Friday, February 5, 2016

அரசியல் குட்டையைக் குழப்பும் புதிய கட்சி அறிவித்தல்


நல்லிணக்க அரசாங்கத்துக்கு குடைச்சல் கொடுப்பவர்களின் முயற்சிகளை ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் முறியடிக்கிறார்கள். சோர்வடையாத விக்கிரமாதித்தன் போல குடைச்சல் கொடுப்பவர்கள் புதிய கோணத்தில் சிந்திக்கிறார்கள். மைத்திரி ஜனாதிபதியானதும் ஜனாதிபதித்தேர்தலில் தோல்வியடைந்த மகிந்தவை பிரதமராக்க முயற்சி செய்தார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் இருந்துகொண்டு தமது காரியத்தைச்சாதிக்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறார்கள். நல்லிணக்க அரசுக்கு எதிரானவர்களில் சிலர்  மெதுமெதுவாக அரசின் பக்கம் சாய்கிறார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் குழப்பம் செய்பவர்களை கட்சித்தலைவரான ஜனாதிபதி மைத்திரி களைஎடுக்கிறார். இருந்த போதிலும் சிலர் பூச்சாண்டி  காட்டுவதை நிறுத்தவில்லை. மஹிந்த ஜனாதிபதியாக இருந்தபோது பல அரசியல் கட்சிகள் இரண்டாகின. எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் பதவி என்ற எலும்பைக்கண்டதும் தமது கொள்கையை மறந்து அரசாங்கத்துக்கு துதிபாடினார். ஆட்சி மாறினதும் சிலர் செல்லாக் காசாகினர். அரசியலில் இதெல்லாம் சகஜம் என உணர்ந்தவர்கள்  கட்சிமாறி தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்தினர். 

. ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியைச்சேர்ந்த மைத்திரியும்,மகிந்தவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாகிவிட்டது. அரசியல் கட்சிகளை உடைத்து இரண்டாக்கியவரின் கட்சி இரண்டகியதால் ஜனாதிபதித் தேர்தலில் அவர்  தோல்வியடைந்தார். மஹிந்த என்ற அரசியல் விருட்சத்தின்  நிழலில் சுகம் கண்டவர்கள் அந்த நிழலில் இருந்து வெளிவர மறுக்கின்றனர். தமது அரசியல் இருப்பை வெளிக்காட்டுவதற்காக அவ்வப்போது அவர்கள் அறிக்கைகளை வெளியிட்டு திருப்தியடைகின்றனர். நல்லிணக்க அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச்சேர்ந்தவர்கள்  மாற்று எதிரணியாகச செயற்படுகின்றனர். முன்னாள் ஜனாதிபதியை முதன்மைப்படுத்துவதே அவர்களின் நோக்கம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவியை ஜனாதிபதி மைத்திரியிடன் இருந்து கைப்பற்ற முடியாது எனத்திட்டவட்டமாக உணர்ந்தவர்கள் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது பற்றி சிந்திக்கிறார்கள். அக்கட்சிக்கு மஹிந்தவைத் தலைவராக்க முயற்சி  செய்கிறார்கள். ஆட்சியைப் பிடிக்க முடியாத கட்சிக்கு தலைவராக மஹிந்த விரும்பவில்லை. ஆகையினால் அவர்களது பார்வை கோத்தபாயவை நோக்கி திரும்பி உள்ளது. புதிய அரசியல் கட்சி ஒன்றின் தோற்றம் பற்றி கோத்தபாய கருத்துத் தெரிவித்திருப்பதால் அவரின் தலைமையில் புதிய கட்சி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாதிக ஹெல உறுமய,போது பலசேன ஆகியவற்றின் அட்டகாசம் கடந்த ஆட்சிக் காலத்தில்  அதிகமாக இருந்தது.  இப்போது அக்கட்சிகள் அதிரடியகச்செயற்படமுடியாத நிலை உள்ளது. தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாத அரசியல் கட்சிகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அரசியல் தலைமையை விரும்புகின்றனர். தேசிய சுதந்திர முன்னணி,மித்துரு ஜாதிக ஹெல உறுமய ஜனநாயக இடதுசாரி லங்கா சமசமாஜக் கட்சி இலங்கை  கொம்யூனிஸ்ட் ஆகியன ஒன்றிணைந்து புதிய கட்சியை ஆரம்பிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்குக் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச்சேர்ந்த வர்கள் சிலர் இக்கட்சியில் இணைவார்கள்.
ஜனாதிபதி மைத்திரியின் தலைமையை விரும்பாத ஸ்ரீலங்கா 
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு உள்ளூளூராட்சித் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பமளிக்கப்படமாட்டாது. ஆகையினால் தமதி அரசியல் இருப்பை உறுதிப் படுத்துவதற்காக  புதிய கட்சியின் தேவை ஒன்று அவர்களிடம் உள்ளது. ஜனாதிபதி மைத்திரியையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவையும் ஒன்றிணைக்க சிலர் முயற்சி செய்தார்கள் அந்த முயற்சி தோல்வியடைந்தது. பாராளுமன்றத் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் அவர்களது  ஆதரவாளர்களும்  போட்டியிட் ஜனாதிபதி மைத்திரி அனுமதி வாழங்கினார். உள்ளூளூராட்சித் தேர்தலில் கட்சிக்கு விசுவாசம் இல்லாதவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.

   .  . ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தயவு இல்லாது தேர்தலில்  வெற்றி பெற முடியாது தெரிந்து கொண்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என தம்மை அழைத்துகொள்பவர்கள் சிங்கள இனம் என்ற கொதி நிலையில்  தேர்தலில் போட்டியுட முயற்சிக்கிறார்கள். இதன் ஒரு அங்கம் தான் சிங்ஹலே என்ற கோஷம் என்ற சந்தேகம் உள்ளது. இனவாதத்தைத் தூண்டி தேர்தல் வெற்றியை அனுபவித்தவர்கள் பின்னாளில்  புலியைப் பற்றிய கிலியை விதைத்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள் புலிகளை அழித்த அடையாளம் நிரந்தர வெற்றியைக் கொடுக்கும் என்ற கனவு பொய்த்துப் போனது. தேர்தல் வெற்றிக்காக எதாவது ஒன்றைச்செய்யவேண்டிய நிலையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உள்ளது  

தமிழ் முஸ்லிம் வாக்குகள் இல்லது  பாராளு மன்றத்தேர்தலில் வெற்றிபெற முடியாது. ஆனால் உள்ளூளூராட்சித் தேர்தலில் சிங்கள இனவாத வாக்குகளால் வெற்றி பெற முடியும் என நினைப்பவர்கள் புதிய அரசியல்  கட்சியைப்பற்றி சிந்திக்கிறார்கள். புதிய அரசியல் கட்சியின் தோற்றத்துக்கு மஹிந்த  ஆதரவு வழங்கவில்லை என்றாலும் அவரது  ஆசி உள்ளது என்பது இரகசியமானதல்ல. விகாரைகளுக்கு வணங்கச் செல்லும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அங்கு அரசியல் பேசுகிறார். அவரது அரசியல் பேச்சுகள் அனைத்தும் நல்லிணக்க அரசாங்கத்துக்கு எதிரானதாகவே உள்ளன. புதிய கட்சியின் தோற்றப்பாட்டை வலியுறுத்துவதாக அவரது பேச்சுகள் அமைகின்றன.

கிராமங்களில் உள்ள சிங்கள மக்கள் இன்னமும்  மஹிந்தவின் ஆதரவாளர்களாக உள்ளனர். தமது  மீட்பராக அவரை நோக்குகின்றனர்.  இனவாதத்தில் குளிர் காய்பவர்கள் மீண்டும் மேலெழ முயற்சி செய்கின்றனர். இவர்களைச்சமாளிக்க  பாரிய பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிக்கு உள்ளது. கொஞ்சம் அசந்தால் உள்ளூளூராட்சித்  தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி கோலோச்சிவிடும். ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்களையும் ஒரே நேரத்தில்  சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் ஜனாதிபது உள்ளார்.
வானதி
சுடர் ஒளி

ஜனவரி 3/ஜனவரி  9

No comments: