டெல்லி பெரோஸ்ஷா
கோட்லா மைதானத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற ஐந்தாவது ஐபிஎல் போட்டியில் ஆறு விக்கெற் வித்தியாசத்தில்
சென்னை வெற்றி பெற்றது. பெங்களூருக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற சென்னையும், மும்பையுடனான முதல் போட்டியில் வெற்றி
பெற்ற டெல்லியும் தமது இரண்டாவது வெற்றிக்காகப் போராடின. நாணயச்சுழற்சியில் வெற்றி
பெற்ற டெல்லி அணித் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.
பிரித்விஷா, ஷிகர் தவான் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட
வீரர்களாகக் களம் இறங்கினர். 4.1 ஓவர் வரை விளையாடிய இவர்கள் இருவரும் 36 ஓட்டங்கள்
எடுத்தனர். தீபக் சகாரின் பந்தை வட்சனிடம் பிடிகொடுத்த பிரித்விஷா 24 ஓட்டங்களில் ஆட்டம்
இழந்தார்.தவான், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி43 ஓட்டங்கள் எடுத்தது.இம்ரான் தாகீரின் பந்தில்
எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்த ஸ்ரேயாஸ் அய்யர் 18 ஓட்டங்கள் எடுத்தார்.தவானுடன்
ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் தனது அதிரடி மூலம்
வெற்றியைத் தேடிக்கொடுத்த ரிஷாப் பண்டின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த
ஜோடி 41 ஓட்டங்கள் எடுத்தபோது பிராவோவால் பிரிக்கப்பட்டது.
பிராவோவின் பந்தை
ரிஷாப்பண்ட் தூக்கி அடித்தபோது நீண்ட தூரம் ஓடி அற்புதமாக அதனை சர்துல் தாகூர் பிடித்தார்.
13 பந்துகளுக்கு முகம் கொடுத்த பண்ட்,இரண்டு சிக்ஸர்கள்,ஒரு பவுண்டரி அடங்கலாக 25 ஓட்டங்கள்
எடுத்தார். அடுத்துக் களம் இறங்கிய இங்ரம் இரண்டு ஓட்டங்களும் கீமோ பவுல் ஓட்டமெதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். டெல்லியின் விக்கெற்கள் அடுத்தடுத்து வீழ்ந்தாலும்
தவான் பொறுப்புடன் ஆடி 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்களில் ஆறு
விக்கெற்களை இழந்த டெல்லி 147 ஓட்டங்கள் எடுத்தது.
33 ஓட்டங்களைக் கொடுத்த பிராவோ மூன்று விக்கெற்களை வீழ்த்தினார்.திபக் சாகர் ,ஜடேஜா,இம்ரான் தாகிர்
ஆகிடோர் தலா இரு விக்கெற்றை வீழ்த்தினர்.
வட்சன்,
ராயுடு ஆகியோர் சென்னை அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர்.
ஐந்து ஓட்டங்களில் ராயுடு ஆட்டமிழந்தார். வட்சன்
ரெய்னா ஜோடி அச்சுறுத்தியது. இஷாந்த்,ரபாடா,அமித் மிஸ்ரா ஆகியோரின் பந்துகளை இருவரும்
விரட்டி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இந்த ஜோடி 52 ஓட்டங்கள் எடுத்தபோது மிஸ்ராவின் பந்தை ரிஷாப் பண்டிடம்
பிடி கொடுத்து வட்சன் ஆட்டமிழந்தார். 26 பந்துகளைச் சந்தித்த வட்சன் நான்கு பவுண்டரிகள்,
மூன்று சிக்ஸார் அடங்கலாக 44 ஓட்டங்கள் எடுத்தார்.
ரெய்னாவுடன் கேதார்
ஜாதவ் இணைந்தார். இருவரும் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ரெய்னா,
கேதார் ஜோடி 25 ஓட்டங்கள் எடுத்தபோது ரெய்னா ஆட்டமிழந்தார். 16 பந்துகளுக்கு முகம்
கொடுத்த ரெய்னா, 4 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர்
அடங்கலாக 30 ஓட்டங்கள் அடித்தார்.
ரெய்னா வெளியேற
டோனி உள்ளே சென்றார். விரைவாக வெற்றியைக் கொண்டாடலாம் என எதிர்பார்த்த ரசிகர்களை டோனியும்
கேதாரும் சோதித்தனர். ஏழு ஓவர்களில் மெதுவாகத் தட்டிவிட்டு ஒரு ஓட்டம் மட்டுமே இருவரும்
அடித்தனர். சிக்ஸர், பவுண்டரியை எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 14 ஆவது ஓவரில்
கேதார் அடித்த பந்தை தவான் பிடிக்கவில்லை. இந்தப்போட்டியில் தவான் தவறவிட்ட இரண்டாவது கச் இதுவாகும்.
17 ஆவது
ஒவரில் ரபாடா வீசிய முதல் ஐந்து பந்துகளிலும் டோனியால் ஓட்டம் எதுவும் எடுக்கமுடியவில்லை. கடசி
பந்தில் ஒரு ஓட்டம் அடித்தா டோனி.
கடைசி இரண்டு ஓவர்களில்
வெற்றி பெறுவதற்கு 11 ஓட்டங்கள் தேவை. அமித்
மிஸ்ரா வீசிய 19 ஆவது ஒவரில் இரண்டாவ்து,மூன்றாவது, நான்காவ்து பந்துகளில் தலா ஒரு
ஓட்டம் எடுக்கப்பட்டது. கடசிப் பந்தில் டோனி சிக்ஸர் அடித்து பதற்றத்தைக் குறைத்தார்.
ஐந்து ரபாடா வீசிய
கடைசி ஓவரின் முதல் பந்தை அடித்த கேதார் ரிஷாப் பண்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
நாலாவது பந்தை பிராவோ பவுண்டரிக்கு அனுப்ப 150 ஓட்டங்கள் எடுத்த சென்னை ஆறு விக்கெற்களால்
வெற்றி பெற்றது. வட்சன் ஆட்ட நாயகன் விருது
பெற்றார்.
கடைசி ஓவர் வரை
இழுத்தடித்து, பார்வையாளர்களை பதற்றப்படுத்தி
வெற்றி பெறுவது சென்னையின் எழுதப்படாதவிதி.
ஐபிஎல் தொடரில் இதுவரை 44 போட்டிகளை விரட்டி வெற்றி பெற்றது சென்னை. அவற்றில் 24 போட்டிகளில்
20 ஆவது ஓவரில் வெற்றி பெற்றது. டெல்லியில் அமித் மிஸ்ரா 50 ஆவது விக்கெற்றைக் கைப்பற்றினார்.
ஐபிஎல் வரலாற்றில் ஒருமைதானத்தில் 50 விக்கெற்களை வீழ்த்திய முதல்வீரர் அமித் மிஸ்ரா.
No comments:
Post a Comment