Friday, August 23, 2024

தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் தேநீர் அரசியல்

தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் இடையிலேயான உறவு எப்பவும் சீராக  இருந்ததில்லை. தமிழக அரசாங்கத்துக்குக் குடைச்சல் கொடுப்பதே  ஆளுநரின் முக்கிய வேலையாக இருக்கும். அதற்கு ஆர்.என்.ரவியும் விதிவிலக்கல்ல.ஸ்டாலின்  முதல்வரானதும்   அவரை எதிர்ப்பதற்காகவே ரவி  களம் இறக்கப்பட்டர். பல சந்தர்ப்பங்களில் அவர் மூக்குடைபட்டார்.

கருணாநிதியும்,ஜெயலலிதாவும் அளுநருக்கு எதிராகத் தொடுத்த அஸ்திரங்களை இந்தியா நன்கு அறியும். ஜெயலலிதாவின் காலம் ரணகளமானது. ஜெயலலிதா இறந்தபின்னர் எடப்பாடியின் ஆட்சியில் இருந்த தமிழகம் மோடியின் தாளத்துக்கு ஆடியது.  எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின்  அப்போது போர்க்கொடி தூக்கினார்.

ஸ்டாலின் முதல்வரானதும் ஆளுநருக்கு எதிரான  போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது.  இப்போது ஆளுநர் ரவியின்  தேநீர் விருந்தில் ஸ்டாலினும், அமைச்சர்களும் கலந்துகொண்டு ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் கொடுக்கும் தேநீர்விருந்தை தமிழக அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இது வரை புறக்கணித்தன.

 ஆளுநர் ஆர்.என்.ரவி  சென்னை ராஜ் பவனில் கொடுத்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், தனது அமைச்சரவை சகாக்களோடு பங்கேற்றதும், ஆளுநருடன் சிரித்துச் சிரித்துப் பேசியதும் அனைவரது புருவங்களையும் உயரச் செய்திருக்கிறது. முதலில் இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவெடுத்த ஸ்டாலின், பின்னர் பங்கேற்றது ஆச்சரியததை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழக அரசோடும் முதலமைச்சர் மு.. ஸ்டாலினோடும் தொடர்ந்து மோதல் போக்கினை கடைப்பிடித்து வருகிறார் ஆளுநர் ரவி. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து உரசல்கள் தொடர்ந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது, ஆளுநர் அவ்வப்போது திராவிடத்தை விமர்சிப்பது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவிக்கும் விதமாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சுதந்திர தினத்தன்று மாலையில் ஆளுநர் மாளிகையில் தரப்படும் தேநீர் விருந்தை கடந்த மூன்று  ஆண்டுகளாக புறக்கணித்து வந்தன. இந்த ஆண்டும், திமுக மற்றும் தி.மு. கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.  ஆனால்,    தேநீர் விருந்தில் அமைச்சர்கள்  கலந்துகொண்டனர்.

ஆளுநரின் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அவரும் அமைச்சர்களும்   கலந்து கொண்டதும், ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் இயல்பாக சிரித்து மகிழ்ந்திருப்பதும் திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக  சில  விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 "கலைஞர் கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா வரும் 18 ஆம் திகதி நடக்கிறது. மத்திய பாஜக அரசின் பாதுக்காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு நாணயத்தை வெளியிடுகிறார். இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பாஜகவினர் பலரும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆளுநரின் தேநீர் விருந்தை ஸ்டாலின் புறக்கணித்தால், கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிடும் நிகழ்வுக்கு ராஜ்நாத் சிங் வரமாட்டார் என்றும், அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் புறக்கணிப்பார்கள் என்றும் தகவல் கசிந்தது.

  தந்தையின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா எவ்வித சர்ச்சைகளும் இல்லாமல், அனைத்து தரப்பினரின் வரவேற்போடும் நடக்க வேண்டும் என யோசித்துத்தான் ஆளுநரின் இன்றைய தேநீர் விருந்தில் கலந்துகொள்ள முடிவு செய்தார் முதல்வர் ஸ்டாலின்" என்கிறார்கள்.

முன்னதாக தமிழக அரசு ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வது ஏன் என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

அரசின் சார்பில், மாண்புமிகு ஆளுநர் அவர்களுடைய அழைப்பினை ஏற்று அந்த விருந்தில் நாங்கள் கலந்து கொள்வதாக முடிவு செய்திருக்கிறோம். அந்த விருந்தில் பங்கேற்கிறோம். ஆளுநரின் நிலைப்பாடுகள் குறித்து அதற்கான விளக்கங்கள் அவ்வப்போது அமைச்சர்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கருத்துக்கள் என்பது வேறு; அரசினுடைய நிலைப்பாடு என்பது வேறு.

ஆளுநருடைய கருத்தியல் சார்ந்திருக்கக்கூடிய விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது. ஆனால்ஆளுநர் என்கின்ற அந்த பதவியின் மீது, அந்தப் பொறுப்பின் மீது முதலமைச்சர் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசினுடைய நிலைப்பாடு என்னவென்றால், அவருடைய பதவிக்கு, பொறுப்பிற்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் ஆளுநர் கொடுத்திருக்கின்ற இந்த அழைப்பினை ஏற்று இந்த விடுதலைத் திருநாள் விழாவில் அவர் அழைத்திருக்கக்கூடிய தேநீர் விருந்தில் நம்முடைய அமைச்சர் பெருமக்கள் அதில் பங்கேற்கிறார்கள்.

மாண்புமிகு ஆளுநர் பதவி என்பது ஒரு Institution.அந்த Institution-க்கு உரிய மரியாதையை நம்முடைய முதலமைச்சர் எப்போதும் அளிக்கிறார். அவர் ஒருபோதும் அளிக்க தவறியதில்லை. எனவே, அந்த கோட்பாடுகளின் அடிப்படையில், ஆளுநர் அழைப்பினை நாங்கள் ஏற்று அதில் கலந்து கொள்கிறோம்என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.திமுகவின்  அதன் கூட்டணி கட்சிகளாக விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆளுநர் மாளிகை சென்று தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

 தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அக்கட்சியைச் சேர்ந்த எல்.கே.சுதீஷ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியைச் சேர்ந்த கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக .பன்னீர் செல்வம், ஆர்.வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தொழிலதிபர்கள், ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் உயர் அதிகாரிகள் என பல தரப்பினருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களும் குடும்பத்துடன் தேநீரில் விருந்தில் கலந்து கொண்டனர்.

ரமணி

No comments: