Friday, March 8, 2019

தலைமை இல்லாது கூட்டணியை குழப்பும் தேமுதிக



கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் அரசியல் சாணக்கியர்களையே தடுமாறச்செய்தவர் விஜயகாந்த். ரசிகர் மன்றங்களை அரசியல் அலுவலகங்களாக்கி கருப்பு எம்ஜிஆர் அன்ர பெயருடன் தமிழகத்தின் அடுத்த முதல்வர் கனவில் கம்பீரநடைபோட்டவர். மக்களுடனும் கடவுளுடனும் கூட்டணி என்ற விஜயகாந்தின் சத்தியப்பிரமாணத்தில் மயங்கியவர்கள் அவருக்கு வாக்களித்தனர். கருணாநித்டிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றீடான அரசியல் தலைவராகவே சிலர் விஜயகாந்தைப் பார்த்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் வீழ்த்துவேன் என கங்கணம் கட்டி அரசியல் கட்சி ஆரம்பித்தவர்கள் அந்தக் கட்சிகளிடன் சரணடைந்ததுதான் வரலாறு. என்வழி தனிவழி என்ற ரஜினியின் சினிமா வசனத்தை நிஜத்தில் நடை முறைப்படுத்தியவர் விஜயகாந்த். கருணாநிதியின் வெற்ரி தோல்வியையும் ஜெயலலிதாவின் வெற்றி தோல்வியையும் ஒரு காலத்தின் வைகோவும் ராமதாஸும் தீர்மனித்தனர். அந்த இடத்தை விஜயகாந்த் பிடித்ததால் கருணாநிதியும் ஜெயலலிதாவும் கடுப்பாகினர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள் விஜயகாந்தின் பக்கம் சென்றதால் விஜயகாந்தை தனது கட்சிக் கூட்டணியில் இணைத்தார் ஜெயலலிதா. அன்று சரிந்த விஜயகாந்தின் செல்வாக்கு இன்று படுபாதாளத்தில் விழுந்துள்ளது.

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேரம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிகளின் கூட்டணிப்பேரம் முடிந்து விட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் 20 தொகுதிகளை வைத்துக்கொண்டு தன்னுடன் இணைந்த கட்சிகளுக்கு 20 தொகுதிகளைப் பங்கிட்டுக் கொடுத்துள்ளது. விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்தக் கட்சியுடன் கூட்டணி சேருவதென்று முடிவெடுக்க முடியாமல் விஜயகாந்தின் கட்சி தடுமாறுகிறது.

விஜயகாந்தின் உடல்நிலை குன்றியதால்  அவருடைய மனைவி பிரேமலதாவும் மைத்துனர் சுதீஷும்  கூட்டணிப்பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்துகின்றனர். அமெரிக்கவின் சிகிச்சை பெற்று நாடு திரும்பிய  விஜயகாந்தை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், ரஜினி, ஸ்டாலின், சரத்குமார் ஆகியோ சென்று பார்வையிட்டனர். உடல் நலம், பற்றி விசாரிக்கச்சென்றவர்கள் அங்கு அரசியலும் பேசி இருப்பார்கள். எவரும் அதனை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. விஜயகாந்தின் அரசியல் எதிரியான ராமதாஸின் கட்சிக்கு கொடுத்த தொகுதிகளுக்கு  குறையாமல் தமக்கும்  தரவேண்டும் என சுதீஷ் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. 10 சத வீதமாக இருந்த விஜயகாந்தின் வாக்கு வங்கி இரண்டு சதவீதமாக இருப்பதனால் ராமதாஸுக்குக் கொடுத்த ஏழு தொகுதிகளைக் கொடுக்க அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் மறுக்கிறது.

மத்திய அமைச்சர்களும் தமிழக அமைச்சர்களும் சுமார் 20 நாட்களாக பிரேமலதாவுடனும் சுதீஷுடனும் பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. தமது மதிப்பை உயர்த்துவதற்காக ஸ்டாலின் வந்து அரசியல் பேசினார்  என ஒரு குண்டை பிரேமலதா தூக்கிப் போட்டார். அதற்கும் அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் மசியவில்லை. பிரதமர் மோடி, தமிழகத்தில் பங்குபற்றும் அரச வைபவத்தில் வைபவத்தில்  கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற வேண்டும் என பாரதீய ஜனதாத் தலைவர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் விரும்பினார்கள்.  மாலையில் மோடியின் கூட்டம். அன்று நண்பகல் ஹோட்டல் ஒன்றில் மத்திய அமைச்ச்ர் பியூஸ் கோயலுடன் சுதீஸ் பேச்சு வார்த்தை நடத்தினார்.  அன்று முடிவு எட்டப்படும் என அனைவரும் காத்திருந்தபோது துரை முருகனின் பேட்டி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது.

 பாரதீயஜனதா அமைச்சருடன் சுதீஷ் பேச்சு வார்த்தை நடத்திய அதே  நேரத்தில், வியஜகாந்தின் கட்சிப் பிரமுகர்களான அழகாபுரத்து முருகேசனும் முன்னாள் பொருளாளர் இளங்கோவனும் துரை முருகனைச்  சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகக்  கூட்டணியில் இடம் கேட்டார்கள். தனது கட்சியின் மதிப்பை சுதீஷ் உயர்த்திப் பேசிக்கொண்டிருகும்போது பத்திரிகையாளர் முன்பாக சுதீஷின் இரட்டை வேடத்தை துரை முருகன் வெளிப்படுத்தினார்.  மோடி பங்கேற்கும் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வியஜகாந்தின் படம் அகற்றப்பட்டு தமிழிசையின் படம் காட்சிப்படுத்தப்பட்டது.

விஜயகாந்தின் வருகைக்காகக் காத்திருந்த ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டார்.  இதனைத் தெரிந்துகொண்டும் வியஜகாந்தின் கட்சிப் பிரமுகர்கள் துரை முருகனைச் சந்தித்தது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது. பேரம் படியாத்ததால் அணி மாறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சென்றது. விஜயகாந்தின் கட்சியினர் இரண்டு அணிகளுடனும் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தினர். அகிக தொகுதிகள் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க் வேண்டும் என்பதே அவர்களது முடிவு. அதனாலேயே இரண்டு பக்கமும் பேசி தமது மதிப்பை உயர்த்த முயன்றனர்.
இரண்டு பக்கமும் போக்குக் காட்டியதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொடுக்கும் தொகுதிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இருக்கிறது. கூட்டணியா தனித்துப் போட்டியா என்பதை இன்னமும் முடிவு செய்யவில்ல என பிரேமலதாவும் சுதீஷும் தெரிவித்துள்ளனர். அரசியல் அரங்கில் அவமானப் பட்டு நிற்பதால் பிரேமலதாவும் சுதீஷும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன்  தலைவர்களையும் மோசமாக விமர்சிக்கின்றனர்.

தமிழக சட்ட சபையிலும் பத்திரிகையாளர்களின் முன்னிலையிலும் விஜயகாந்த், பேசியவையும் அவர்  காட்டிய சைகைகளும் இன்றும் சாட்சியாக இருக்கின்றன. கூட்டணிக்காக காலில் விழுகிறார்கள் என  விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சொன்னதை அரசியல் தலைவர்கள் யாரும் ரசிக்கவில்லை.  தமது தரப்பு விளக்கத்தைத் தெரிவிப்பதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுதீஷும் பிரேமலதாவும் வெளிப்படுத்திய ஆவேசமும் பதைபதைப்பும் பத்திரிகையளர்களை வெறுப்பேற்றியுள்ளது.

இத்தனை களேபரங்களுக்குப் பின்னரும் விஜயகாந்தின் வருகைக்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டனிக் கதவை அகலத்திறந்து வைத்துக்கொண்டிருக்கிறது.

சூரன்.ஏ.ரவிவர்மா.

No comments: