Monday, February 29, 2016

இந்திய மாணவர்கள் மத்தியில் முளை விடும் தேசத்துரோகம்.


டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியில்  பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியதால் மாணவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு பாய்ந்துள்ளது.     இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவைத் தியாகி என மாணவர்கள் கோஷமிட்டதால்   மாணவர்கள் மீது எதிர்ப்பலைகளும் கண்டனங்களும் எழுந்துள்ளன.  சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர் இயக்கத்தலைவர் கன்யா குமார் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் இந்தியாவைக் குறிவைத்து பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலும், மும்பை ஹோட்டல், ரயில் நிலையம் ஆகியவற்றின் மீதானன் தொடர் தாக்குதல்களும் இந்தியர்களின் மனதில்   வடுவை ஏற்படுத்தியுள்ளன. இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் இந்தியர்களின் மனதை அதிகளவில் பாதித்துள்ளது. நாடாளுமன்றத் தாக்குதலின் சூத்திரதாரி என அடையாளம் காணப்பட்ட அப்சல் குருவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்திய ஜனநாயகத்தைத் தகர்க்க முற்பட்டு மரணதண்டனை விதிக்கப் பட்டவரை  மாணவர்கள் தியாகியாக்கியது இந்தியர்களின்மனதைப் புண்படுத்திவிட்டது.

 மாணவர் இயக்கத் தலைவர் கன்யா குமார் கைது செய்யப்படமுன் அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கறுப்புச்சட்டை அணிந்த வக்கீல்கள் இத் தாக்குதலை முன்னின்று நடத்தினர்.  வக்கீல் போன்று  வேடமணிந்த தொலைக்கட்சிக்குழு இதனை ஒளிப்பதிவு செய்துள்ளது.  பொலிஸார் நடத்திய விசாரணையின் பின்னர்  பாகிஸ்தானை ஆதரித்து இந்தியாவை எதிர்த்து கன்யா குமார் கோஷமிடவில்லை என்பது தெரியவந்துள்ளது. என்றாலும்  கலாசார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததனால் அவர் மீது தேசத்துரோக குற்றச்சாடு சுமத்தப்பட்டுள்ளது.

 டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அப்சல் கரு நினைவுதினம் கொண்டாடுவதற்கு ஆலோசனை வழங்கிய உமர் காலித்,அனிர்பன்,பட்டாச்சாரியா,ராம நாகா,அசுதோஷ் குமார், அனந்த பிரகாஷ் ஆகிய மாணவர்கள் தான் இதன் சூத்திரதாரிகள் என விசாரணைகளின் மூலம் தெரியவந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தில்  இருந்தனர். பல்கலைக் கழகத்தினுள் செல்வதற்கு   பொலிஸுக்கு அனுமதி இல்லை என்பதனால் அவர்களை சரணடையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.   தலை மறைவனதாக அறிவிக்கப்பட்ட அவர்கள் பின்னர் பல்கலைக்கழக வளாகத்துக்குத்  திரும்பியதாக அறிவிக்கபட்டது..பெப்ரவரி 9 ஆம்  திகதி இச்சம்பவம் நடைபெற்றது.பெப்ரவரி 13   ஆம்  திகதி சம்பந்தப்பட்ட மாணவர்கள் சரணடைந்தனர்.

இந்தியர்களினால்   மறக்க முடியாத நாள் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  13 ஆம் திகதி. அன்றுதான் தீவிரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில்   ஆறு பாதுகாப்புப்படை வீரர்கள்,ஒரு பொலிஸ்காரர் உட்பட 13 பேர் தீவிரவாகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதல்  நடத்த வந்த ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கிய  தலைவர்களில் ஒருவரான அத்வானி உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் அன்று நாடாளுமன்றத்தில் இருந்தனர்.  நாடாளு மன்றத்தைதோ நோக்கிச்சென்ற தீவிரவாதிகள் துணை ஜனாதிபதி கிருஷ்ண காந்தின் காரை  இடித்துத் தள்ளியபடி பாராளுமன்றத்தினுள் நுழைய முற்பட்டனர்.

இந்திய மக்களின் மனதுடன் மனதுடன் ஒன்றிணைந்த படைவீரர்களைக் கொன்ற தீவிரவாதிகளை   தியாகியாக்குவதை இந்திய மக்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. பாகிஸ்தானில் இருந்து இயங்கும் திவிரவதிகளினால் இந்தியாவில் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இந்திய உளவுத்துறை அறிவிக்கிறது. உளவுத்துறை அதுபற்றிய எச்சரிக்கைளை அவ்வப்போது வெளியிடும். அந்த எச்சரிக்கைகளையும் மீறி நக்குதல் நடை சில வேளைகளில் நடைபெறுகின்றன.

இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலுக்கும் அப்சல் குருவுக்கும் தொடர்பு இல்லை என அவரின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.  உறங்கிக் கிடந்த இந்த உணர்வு மேலோங்குவதை இந்திய அரசாங்கம் இலகுவாக விட்டுவிடாது. இதற்குரிய அதிகபட்ச  நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்க மாட்டாது.  அப்சல் குருவை நினைவு கூர்ந்த மாணவர்களுக்கும்  பயங்கரவதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். மாணவர்கள் அதனை மறுத்துள்ளனர்.  அந்தப் பல்கலைக் கழகத்தினுள்  மதுப்போத்தல்களும்  ஆணுறைகளும்  தாராளமாகக்  கிடைப்பதாக அமைச்சர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 அரசியல்வாதிகள் மட்டுமல்லாது சினிமா நடிகர்கள்,விளையாட்டு வீரர்கள் ஆகியோரும்  படை வீரர்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ளவில்லை. சிறுவயது முதலே பிள்ளைகளிடம் தேசப்பற்றை வளர்க்க கற்றுக்கொடுக்க வேண்டும் என நடிகர் மோகன் லால் தெரிவித்துள்ளார். பேச்சுரிமை, தேசப்பற்று என்றஜனநாயகத்தில் நேரு பல்கலைக் கழகத்தில்  நடக்கும் போராட்டங்களை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இராணுவ வீரர்கள் எல்லையில் விழித்திருப்பதனால் தான் நாம் நிம்மதியாக தூங்க முடிகிறது.  அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்த முடிகிறது என மோகன் லால் தெரிவித்துள்ளார்.

சிறப்புப் படைவீரர்களும் கொமாண்டோக்களும் உங்களையும் என்னையும் போற சாதாரண மனிதர்கள் தான் சுயநலனுக்கு முன்பாக தேசிய நலன்தான் முக்கியம் என அவர்களுககு உணர்த்தப்பட்டுள்ளது என  டோனி தெரிவித்துள்ளார். அப்சல் குரு தியாகி என்றால் சியாச்சின் பணியில் மரணமாகும் வீரர்கள் யார் என குத்துச்சண்டை வீரர்  யோகேஸ்வர் கேள்வி எழுப்பி உள்ளார். ஒருவர் தான் வாழும் நாட்டைப்பற்றி பல்கலைக்கழகத்தில்  தவறாகப் பேசக்கூடாது தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என ஷிகர் தவன் நேரடியாகத் தெரிவித்துள்ளார்.   தேச நலனுக்கு முன்பாக அரசியல் நலனைப்  பார்க்கக்கூடாது. அப்சல் குருவுக்கு அதரவாக முழக்கமிடப்பட்ட வீடியோவைப் பார்த்து அதிச்சியடைந்தேன்  என்கிறார்  கம்பீர்

டில்லி  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் இந்திய மக்களின் உணர்வைத் தூண்டியுள்ளது. ஆகையினால் இச் சம்பவத்தின்  பின்னணியை கண்டு பிடித்து வேரை அடியுடன் பிடுங்குவதற்கு இந்திய் அரசு தயங்காது.
ரமணி.
தமிழ்த்தந்தி
28/02/16







No comments: