Saturday, February 27, 2016

மக்கள் பிரச்சினைகளைக் கைவிட்ட வட மாகாணசபை


இலங்கைத் தமிழர்களின் இருப்பை வெளிக்காட்டும் முகமாக வட மாகாணசபையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கைகளில் ஒப்படைத்தவர்களின் எதிர்பார்ப்புகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. வாக்குகளை அள்ளி வழங்கினால் தமிழ் மக்களின் வாழ்வில் வசந்தம் வீசும் என்ற   வாக்குறுதி சிதறடிக்கப்பட்டுவிட்டது. முன்னாள் ஜனாதிபது மஹிந்த ராஜபக் ஷவின் முன்னால் முதலமைச்சர் சத்தியப்பிரமானம் செய்ததை தமிழ் மக்கள் சங்கடத்துடன்    ஏற்றுக்கொண்டனர். அமைச்சர் பதவி வேண்டும் என்ற குத்து வெட்டுடன் அட்சி ஆரம்பமானது. ஆளுனர் சந்திரசிறி இருக்கும்வரை வடமாகாண சபை சுயமாக இயங்காது என்ற எண்ணம்  மேலோங்கியதால் அவரின் மீது மக்கள் கோபம் கொண்டனர்.
நல்லெண்ண  ஆட்சியினால்  வடமாகாண ஆளுனர் மாற்றப்பட்டார். அதன் பின்னரும் வடமாகாண சபையில் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.  இரண்டரை வருடங்களில் வடமாகாண சபையின் செயற்பாடு எதிர்பார்த்தது போன்று இல்லை.  வடமாகாண சபையின் ஆட்சிபற்றி வெளியில் இருந்து வரும் விமர்சனங்கள் உண்மையா பொய்யா எனத் தெரியாது மகள்  குழம்பி இருக்கும் போது அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வடமாகாண சபையின் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது முக்கிய திருப்பமாக உள்ளது.

முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அமைச்சர் ஐங்கரனேசன் ஆகியோர் ஒருபக்கமாகவும், அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சில உறுப்பினர்களும் இன்னொரு பக்கமாகவும் அணிவகுத்து கூட்டமைப்புக்குள் இருக்கும் பனிப்போரை அம்பலமாக்கினர். கூட்டுறவுத்துறையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வடமாகாண சபையில் தெரிவித்தபோது அதனை சபையில் தெரிவிப்பது பிழையான செயல் என முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். இப்பிரச்சினை தொடர்பாக முதலமைச்சருக்கும் அவைத் தலைவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. முதலமைச்சரை அவரது கட்சியைச்சேர்ந்தவர்கள் எதிர்த்துப் பேசும்  சூழல் உருவாகியுள்ளது.
சுன்னாகம்  நிலத்தடிநீர்   மாசடைந்தது  தொடர்பாக அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது. அப்போது முதலமைச்சர் தனது அமைச்சரை காப்பாற்றுகிறார் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இவை எல்லாம் கூட்டமைப்புக்கு எதிரான குற்றச்சாட்டு என்ற எண்ணமே மேலோங்கியது.  கூட்டுறவுத்துறையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு அவற்றை எல்லாம் மழுங்கடித்துவிட்டது. அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக  பதினொரு குற்றசாட்டுகளை முன்வைத்து வடமாகாண சபை உறுப்பினர் கே.ரி.லிங்கநாதன் பிரேரணை ஒன்றை முன்வைத்து விசாரணை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தார். முக்கியமான பிரேரணையை முன் அறிவித்தல் இன்றி சமர்ப்பிக்க முடியாது என முதலமைச்சர் சுட்டிக்காட்டினர். உறுப்பினர்களின் நெருக்குதலினால் முதலமைச்சர் இறங்கிவந்து பிரேரணையை முன்மொழிந்தார்.
சுன்னாகம் கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட நீரை ஆய்வுசெய்து  அறிக்கை சமர்ப்பித்த நிறுவனத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். வடமாகாண சபை கேட்டதற்கிணங்கவே இந்த ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது.  தேசிய வடிகாலமைப்பு சபையின் ஆய்வு அறிக்கைக்கும் வடமாகாண சபையின் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. இலட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. அவைஈ மாடுகளுக்கு உணவாக மாறிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பான செயற்பாடு,இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம்,பளையில் நிறுவப்பட்ட காற்றாலை,மருதங்கேணி கடல் நீரை நன்னீராக்கும்திட்டம்,கார்த்திகை மரநடுகை,அனர்த்த நிவாரண விநியோகம்,கார்த்திகை மரநடுகை,உழவர் திருநாள்,மலர் கண்காட்சி,விவசாயிகள் தினம்,மண் தினம் போன்றவற்றை உரிய முறையில் அறிவிக்கவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டுள்ளன.
தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வடமாகாண சபையில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள்  செயற்படுவார்கள், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப்  பிரேரணை கொண்டுவரப்படும் என்ற செய்தி இறக்கை கட்டிப் பறந்தது. அவை எல்லாம் காற்றில்  காணாமல்  போனபின்னர்  அமைச்சர் ஐங்கரநேசனுக்கு  எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க காலத்தில் சகல அரசியல் கட்சிகளும் இரண்டாகின. தமிழ் தேசியக் ஊட்டமைப்பை இரண்டக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் செல்லாக்காசாகின. அந்த வேலையை இன்றைய உறுப்பினர்கள் கச்சிதமாச் செய்கின்றனர்.


அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிரான பிரேரணையில் உள்ள குற்றச்சாட்டுகள் வெளிவரும்போது உண்மை வெளிவரும்.
வானதி
சுடர் ஒளி

பெப்ரவரி24/மார்ச்02

No comments: