Saturday, May 30, 2020

கொரோனா வைரஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் 8 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளும்


கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலக நாடுகள் கதிகலங்கி உள்ளன. இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அமுல் படுத்திய  ஊரடங்கால் பொருளாதாரம் முடங்கி   வாழ்வாதாரங்கள் பறி போய் உள்ளன. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் குழந்தைகளின் நிலை குறித்து .நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப்பும், மனிதாபிமான அமைப்பானசேவ் தி சில்ட்ரன்அமைப்பும் கூட்டாக ஒரு ஆய்வு நடத்தி உள்ளன. கொரோனா வைரஸுன் தாக்கத்தால் இந்த ஆண்டு எட்டு கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் அம்பலத்துக்கு வந்துள்ள முக்கிய தகவல்கள் இவை:-

* குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் 8 கோடியே 60 லட்சம் குழந்தைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் வறுமையில் தள்ளும். இதன்மூலம் இப்படி வறுமையில் தவிக்கிற குழந்தைகளின் எண்ணிக்கையானது, 15 சதவீதம் அதிகரித்து 67 கோடியே 20 லட்சமாக உயரும்.
* இந்த எண்ணிக்கையில் மூன்றில் இரு பங்கு குழந்தைகள் சகாரா ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா பகுதிகளில் வாழ்கின்றனர். ஐரோப்பா, மத்திய ஆசியா முழுவதும் உள்ள நாடுகளில் மிக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு காணப்படுகிறது. ஏறத்தாழ 44 சதவீதம்பேர் இந்த நாடுகளில் உள்ளனர். லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 22 சதவீதம் அதிகரிப்பு உள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளையொட்டி யுனிசெப் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஹென்ரிட்டா போர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், “கொரோனா வைரஸ் தொற்று நோய் இதுவரை இல்லாத அளவில் சமூக பொருளாதார நெருக்கடிகளை தூண்டி உள்ளது. இது உலகெங்கும் உள்ள குடும்பங்களுக்கான வளங்களை வடிகட்டுகிறதுஎன கூறி உள்ளார்.
 , “குடும்பங்கள் இடையே நிதி நெருக்கடியின் அளவும், ஆழமும் குழந்தைகளின் வறுமையை குறைப்பதில் பல ஆண்டு கால முன்னேற்றத்தை திருப்பும். அவர்கள் அத்தியாவசிய சேவைகளை இழக்க வைக்கும். ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லாமல், குடும்பங்கள் வறுமையில் தள்ளப்படலாம். ஏழ்மையான குடும்பங்கள் பல்லாண்டு காலமாக காணப்படாத பற்றாக்குறையை சந்திக்கிற நிலை உருவாகலாம்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு கொள்கைகளால் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் 2 மடங்குக்கு இருக்கும் என்று யுனிசெப்பும், ‘சேவ் தி சில்ட்ரன்அமைப்பும் எச்சரிக்கின்றன.

உடனடி வருமான இழப்பு என்பது குடும்பங்கள் உணவு மற்றும் நீர் உள்ளிட்ட அடிப்படைகளை வாங்குவதற்கான திறனைக் குறைத்து விடும். கல்வி மற்றும் சுகாதார சேவைகளை நாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. குழந்தை திருமணம், வன்முறை, சுரண்டல், துஷ்பிரயோகம் ஆகியவற்றின் ஆபத்து அதிகரிக்கும் என அவை சுட்டிக்காட்டுகின்றன.

இதேபோன்று சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி இங்கர் ஆஷிங் கூறும்போது, “கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அதிர்ச்சியூட்டும் வறுமை பாதிப்புகள், குழந்தைகளை கடுமையாக பாதிக்கும்என குறிப்பிட்டார்.

மேலும், “குழந்தைகள் குறுகிய கால பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால்கூட மிகவும் பாதிக்கப்படுவார்கள். இது அவர்களது முழு வாழ்க்கையையும் பாதிக்கும். நாம் இப்போது உறுதியுடன் செயல்பட்டால், ஏழ்மையான நாடுகள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில குழந்தைகள் எதிர்கொள்ளும் தொற்றுநோயை தடுக்கலாம் அல்லது கட்டுப்படுத்தலாம். எங்களின் ஆய்வறிக்கை, உலகத்தை தட்டி எழுப்பும் அழைப்பாக இருக்க வேண்டும்என்று கூறினார்.

 

No comments: