Friday, May 22, 2020

இந்தியாவில் எல்லை மீறும் சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்



‘‘இந்திய எல்லைப் பகுதியில் சீனா தொடர்ந்து தொந்தரவு கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது’’ என்று அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுடனான எல்லை விவகாரத்தில் இதற்கு முன்பு பல முறை சீனா அத்துமீறி நடந்துள்ளது. அப்போது அமெரிக்கா தனது கண்டனத்தை பகிரங்கமாகவும் நேரடியாகவும் கூறியதில்லை. தற்போது வர்த்தக போர் மற்றும் கரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா - அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவுகிறது. அதன் காரணமாக சீனாவை அமெரிக்கா நேரடியாகவே கண்டித்துள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 , லடாக் பகுதியில் இந்திய எல்லை பகுதிக்குள் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் சீன வீரர்கள் நுழைந்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும், லடாக் பகுதியில் சாலை அமைக்கும் இந்திய அரசின் திட்டத்தையும் சீனா ஆட்சேபித்தது.

  சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தக சண்டை நடந்தது. அதன்பின்னர் தற்போது கரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாதான் அனைத்துக்கும் காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில், இந்திய எல்லை பகுதியில் சீனா தொந்தரவு செய்து வருவதற்கு தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க மூத்த அதிகாரி ஆலிஸ் வெல்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆலிஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென் சீனக் கடல் பகுதியாகட்டும் அல்லது வேறு விவகாரங்களாகட்டும்... சீனாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் அச்சுறுத்தலையே நினைவூட்டுகின்றன. தற்போது இந்திய எல்லையில் தொடர்ந்துதொந்தரவு அளிக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளது. தனது பலத்தை காட்டும் விதத்தில் சீனா தொடர்ந்து இதுபோல் செயல்படுகிறது. பலத்தை காட்டி ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபடுகிறது. இதை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

No comments: