பலர் ஆர்வம் கட்டுவார்கள்.
பலமான கட்சிகள் ஒன்றிணைவதை ஜெயலலிதா விரும்பமாட்டார். எதிர்க் கட்சிகள் அனைத்தும்  பிரிந்திருந்தால் ஜெயலலிதாவின் வெற்றி நிச்சயம். தமிழகத்தின் சாதாரண குடிமகனுக்குத் தெரிந்த இந்த உண்மை  அரசியல் தலைவர்களிடம் இல்லை.

 விருப்பு மனுவை ஏற்கப்போவதாக விஜயகாந்தின் கட்சி அறிவித்துள்ள்ளது. அதிக  தொகுதி தனது கட்சிக்கு வேண்டும் என விஜயகாந்த் பேரம் பேசுகிறார். தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரது கட்சியினர். பெரியளவில் ஆர்வம்  காட்டவில்லை. தமிழக முதலமைச்சரைத் தீர்மானிக்கும் சக்தி தனக்கு இருபதாக விஜயகாந்த் நினைக்கிறார். அவரது கட்சித் தொண்டர்கள் அப்படி நினைக்கவில்லை. பெரிய கட்சியின் வெற்றி தோல்வியை விஜயகாந்தின் கட்சி தீர்மானிக்கும் என்பது உண்மையே. பலமான கூட்டணி இல்லாமல் எதனையும் செய்ய முடியாது என்பதை அவரது கட்சித் தொண்டர்கள் உணர்ந்துள்ளனர்.

வெற்றிக் கூட்டணியுடன் விஜயகாந்த் இணைந்தால் அவரது தொண்டர்கள் மகிழ்ச்சியடைவார்கள். இல்லையேல் மெதுவாக ஒதுங்கி விடுவார்கள். களம் தாழ்த்தாது முடிவெடுக்க வேண்டிய நிலையில் விஜயகாந்த் இருக்கிறார். கருணாநிதி,ஜெயலலிதா ஆகிய இருவரின் தலைவிதி விஜயகாந்தின் முடிவிலே தங்கி உள்ளது.
ரமணி
தமிழ்த்தந்தி
07/02/16 

No comments: